ilakkiyainfo

முதலாவது பெண்புலி பலி !! : சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்கள் மீது டாங்கிகளை ஏற்றிச் சென்ற இந்திய படையினர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 109)

• யாழ்ப்பாணம் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல்  முதலாவது பெண்புலி

• மீட்கப்பட்ட கொமாண்டோக்களும் மிதிக்கப்பட்ட மனித உடல்களும்

• போரில் பலியான புலிகளின் தளபதி

• ஷெல் மழை

யாழ் பிரம்படி வீதிக்குள் பரா கொமாண்டோக்கள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த போது, யாழ் கோட்டையில் இருந்த இந்தியப் படையினர்  ஷெல் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.

நல்லூர் கைலாசப்பிள்ளையார் கோவில் முன்பாக ஷெல் ஒன்று விழுந்து வெடித்தது. அவ்விடத்தில் நின்ற பதின்மூன்று பேர் பலியானார்கள்.

யாழ் கோட்டையிலிருந்து யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னர் இலங்கை இராணுவத்தினர்  ஷெல் தாக்குதல்களை நடத்தினர்.

1987 அக்டோபர் 10ம் திகதிக்குப் பின்னர் இந்திய இராணுவத்தினர்  ஷெல் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.

குடிமனைகள்  மீது இலங்கைப்படையினர்  தாக்குதல்கள் நடத்துவதை இந்திய அரசு பலமுறை கண்டித்திருந்தது.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் அப்பாவிக் குடிமக்கள் பலியாவது தொடர்பான கவலையை இந்திய மத்திய அரசு முன்னர் வெளிப்படுத்தி வந்தது.

அதே இந்திய அரசின் இராணுத்தினர் அதே குடிமக்கள் மீதும், குடிமனைகள் நோக்கியும் ஷெல் தாக்குதல்களை சரமாரியாகத் தொடுத்துக் கொண்டிந்தனர்.

யாழ் கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, பலாலி இராணுவத் தளத்தில் இருந்து பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.

அந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘ஒப்பரேஷன் பவான்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதுதான் ‘ஒப்பரேஷன் பவான்’ நடவடிக்கையின் இலக்கு.

அதேநேரம் பிரம்படி முற்றுகைக்குள் சிக்கிய பரா கொமாண்டோக்களை மீட்டெடுக்கவும் அதிரடியான திட்டம் ஒன்று தீட்டப்பட்டது.

பலாலி இராணுவத் தளத்தில் இருந்தும், யாழ் கோட்டை இராணுவ முகாமில் இருந்தும் இந்தியப் படையினரை முன்னேறவிடாது புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

புலிகளின் எதிர்ப்பை முறியடித்து மெதுவாகத்தான் முன்னேறவேண்டியிருந்தது.

அவ்வாறான நகர்வு மூலமாக கொக்குவில் பகுதியை சென்றடைய வேண்டுமானால் சில நாட்கள் செல்லலாம். அதற்குள் பரா கொமாண்டோக்களின் கதை முடிந்துவிடும்.

எனவே பிரதான முனைகளால்  முன்னேறும்  முயற்சிகளை செய்து புலிகளின் அணிகளை அங்கே இழுத்து சண்டையிட்டபடியே , புலிகள் எதிர்பாராத வழியால் பிரம்படி வீதிக்குச் செல்லத் திட்டம் வகுக்கப்பட்டது.

soldiers_military_combat_field_dress_uniforms_india_indian_army_001டாங்கிகள் வருகை

அக்டோபர் 13ம் திகதி அதிகாலை ஹெலிகொப்டர்கள் வானில் தோன்றி துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருக்க, காங்கேசன்துறையில் இருந்து இரண்டு டாங்கிகள் புறப்பட்டன.

பிரம்படி வீதி ரயில் பாதையை ஒட்டியமாக இருந்தமையால் புத்திசாலித்தனமான ஒரு பாதையைத் தெரிவு செய்தனர் இந்தியப் படையினர்.

காங்கேசன்துறையில் இருந்து பிரம்படி வீதிவரையான ரயில் தண்டவாளத்தை ஒட்டியதாக டாங்கிகளை ஓட்டிச் செல்வது என்பதுதான் திட்டம்.

அப்படிச் செல்வதால் கண்ணிவெடிகளிலும் மாட்டிக்கொள்ள வேண்டி ஏற்படாது. புலிகளும் அவ்வழியாக டாங்கிகள் வரும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள்.

இந்தியப் படையினர் போட்ட திட்டம் வெற்றியளித்தது. இந்தியப் படையினரின் இரண்டு டாங்கிகள் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பாதை வழியாக முன்னேறி பிரம்படி ஒழுங்கை வரை வந்து சேர்ந்தன.

பிரம்படியில் இருந்த  பரா கொமாண்டோக்களுக்கும் டாங்கிகள் முன்னேறிவரும் செய்தி சங்கேத மொழியில் அறிவிக்கப்பட்டது.

பரா கொமாண்டோக்கள் பிரம்படி வீதியையும் ரயில் பாதையையும் இணைக்கும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

புலிகள் ஆங்காங்கே பதுங்கி இருந்து தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்த போதும், டாங்கிகள் திடீரென்று வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

இரண்டு டாங்கிகளில்  ஒன்றை செலுத்தி வந்தவர் மேஜர் அணில் கவுல். முன்னால் வந்தது அவர் ஓட்டிவந்த டாங்கிதான்.

பிரம்படி வீதியை நோக்கி டாங்கியைத் திருப்பிய அணில் கவுல் அந்த இடத்தின் தரை அமைப்பை பார்வையிட தனது தலையை வெளியே நீட்டினார்.

ஒரு மறைவின் பின்னால் பதுங்கியிருந்து டாங்கியை கவனித்துக் கொண்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் அணில் கவுலின் தலையை குறிவைத்துச் சுட்டார்.

சூடுபட்டதும் அணில் கவுல் தலையை உள்ளே இழுத்துக் கொண்டார். அவது கண்ணுக்கு அருகே தோட்டா உராய்ந்து கொண்டு சென்று காயம் ஏற்படுத்தியிருந்தது.

டாங்கிகள் வந்து சேர்ந்ததும் அவற்றைச் சுற்றி பாதுகாப்பு அரணாக பரா கொமாண்டோக்கள் சூழ்ந்துகொண்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கினார்கள்.

ஊருக்குள் வேட்டை

டாங்கிகளில் பரா கொமாண்டோக்கள் ஏறிக் கொண்டிருந்தபோது, ஒரு கெமாண்டோ தீப்பந்தம் ஒன்றைக் கொளுத்தி அருகில் உள்ள வீடொன்றுக்குள் எறிந்தான்.

அந்த வீட்டுக்குள்  தாயும் மகளும் இருந்தனர். மகளது  கணவர் பரா கொமாண்டோக்களின் துப்பாக்கிப் பிரயோகத்தால் பலியாகி இருந்தார்.

அவரது உடல்  அருகே இருந்து அழுது கொண்டிருந்த    மனைவி தீப்பந்தம் வந்து விழுவதைக் கண்டுவிட்டார். அவர்களது வீடு ஓலையால் வேயப்பட்டிருந்தது.

தீப்பந்தத்தை அணைத்துவிட்டு தாயும் மகளும் வீட்டைவிட்டு பின்வழியால் ஓடித் தப்பினார்கள்.

தீப்பந்தம் வீசியும் கூட வீடு எரியவில்லை என்பதால், எங்கோ மண்ணெண்ணெய் எடுத்துவந்த பரா கொமாண்டோ வீரன் அந்தக் குடிசை மீது ஊற்றிக் கொளுத்திவிட்டான்.

உள்ளே கிடற்த பிணத்துடன் குடிசை பற்றி எரிந்தது.

மற்றொரு கொமாண்டோ வீரன் தம்மிடம் பணயக்கைதிகளாக இருந்த ஊரவர்கள் சிலரை ஒன்றாகச் சேர்த்து கயிற்றால் கட்ட ஆரம்பித்தான்.

அப்படிக்கட்டிவிட்டு டாங்கிகளின் சக்கரங்களால் ஏற்றிக் கொன்றுவிடலாம்.

அவனது செயலை பரா கொமாண்டோ அதிகாரி ஒருவர் கண்டுவிட்டார். கைதிகளை டாங்கிக்குள் ஏறுமாறு சொல்லிவிட்டு, அவனது முயற்சயை தடுத்ததால் அப்பாவிகள் ஆறு பேர் உயிர்தப்பினார்கள்.

கிட்டத்தட்ட  அரை மணி நேரத்துக்குள் பரா கொமாண்டோக்களை ஏற்றிக் கொண்டு டாங்கிகள் இரண்டும் வந்த பாதை வழியாக திரும்பிச் சென்றன.
(Indian Army troops at a bunker in one of the deployed area’s in Jaffna. The photograph pre-dates October 17,1987 and thus was taken before the outbreak of the fighting)

103 பரா கொமாண்டோக்களில் எட்டுப் பேர் பலியாகி இருந்தனர். ஆறு பேர் காயம் அடைந்திருந்தனர்.

பிரபாகரனை பிடிக்கத் தீட்டப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது.  ஆனால் அதற்காகக் கொடுக்கப்பட்ட விலை மிக மிக அதிகம்.

சீக்கிய காலாட்படையினர் 29 பேரும், பரா கொமாண்டோக்கள் எட்டுப்பேரும் 37 படையினரை இந்தியா இழந்திருந்தது.

டாங்கிகள் பிரம்படி  ஒழுங்கைக்குள் வந்து  திரும்பிய பாதைகளில் கண்ட காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்திருந்தன.

டாங்கிகளின் சக்கரங்களால் உடல்கள் நசிக்கப்பட்டிருந்தன. அந்த உடல்கள் மீது ஏறித்தான் டாங்கிகள் சென்றிருக்கின்றன என்பது தெரிந்தது.

வீதிகளுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பொது மக்களின் உடல்கள் எப்படி வீதிக்கு வந்தன? தூக்கிக்கொண்டுவந்து டாங்கிகள் முன்பாக போடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

நசிந்து உருத்தெரியாமல் சிதைந்து கிடந்த பிணங்கள் ஒன்றாக ஒரு இடத்தில் குவித்து வைத்தனர் ஊர்மக்கள்.

கிட்டத்தட்ட 40 உடல்கள் அவ்வாறு குவிக்கப்பட்டன. அனைவருமே ஏதுமறியா அப்பாவிக் குடிமக்கள்.

கண்டவர் அதிர்ந்தனர்.

அக்காட்சியைக் கண்ட பத்திரிகையாளர்கள் நம்ப முடியாமல் திகைத்துப் போயினர். இவற்றை நேரில் கண்ட தமிழ்ப்பத்திரிகையாளர் ஒருவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

“இந்தியப் படை இப்படி நடந்து கொள்ளும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பயந்து ஓடியவர்கள் எல்லாம் அவர்களுக்கு எதிரிகளாகத் தெரிந்திருக்கிறார்கள்.

ஆண், பெண், வயோதிபர், குழந்தைகள் என்ற பேதமே பாராமல் காந்தி பிறந்த நாட்டின் படைகள் சுட்டுத் தள்ளியிருக்கின்றன. அப்படியானால் இந்தியப் படையினர் எதற்காக இங்கே வந்தார்கள்?

இலங்கைப் படையினரை தடுத்து நிறுத்திவிட்டு தமிழ் மக்களைச் சுட்டுக் கொல்லத்தான் வந்தார்களா?

எதிரிப் படைகளைக்கூட டாங்கிகளால் நசித்துக் கொல்லுவதை நாகரிக உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. அப்பாவி மக்களின் சடலங்கள்மீது டாங்கிகள் பயணம் செய்திருக்கின்றன?

முதலாவது களத்திலேயே அமைதிப்படை தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டது.

இந்தியப் படை நம்மை எதுவும் செய்யாது என்ற நம்பிக்கையுடன் வீடுகளுக்குள் இருந்தவர்கள் வீதிகளில் பிணமாகக் கிடக்க காணப்பட்டனர்.
இலங்கைத் தமிழர்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தான் கண்டவற்றையும், உணர்ந்தவற்றையும் தனது பத்திரிகைக்கு எழுதிக் கொடுத்தார் அந்தப் பத்திரிகையாளர்.

ஆனால் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரோ அவர் எழுதிக் கொடுத்ததை பிரசுரிக்க மறுத்துவிட்டார்.

மறுத்தமைக்கு ஆசிரியர் சொன்ன காரணம்: “உமது செய்தியை வெளியிட்டால் நாளைக்குத்தான் எமது பத்திரிகை வெளியாகும் கடைசி நாளாக இருக்கும்!”

அப்பத்திரிகையாளர் எழுதியது பிரசுரமாகாமல் இருந்தாலும், அவரது கருத்தை உறுதிப்படுத்தும் விதமான சம்பவங்கள் விரைவாக நடந்தேறத் தொடங்கின.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இந்தியப் படை அணிகள் பலாலித் தளத்தில் இருந்து பலமுனைகளில் முன்னேறத் தொடங்கின.

விமானத் தாக்குதல்களும் ஆரம்பமாகின. மூன்று பிரிகேட் படைப்பிரிவுகள் நடவடிக்கையில் இறக்கப்பட்டன.

விமானக் குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்கள் மத்தியில் இந்தியப் படைகள் டாங்கிகள் சகிதமாக முன்னேறின.

வீதிகளில் கண்ணிவெடிகளைப் புலிகள் புதைத்துவைத்துவிட்டு காத்திருந்தனர். அதனை எதிர்பார்த்து இந்தியப் படை மாற்றுத்திட்டம் ஒன்றை வகுத்தது.

பரந்த வெளிகள், தோட்டக் காணிகள் ஊடாக டாங்கிகள் முன்னேறத் தொடங்கின.

முதலாவது பெண்புலி

யாழ்ப்பாணம் கோப்பாயில் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

கோப்பாயில் இந்தியப் படையினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதில் பெண் புலிகளும் களத்தில் இறங்கினார்கள்.

அம்மோதலில்தான் புலிகள் இயக்க பெண்கள் அணியில் முதலாவது பெண் புலி பலியானார்.

பலியான பெண் புலியின் பெயர் 2வது லெப்டினன்ட் மாலதி. (பேதுறு சகாயசீலி- ஆட்காட்டிவெளி மன்னார்)

மாலதி பலியான போர்க்களம் தொடர்பாக அவருடன் இணைந்து சண்டையிட்ட பெண்புலி ஒருவர் பின்வருமாறு நினைவு கூறுகிறார்.

இரவு ஏழு மணி.

தொலைத்தொடர்பு சாதனத்தில் அந்தச் செய்தி வந்தது.

சாவகச்சேரி புத்தூர் சந்தியில் இருந்து கைதடி நோக்கி இந்தியப் படையினர் வருகிறார்கள் என்றும், அவர்களை முன்னேற விடாமல் தடுக்குமாறும் உத்தரவு வந்தது.

மகளிர் அணியின் ஒரு பிரிவு கோப்பாய் கைதடி வெளியில்  கிறேசருக்கு அருகில் இருந்த காவலரணில் நின்று மோதலுக்குத் தயாரானது.
இரவு ஒரு மணியளவில் பெரிய சத்தத்துடன் வாகனமொன்று காவலரணை நோக்கி வந்தது.

இராணுவ வாகனங்களில் வராமல் லொறிகளில் வந்தனர் இந்தியப் படையினர்.

இந்தியப் படையினர் என்று தெரிந்ததும், பெண் புலிகளின் துப்பாக்கிகள் சீறத் தொடங்கின. இந்தியப் படையினரும் லொறிகளில் இருந்து கீழே குதித்து பாதுகாப்பான நிலை எடுத்தபடி தாக்குதலை ஆரம்பித்தனர்.

பரந்த வெளியான பகுதி என்பதால் நிலவு வெளிச்சத்தில் பெண் புலிகளை இனம் கண்டு தாக்குவது இந்தியப் படையினருக்கு வசதியாக இருந்தது.

முன்னணியில் நின்று சண்டை செய்து கொண்டிருந்த மாலதி முன்னோக்கி ஓடி நகர முற்பட்டபோது இரண்டு கால்களிலும் துப்பாக்கி ரவைகள் துளைத்தன.

விஜி என்னும் மற்றொரு பெண்புலி தரையோடு தரையாக மல்லாந்து நகர்ந்து மாலதியை இழுத்து வந்தார். மாலதியின் உயிர் பிரிந்திருந்தது.

சண்டை தொடர்ந்தது. இந்தியப் படையினரின் கை மோலோங்கியது.

முதல்நாள் சண்டை முடிந்து பார்த்தபோது எம்மில் நான்கு பேரைக் காணவில்லை.

மாலதி, சஞ்சி, கஸ்தூரி, கயா இந்த நால்வரில் மாலதி இறந்தது தெரியும்? மிகுதி மூன்று பேரின் கதி?

மறுநாள் மீண்டும் சண்டை. முன்னேறிச் சென்ற பெண் புலிகள் மாலதியின் உடல் தாம் வைத்திருந்த இடத்தில் பூவரசமரத்தின் கீழ் இருப்பதைக்கண்டு தூக்கிவந்தனர். என்று நினைவு கூர்ந்துள்ளார்.

மாலதியின் உடலை யாழ்ப்பாணம் குருநகரில் மக்களின் அஞ்சலிக்காகப் புலிகள் வைத்திருந்தனர்.

இதற்கிடையே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடமருகே பலியான சீக்கிய காலாட்படையினரின் உடல்களை ஏற்றி வந்து, யாழ் நகரில் ஆரிய குளம் சந்திக்கருகில் முன்பு பௌத்த விகாரை இருந்த பகுதியில் பார்வைக்கு வைத்திருந்தனர்.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் அந்த உடல்களைக் கையளிக்க புலிகள் முன்வந்தனர். அவற்றைப் பொறுப்பேற்க இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.

தளபதி பலி

யாழ் கோப்பாய் பகுதியில் இந்தியப் படையினருடன் நடைபெற்ற மோதலில் புலிகளின் படைணியொன்றுக்கு தலைமைதாங்கிச் சென்றவர் சந்தோசம்.

திருமலை மாவட்ட புலிகளின் தளபதியான சந்தோசம் தலைமையில் சென்ற அணியினர் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்துகொண்டிருந்தது. மோதலில் சந்தோசம் பலியானார். புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாக அது அமைந்தது.

லெப்டினன்ட் கேணல் சந்தோசம். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவராக இருந்தவர். சொந்தப் பெயர் உமைநேசன்.

திருமலையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் பலவற்றில் பங்குகொண்டவர் சந்தோசம்.

இராணுவ நடவடிக்கைளில் அனுபவம் வாய்ந்த தமது தளபதிகளில் ஒருவரைக் கோப்பாய் களத்தில் புலிகள் இழந்தனர்.

கோப்பாய் பகுதியைக் கைப்பற்றியதோடு, பலாலியில் இருந்து உரும்பிராய் நோக்கியும் இந்தியப் படையினர் முன்னேறினார்கள்.

உரும்பிராயில் ஆரம்பமானது மற்றொரு படுகளம்.

(தொடர்ந்துவரும்)
அரசியல் தொடர் எழுதுவது -அற்புதன்
தொகுப்பு:   கி.பாஸ்கரன்)

பரா கொமாண்டோக்களின் பாய்ச்சல்!! : படுகளமான யாழில் பிரபாகரன் முகாம் அமைந்திருந்து பிரம்படி வீதி!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 108)

Exit mobile version