ilakkiyainfo

நாம் எப்போது ஈழம் கேட்டோம்? மஹிந்தவிடம் சுமந்திரன் கேட்கிறார்..! (வீடியோ)

வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை அதனால் மாகாண சபை உறுப்பினர்கள் தமது அதிகார வரம்புக்குள் நின்று தீர்மானங்களை கொண்டுவர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (21) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அது தொடர்பான விசாரணைகள் நடைபெறும் வேளையில் இங்கே இனப்பிரச்சினை நடைபெற்றது என திரும்ப திரும்ப கூறினால் அது அந்த விசாரணையை பாதிக்கும்.

எனவே இக் காலப்பகுதியில் விசாரணையை குழப்பும் முகமாக தீர்மானம் எடுத்து அதன் பெறுமதியை குறைத்து அந்த விசாரணையை மலினப்படுத்த கூடாது. தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் ஆக்குவேன் என ஜனாதிபதி கூறுகின்றார்.

நாம் எப்போது தமிழீழம் கேட்டோம்? நாம் தமிழீழம் கேட்கவில்லையே கடந்த வட மாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.

அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட சில விடயங்கள் தொடர்பில் சிலர் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். அதன் போது நாம்நீதிமன்றத்திற்கு சத்திய கடதாசியும் எழுதி கொடுத்து விட்டோம்.

இது இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் பேச்சு இது ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயலை காட்டுகின்றது. இதனை நம்பி தென்னிலங்கை மக்கள் பலியாகக் கூடாது.

கடந்த வாரம் கிளிநொச்சியில் ஜனாதிபதியால் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட தங்கம் களவாடப்பட்ட தங்கம். அதில் சிறுபகுதியே கையளிக்கப்பட்டது. மிகுதி தங்கம் எங்கே?

அதேவேளை கையளிக்கப்பட்ட தங்கம் கடந்த ஐந்தரை வருடங்களாக எங்கே இருந்தது? ஜனாதிபதி அவற்றை அடகு வைத்து இருந்தாரா? இல்லை அவர் மனைவி அணிய கொடுத்திருந்தாரா? என்பது எமக்கு தெரிய வேண்டும்.

ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற அரசியலமைப்பு சட்டம் இருக்கின்ற பக்கத்தை ஜனாதிபதி கழட்டி வைப்பார் எனின் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் இதனை ஜனாதிபதிக்கு ஒரு சவாலாக விடுகிறேன்.

அரசியலமைப்பில் ஆளுநருக்கு வழங்கப்பட அதிகாரத்தை விட பத்து மடங்கு அதிகமான அதிகாரத்தை வட மாகாண சபை ஆளுநர் பயன்படுத்துகின்றார். வட மாகாணத்தில்  முதலமைச்சர்  நிதியம் உருவாக்க முடியாது என்கிறார். ஆனால் மேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் முதலமைச்சர் நிதியம் இருக்கின்றது.

வட மாகாண சபை தேர்தல் பிரச்சார காலத்தில் ஆளுநர் நேரடியாக பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று இருந்தார். அவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டாரோ அந்த கட்சியை மக்கள் தேர்தலின் போது படுதோல்வி அடைய செய்தனர்.

எனவே தான் நாம் வடக்கில் தற்போது உள்ள ஆளுநரை மாற்ற கோருகின்றோம்´. – என சுமந்திரன் தெரிவித்தார்.

இனப்படுகொலை இல்லை என்று சொல்வார்களாயின் ஆயுதப்போராட்டம்தான்?? – சிவாஜிலிங்கம்

sivajilinkamஇனப்படுகொலை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மறுத்தால் பதவியை திறப்பது குறித்து தீவிரமாக சிந்தித்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 18வது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரேரணை வடமாகாண அவைத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இனப்படுகொலை என்ற பிரேரணையினை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென்று அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இப்பிரேரணைக்கான அனுமதியினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன், கலந்துரையாடுமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் அமர்வுக்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் குழு கூட்டத்தில் இதைப்பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும்.

அல்லாவிடின், வடமாகாண சபையின் அமர்வு நிகழ்ச்சி நிரலில் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது, இந்த தீர்மானத்தினை நிறைவேற்ற முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருடன் தொடர்பு கொள்ளுமாறு கூறுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனப்படுகொலை என்ற விடயத்தினை மறைக்க முயற்சிக்கின்றனர்.

இனப்படுகொலை என்பதனை நிருபிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. 31 ஆம் திகதி வரை ஜ.நா மனித உரிமைகள் விசாரணை அறிக்கையினை சாட்சியங்களை பெறும் நடவடிக்கையாக இருக்கின்றது. அந்த விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகையில் மக்களிடம் பல்வேறுபட்ட சாட்சியங்களை பெறுவதில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த சூழ்நிலையில், வடமாகாண சபை இனப்படுகொலை என்பதனை சொல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றதா என கேள்வி எழுப்பப்படுகின்றது.

மே மாத்தில் இருந்து இனப்படுகொலை என்று சொல்லி தீர்மானங்களை நிறைவேற்றும் போது, பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வந்தது.

இனப்படுகொலை என்பதனை வலியுறுத்துவதற்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தடையாக இருந்து வருகின்றார்கள்.

இனப்படுகொலை  என்ற பிரேரணையினை வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை தீர்மானிப்பதற்கு  வடமாகாண சபையில் தடை என்றால், இனப்படுகொலையா இல்லையா என்பதனை பொது மக்கள் தீர்மானிக்கட்டும். இனப்பிரச்சினை தீர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன தில்லு முள்ளு செய்யப்போகின்றது என்ற அச்சம் பொது மக்களுக்கு இருக்கின்றது.

இதில் ஒளிவு மறைவு கிடையாது, 1 லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் ஏனையவர்களின் போராட்டங்களையும், உயிரிழப்புக்களையும் கொச்சப்படுத்தும் நிலமை தொடர்ந்து வருகின்றது.

இவ்வாறான வடமாகாண சபையில் இருப்பது பிரியோசனமில்லை என்றால், ஆயுதப் போராட்டத்தின் விளைவு தான், இன்று உங்களை வடமாகாண சபையில் இருத்தியிருக்கின்றது. இதை மறந்துவிடாமல்,  எம்மை போராட்டத்திற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்´ என்றார்.

அதேவேளை, வடமாகாண சபையில் உறுப்பினர்களினால் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதை நிறைவேற்றாமல், தீர்மானம் நிறைவேற்ற முடியாது என கூறுவது அடிப்படை மனித உரிமை மீறல் என்றார்.

பிரேரிக்க வேண்டாமென்று, கூறுவதை விட்டு, சர்வாதிகார போக்கில் நடப்பது மட்டுமன்றி, சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version