news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது; 13 வரை விளக்கமறியல்

08 Oct, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று (07) புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 

கிருலப்பனை பூர்வாராம பகுதியிலுள்ள இல்லமொன்றில் காலை சுமார் 9.56 மணியளவில் கைதான அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஷிரந்தி ராஜபக்‌ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) ஒன்றை கொள்வனவு செய்வதற்காக பெறப்பட்டதாகக் கூறப்படும் 10 மில்லியன் ரூபா நிதி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றது. 

சிரிலிய சவிய அமைப்பின் ஊடாக குறித்த சி.டி. ஸ்கேனரை வைத்தியசாலைக்கு வழங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எனினும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு குறித்த சி.டி. ஸ்கேனர் வழங்கப்படவில்லை எனவும், இவ்விடயத்தில் அரச நிதி நேர்மையற்ற முறையில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. 

ஊழல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றங்களில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான ஷிராந்தி ராஜபக்ஷவை தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை, இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் கோரினர்.இதன்போது ஷிராந்தி ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி, முன்வைத்த பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

ஷிராந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், கடந்த 05 ஆம் திகதி நாடு திரும்பியிருந்ததுடன், சிரிலிய சவிய அமைப்பின் கொடுக்கல், வாங்கல் தொடர்பிலான விசாரணைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று காலை ஷிரந்தி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைதாயிருந்த போதிலும்,தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.இன்று (07) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் ஆகியோர் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, இந்த வழக்கில் பிரதீப் காமினி சுராஜ் காரியவசம் முதலாவது சந்தேகநபராகவும், ஷிரந்தி ராஜபக்ஷ இரண்டாவது சந்தேக நபராகவும் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.இது தொடர்பில் ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜராகிய உதவிப் பணிப்பாளர் சட்டத்தரணி யஸ்மதா லொகுநாராகொட தெரிவிக்கையில்:

2015ஆம் ஆண்டு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலாவது சந்தேக நபர் அப்போது தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகப் பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.

சிரிலிய சவிய கணக்குடன் தொடர்புடையதாக கொழும்பு 10, சுதுவெல்ல மக்கள் வங்கிக் கிளையில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டதாகவும், அந்தப் பணம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தச் செயற்பாட்டின் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் ‘ஊழல்’ இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட அழுத்தத்தின் அடிப்படையிலேயே இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.
இரண்டாவது சந்தேகநபரான ஷிரந்தி ராஜபக்ஷ, முதலாவது சந்தேக நபருக்கு உதவி செய்து சிரிலிய சவிய கணக்கிற்கு பணத்தைப் பெற்றுக்கொள்ள ஆதரவு வழங்கியதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!