;போக்சோ வழக்கில் சிறையில் இருக்கும் ஜெம் வீரமணிக்கு எதிராக, அவருடன் நீண்டகாலம் பணியாற்றிய சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் தெரிவித்த தகவல்கள் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
வீரமணிக்கு எதிரான ஆதாரங்கள் மட்டுமன்றி, அவரை வழக்கிலிருந்து காப்பாற்ற நடந்ததாகக் கூறப்படும் முயற்சிகள், பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கின்றனர்.
மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த எஸ்.ஐ.டி., வழக்கில் தொடர்புடையவர்கள், வீரமணியைக் காப்பாற்ற நடந்ததாகக் கூறப்படும் முயற்சிகள், பணம் கைமாறியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
“வீரமணியை மட்டும் விட்டுடாதீங்க!”
இது குறித்து எஸ்.ஐ.டி போலீஸாரிடம் பேசிய போது, “சிறையிலேயே வைத்து வீரமணியிடம் விசாரணை நடத்தினோம். அடிக்கடி ரெஸ்ட் வேண்டும் என்று கேட்டார்.
ஒருகட்டத்தில், ‘இந்த வயசுல என்னால் சிறையிலிருக்க முடியலை... உடம்பு ஒத்துழைக்கலை... என்னை விட்டுடுங்க’ என்று கூறினார்.
சிறுமிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, ‘என்னிடம் எதையும் கேட்காதீங்க’ என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரையும் மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். வீரமணியுடனான அவர்களின் தொடர்பு, அவரது நடவடிக்கைகள், சிறுமிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து சாந்தியிடம் விசாரித்தோம்.
அப்போது, ‘வீரமணியிடம் நானும் என் கணவரும் நீண்டகாலம் வேலை பார்த்தோம். தேனாம்பேட்டையில் வீரமணி வாடகைக்கு பங்களா எடுத்துக்கொடுத்தார்.
அதற்கான வாடகையைத் தராமல் இழுத்தடித்ததி லிருந்துதான் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. வீரமணியின் குடும்பத்தினரும் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள்.
அதன் பிறகு எங்களுக்குப் பல்வேறு மிரட்டல்கள் வந்தன’ என்ற சாந்தி, ‘நான் ஜெயிலுக்குள்ளேயே இருக்கேன். ஆனா, வீரமணியை மட்டும் விட்டுடாதீங்க. எப்படியும் இந்த வழக்கிலிருந்து அவர் தப்பிக்க முயற்சி செய்வார்.. அவருக்குப் பெரிய நெட்வொர்க் இருக்கிறது’ என்றும் பதறியிருக்கிறார்.
மகேந்திர சிம்கனிடம் பேசியபோது, ‘வீரமணிக்கும் சாந்திக்கும் இடையிலான தொடர்பை ஆரம்பத்தில் சாதாரணமாகவே பார்த்தேன். ஆனால், வீரமணி அடிக்கடி வீட்டுக்குச் சிறுமிகளுடன் வருவது எனக்குப் பிடிக்கவில்லை.
நான் சொன்னதை சாந்தி கேட்டிருந்தால் இந்த நிலைமை எங்களுக்கு வந்திருக்காது’ என்றார். சாந்தியும் மகேந்திர சிம்கனும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தனர்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களை அடிப்படையாகவைத்து அடுத்தகட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றனர்.
ரூ.40 கோடி பணப் பரிவர்த்தனை?
இன்னும் சில போலீஸ் அதிகாரிகளிடம் பேசியபோது, “இந்த வழக்கில் வீரமணியைக் கைதுசெய்யாமலிருக்க குறிப்பிட்ட தொகை கைமாறியிருக்கிறது.
ஈஞ்சம்பாக்கத்திலுள்ள ஒரு இடத்தை வீரமணி விற்றதாகவும், அந்தப் பணம் எங்கு சென்றது என்பதையும் வங்கிக் கணக்குகள் மூலம் ஆய்வுசெய்தோம்.
அப்போது வீரமணி தரப்பிலிருந்து சுமார் ரூ.40 கோடி அண்ணாநகரைச் சேர்ந்த பில்டர் ஒருவரின் வங்கிக் கணக்குக்குச் சென்றிருப்பது தெரியவந்தது.
அந்த பில்டரின் கணக்குகளை ஆய்வுசெய்தபோது, வீரமணியை வழக்கிலிருந்து காப்பாற்றியதாகக் கூறப்படும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையிலான டீமுக்கு பணம் சென்றதற்கான தகவல்கள் கிடைத்தன.
இது தொடர்பாக பில்டரிடம் விசாரணை நடத்தியபோது, வருமான வரி, ஜி.எஸ்.டி உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து, ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்றார்.
‘நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை. வீரமணி தரப்பிலிருந்து இவ்வளவு பெரிய தொகை ஏன் வந்தது?’ என்று கேட்டபோது, ‘ஆடிட்டரிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன்’ என்று கூறினார்.
அந்த பில்டர் மூலம்தான் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மட்டும் சில கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பணத்தைவைத்து ஈ.சி.ஆரில் பங்களா கட்டியிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பே..
வீரமணியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாக மாணவி தரப்பினர் எஸ்.ஐ.டி-யிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தபோதும், வீரமணியின் செல்வாக்கு காரணமாக அப்போது போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
இது தொடர்பாகவும் எஸ்.ஐ.டி விசாரணை நடத்திவருகிறது.
இதற்கிடையே, வீரமணி தரப்பு அரசியல் செல்வாக்குள்ளவர்களை அணுகி உதவி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.ஐ.டி-யில் ஐ.ஜி தேன்மொழி தலைமையிலான போலீஸ் டீம் விசாரணை நடத்திவருவதால், அரசியல் தலையீடு ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!