news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வேட்டையாடச் சென்றவர் பாறை சரிந்து உயிரிழப்பு

02 Nov, 2026
கொஸ்லந்த, தியஹிதிதென்ன வனப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிற்குள் விலங்கு ஒன்றினை வேட்டையாடுவதற்காகச் சென்ற 30 வயதுடைய நபர் ஒருவர், குகைக்குள் உயிரிழந்த நிலையில் இன்று (1) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்லந்த, தியஹிதிதென்ன - உவமாவெலகம பகுதியைச் சேர்ந்த ஆர். ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தினக்கூலித் தொழிலாளியான இவர் நேற்று (31) மதிய வேளையில் அருகில் வசிக்கும் 17 வயது இளைஞர் ஒருவருடன் இணைந்து விலங்கை வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குகைக்குள் இருந்த பாறைகளை அகற்ற முயன்றபோது, திடீரெனப் பெரிய பாறை ஒன்று கழன்று அவர் மீது சரிந்து விழுந்ததில் அவர் இடிபட்டு உயிரிழந்துள்ளார்.

இதன்போது குகைக்கு வெளியே பாதிக்கப்பட்டவரின் கால்கள் மட்டுமே சுமார் இரண்டு அடி அளவுக்குத் வெளியில் தெரிந்த நிலையில், உடலின் ஏனைய பகுதிகள் குகைக்குள் சிக்கியிருந்தன.

சம்பவம் குறித்துக் கிடைத்த தகவலை அடுத்து, கொஸ்லந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குகையிலிருந்து உடலை மீட்டுள்ளனர். அத்துடன் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த சமயத்தில் உயிரிழந்தவரின் மனைவி ரத்தினபுரி பகுதியில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஊவா மாகாணம் மற்றும் பதுளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் கீழ் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!