Site icon ilakkiyainfo

துருக்கியில் நிலக்கரிச் சுரங்கத்தில் பாரிய வெடிப்பு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 230 ஆக உயர்வு

மேற்கு துருக்கியில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் இடம்பெற்ற வெடிப்பில் குறைந்தது 230 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

மனிஸா மாகாணத்தில் சோமா நகரிலுள்ள மேற்படி சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மின் ஒழுக்கு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது 787 பேர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்ததாக அந்நாட்டு சக்தி வள அமைச்சர் டானர்யில்டிஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் சுரங்கத்தின்  அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளதாகவும் இந்த  சம்பவத்தில் எவரும் உயிர்தப்பியிருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.
தலைநகர் அங்காராவின் மேற்கே சுமார் 450 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த தனியாருக்கு சொந்தமான சுரங்கத்தின் அருகே சுரங்கத் தொழிலாளர்களின் உறவினர்கள் கவலையுடன் கூடியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிப்பு சம்பவத்தில் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி வெடிப்புச் சம்பவத்தையடுத்து சுரங்கத்தில் பணியாற்ற பலர் காபனோரொட்சைட் வாயுவால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சுரங்கத்துக்குள் எவராவது உயிருடன் சிக்கியிருப்பின் அவர்களுக்கு உதவும் முகமாக அந்த சுரங்கத்துக்குள் ஒட்சிசன் வாயு உட்செலுத்தப்பட்டு வருகின்றது.
மின்சார ஒழுக்கு காரணமாக மின் துண்டிக்கப்பட்டதால் சுரங்கத்திலுள்ள மின்னுயர்த்தி உபகரணங்களை பயன்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி தொழிலாளர்கள் சுரங்க நுழைவாயிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் மேற்பரப்பிலிருந்து 2 கிலோமீற்றர் ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சுரங்க விபத்து தொடர்பாக பிரதமர் றிசெப் தாயிற் எர்டோகன் அல்பேனியாவுக்கான விஜயத்தை இரத்து செய்து சுரங்க வெடிப்பு இடம்பெற்ற சோமா நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு செயற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு வந்த மேற்படி சோமா கோமுர் இஸ்லெட்மெலேரி சுரங்கத்தில் இடம்பெற்ற அனர்த்தம் குறித்து விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
1992 ஆம் ஆண்டு துருக்கியின் கருங்கடல் பிராந்திய நகரான லொங்குல்டக்கிற்கு அண்மையில் இடம்பெற்ற சுரங்க அனர்த்தத்தில் 270 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியிருந்தனர்.

Exit mobile version