கணவர் தன்னை விவாகரத்து செய்துவிடுவார் என்ற அச்சத்தில் பெண் ஒருவர் தனது கணவரின் பெண் தோழியை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார்.
புனே விமான நிலையத்தில் பணியாற்றி வந்தவர் வர்ஷா(23). இவர் தனது இரண்டரை வயது மகளுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு தீபாவளியை கொண்டாட சென்றார்.
அங்கு அவர் தனது ஆண் நண்பரான தொழிலதிபர் நிலேஷ் அகர்வால் என்பவருடன் வெளியில் சென்றார். அவர்கள் இருவரும் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் இருக்கும் கோண்டியா வனப்பகுதிக்கு சென்றனர்.
இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்தனர். அவர்கள் வனப்பகுதியில் கோயில் ஒன்றின் அருகே இருந்தபோது முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் வர்ஷாவை கத்தியால் பல முறை குத்திக்கொலை செய்தனர்.
இக்கொலை குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் உள்ளூர் கிரிமினல் இம்ரான் ஷேக் என்பவனது முகம் தென்பட்டது.
கொலை நடந்த இடம்
உடனே அவனை பிடித்து விசாரித்தபோது இக்கொலையை திட்டமிட்டது நிலேஷ் அகர்வால் மனைவி மோனா என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மோனாவை பிடித்து விசாரித்தபோது, மோனாவிற்கு அவரது கணவர் நிலேஷ் வர்ஷாவுடன் தொடர்பு வைத்திருந்தது பிடிக்கவில்லை.
இந்த தொடர்பு காரணமாக தன்னை கணவர் விவாகரத்து செய்துவிடுவாரோ என்று மோனா அச்சம் அடைந்தார்.
இதையடுத்து வர்ஷாவை கொலை செய்ய மோனா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் குனால் என்பவரை தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார்.
இதில் 13 லட்சம் கொடுத்து வர்ஷாவை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. குனால் தனக்கு தெரிந்த உள்ளூர் கிரிமினல் ஷாருக் பதான் என்பவனை தொடர்பு கொண்டு இக்கொலைக்கான ஒப்பந்தத்தை கொடுத்தார்.
அதன் அடிப்படையில் ஷாருக் தனக்கு தெரிந்த இம்ரான் ஷேக், நெய்லான் ஷேக், கிரிஷ் ராவுத் ஆகியோரிடம் இப்பணியை ஒப்படைத்தார். நிலேஷ் பயன்படுத்திய கார் மோனா பெயரில் வாங்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த காரில் ஜி.பி.எஸ் பொருத்தி அதன் செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கினர்.
காரின் நடமாட்டத்தை பின் தொடர்ந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் கார் நின்றதும் வர்ஷாவை மூன்று பேரும் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மோனா, ஷாருக், குனால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!