நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (29) சம்பவித்த வீதி விபத்துகளில் சிக்கி 15 வயதுடைய சிறுவன் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதோக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிபத்கொடை சப்புகஸ்கந்த - பியகம வீதியில் சப்புகஸ்கந்த நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் இடதுபக்கமாக பயணித்துக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீது மோதுண்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இரு சிறுவர்களும் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதுடைய கோனவல பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய சிறுவனும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்துக்குக் காரணமான கெப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகொட உயன பகுதியில், காலி – கொழும்பு பிரதான வீதியில் காலி நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்தொன்று வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது மோதியதில், படுகாயமடைந்த குறித்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 50 வயதுடைய எகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை தம்பலகாமம், திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் கந்தளாய் நோக்கிப் பயணித்த லொறியொன்று எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறி சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!