ilakkiyainfo

நிர்வாண மோனாலிசா ஓவியம்? பிரான்சில் கிடைத்தது

கரியால் வரையப்பட்ட இந்த நிர்வாணப் பெண் ஓவியம், மோனலிசா ஓவியமாக இருக்கக்கூடும் என்கிறார்கள் பிரஞ்சு கலை வல்லுநர்கள்.

கடந்த 150 ஆண்டுகளாக ஒரு கலைத் தொகுப்பில் காணப்படும், ‘மொன்னா வண்ணா’ என அறியப்படும் இந்த ஓவியம் ஏற்கெனவே லியனார்டோ டா வின்சியின் ஸ்டுடியோவில் இருந்ததாகவே கூறப்படுகிறது.

தற்போது, டாவின்சியே இந்த இரண்டையும் வரைந்திருப்பார் என்று கூறுவதற்குப் போதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பாரிசில் உள்ள புகழ்பெற்ற லோவ்ரீ அருங்காட்சியகத்தில் இந்த ஓவியத்தை ஆய்வு செய்த அருங்காட்சிய காப்பாட்சியர்கள் குறைந்தபட்சம் இந்த ஓவியத்தின் ஒரு பகுதியையாவது டாவின்சி வரைந்திருப்பார் என்று நம்புகிறார்கள்.

வடக்கு பாரீசில் உள்ள சான்டில்லி அரண்மனையில் இயங்கும் கோண்டே அருங்காட்சியகத்தில் உள்ள மறுமலர்ச்சிக் கால ஓவியங்களின் தொகுப்பில் 1862 முதல் இந்த ஓவியம் இருந்தது.

இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தில் தோன்றிய முக்கிய ஓவியர் லியனார்டோ டாவின்சி (1452-1519). இவரது உலகப் புகழ் பெற்ற ஓவியமே மோனாலிசா.

துணி வியாபாரியான ஃப்ரான்செஸ்கோ டெல் ஜியோகோண்டோ மனைவி லிசா கெரார்டினியின் ஓவியமே இது என்று நம்பப்படுகிறது.

98067188_studyingnudemonalisaநிர்வாண மோனாலிசா என்று சந்தேகிக்கப்படும் ஓவியத்தை ஆராயும் வல்லுநர்கள்.

“இந்த ஓவியம் வெளுத்துப் போனதல்ல. தமது கடைசி காலத்தில் மோனாலிசாவோடு கூடவே டாவின்சி வரைந்த ஓவியங்கள் எவை என்பதை ஆராய்ந்து வருகிறோம்,” என்கிறார் காப்பாட்சியர் மத்தியூ டெல்டிக்யூ.

உயர்ந்த தரமுள்ள இந்த ஓவியம், 16ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தை, அதாவது டாவின்சயின் காலத்தை, சேர்ந்தது என லோவ்ரீ அருங்காட்சியகத்தின் பழம்பொருள் காப்பு வல்லுநர் மோட்டின் உறுதி செய்துள்ளார்.

ஒரே மாதிரி கைகள்

இதுவும் மோனாலிசா என்று கூற டெல்டிக்யூ அடுக்கும் காரணங்கள்: கைகளும், உடம்பும் ஒன்றுபோலவே உள்ளன.

படங்களின் அளவும் ஏறத்தாழ ஒன்று. இந்தப் படத்தில் உருவத்தைச் சுற்றிலும் இடப்பட்டுள்ள சிறு துளைகள், இந்த ஓவியத்தை கேன்வாசில் படியெடுத்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

அதே நேரம் இந்த ஓவியத்தின் தலைக்கு மேல் காணப்படும் தீற்றல்கள் வலதுகை பழக்கம் உடையவர் வரைந்ததைப் போல உள்ளன. ஆனால், டாவின்சி இடது கைப் பழக்கமுடையவர் என்கிறார் மோட்டின்.

இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


மோனாலிசாவும், நிர்வாண மோனாலிசா என்று சந்தேகிக்கப்படும் ஓவியமும்.

Exit mobile version