news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 சந்தேக நபர்களை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் பிறப்பிப்பு

14 Aug, 2026
இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் 93 சந்தேக நபர்களைக் கைது செய்து மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, இன்டர்போல் மூலம் 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்குவதற்காக இன்று வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

2024, 2025 மற்றும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் மூலம் 38 சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பொலிஸ் மா அதிபரின்  நேரடித் தலையீட்டின் மூலம் மேலும் 35 பிரபல மற்றும் மோசமான குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக சேர்த்ததாகக் கூறப்படும் வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உட்பட பெருமளவிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான சிறப்புத் திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது.

2024இல் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான முதற்கட்டமாக, 1.49 பில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

2025இல் 1.549 பில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் இதுவரை சட்டவிரோதமாக பெறப்பட்ட 839 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!