ilakkiyainfo

“ஆட்டிப்படைத்த கரன்களின் ராஜ்ஜியம்!” : (சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை – அத்தியாயம் 50)

ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் நிழலாய்த் தொடர்ந்த சசிகலாவின் ராஜாங்கத்தில், அவருடைய உறவுகளின் ஆதிக்கமும் கொடிகட்டிப் பறந்தது.

ஆனால், ஜெயலலிதா அதற்கு ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார். 1991-க்குப் பிறகு நடராசனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தவர், தேவைப்பட்டபோது திவாகரனுக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்தார்; தேவையில்லை என்று நினைத்தபோது, திவாகரனிடம் இருந்து அவற்றைப் பறித்தார்.

ஜெ.ஜெ டிவியின் பொறுப்புக்களை பாஸ்கரனுக்குக் கொடுத்தார். சுதாகரனை வளர்ப்பு மகனாக்கினார். தினகரனை வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைப் பார்த்துக் கொள்ள அமர்த்தினார். ஆனால், சசிகலாவைப் போல யாரையும் நிரந்தரமாக உடன் வைத்துக் கொள்ளவில்லை.

diwakar_11200திவாகரனின் ராஜ்ஜியத்தில்….

திவாகரனின் ராஜ்ஜியத்தில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கும் விழாவாக நடந்தது, தஞ்சை மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம். சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அது.

சோழர்களுக்குப் பிறகு, நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் பராமரித்து வந்தனர். ஆனால், அந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக வரலாறு இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளாக நடக்காத கும்பாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டார் திவாகரன். சசிகலாவிடம் பேசி, ஜெயலலிதாவை சம்மதிக்க வைத்து கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது.

1995 ஜூன் 8-ம் தேதி ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கும்பாபிஷேகம் என ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது. திட்டம் தயாரானதும், திவாகரன் பரபரப்பானார். கோயிலுக்குள்ளேயே ஓர் அலுவலகத்தைப் போட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.

இயல்பிலேயே சசிகலாவின் உறவினர்களில் திவாகரனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். அதனால், தன்னுடைய வாழ்க்கை முறைகளையே அந்த நேரத்தில் மாற்றிக் கொண்டார் திவாகரன். அலுவலகத்தில் இருந்து தொலைபேசியைச் சுழற்றி உத்தரவுகளைப் போட்டுக் கொண்டே இருப்பார்.

உத்தரவுகளுக்கு ஏற்பட, தமிழகத்தைச் சேர்ந்த பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள், திவாகரனைப் பயபக்தியுடன் பார்க்க வந்தனர்.

விழா முடிவு செய்யப்பட்ட பிறகு வந்த 6 மாதங்களில் நாகை மாவட்டத்தில் வேறு எந்த வேலையும் நடைபெறவில்லை.

நாகை கலெக்டர் பாஸ்கரன் மன்னார்குடியிலேயே கேம்ப் அடிக்க… ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட எல்லாத்துறை அதிகாரிகளும் நாகை மாவட்டத்துக்கே கார்களோடு குவிந்துவிட்டனர். வைகுந்த டி.ஜி.பி வந்துபோனதும், போலீஸ் பட்டாளம் அங்கு குவிந்துவிட்டது.

கும்பாபிஷேகத்தின் போது திவாகரன்

சத்தம் இல்லாமல் சென்னைக்குப் பறந்த திவாகரன் நகர அபிவிருத்திக்கான பைலில் நிதித்துறைச் செயலாளர் நாராயணனிடம் கையெழுத்து வாங்கினார். பைல் கையெழுத்தானதுமே, மன்னார்குடிக்கு மூன்றரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வேலைகள் ஒருபக்கம் விறுவிறுவென நடந்தன. கடைசி நேரத்தில் ஜெயலலிதா வருவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் மட்டும் கடைசி வரை நீடித்தது.

பொதுமக்களும் கட்சிக்காரர்களும் நம்பிக்கை இழந்தனர். பத்திரிகை விளம்பரங்களில் கூட முதல்வர் நல்லாசியுடன் என்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன.

காஞ்சி சங்கராச்சாரியாரும், ஆர்.வெங்கட்ராமனுக்கும் மட்டும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. அத்தனை ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்திருந்தார் திவாகரன். 6-ம் தேதி கோயிலுக்குப் போன் செய்த சசிகலா முதல்வர் ஜெயலலிதாவோடு வருவேன் என்ற தகவலைச் சொல்லி, ஜெயலலிதாவின் வருகையை உறுதிப்படுத்தினார்.

உடனே, நிலைமைகள் மாறின. திவாகர் எங்கு சென்றாலும், அவரது காருக்கு முன்னும் பின்னும் போலீஸ் ‘பைலட்’ கார்கள் அணிவகுத்தன. 8-ம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாயிரம் போலீஸ்காரர்கள் கோயிலைச் சுற்றி குவிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா எழுந்தளினார்…

காலையில் ஜெயலலிதா வர நேரம் ஆனதால், ராஜகோபால சுவாமி கோயிலின் 16 கோபுரங்களுக்கும், பதினெட்டு விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்வதாகத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒன்றிப் போய் இருந்தார் திவாகர். சசிகலாவின் தம்பி என்றில்லாமல், ஒரு சாதரண பக்தரைப்போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார். 9 மணிக்கு ராஜ கோபுரத்தின் மேல் இருந்து மஞ்சள் கொடியை திவாகர் அசைத்ததும், கோயில் கும்பாபிஷேகம் தொடங்கியது.

சரியாக 9.25 மணிக்கு ஜெயலலிதா உள்ளே நுழைந்தார். அப்போது, “முதல்வர் எழுந்தருளிவிட்டார்” என்று வர்ணனை செய்யப்பட்டது. ஜெயலலிதா நடக்கும் பாதை முழுவதும் ரத்தினக் கம்பளத்தால் போர்த்தப்பட்டு இருந்தது.

ஆனால், செருப்பில்லாமல் நடக்க சிரமப்படுவார் என்பதால், ரத்தினக் கம்பளத்தின் மேல் வெள்ளைத்தாள்கள் விரிக்கப்பட்டன. மேடையில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சேர்கள் போடப்பட்டு இருந்தன.

ஆர்.வெங்கட்ராமனுக்கு ஜெயலலிதா அமர்ந்திருந்த பகுதியில் சேர் போடப்படவில்லை. அதில் அதிருப்தி அடைந்த ஆர்.வீ நேராக எழுந்துபோய் சங்கராச்சாரியாரின் காலடியில் உட்கார்ந்துவிட்டார்.

முக்கால் மணி நேரத்தில் ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பினார். திவாகரனின் ராஜ்ஜியத்துக்குள்… அவருடைய முழுமையான மேற்பார்வையில்… அவருடைய திட்டப்படி நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா, திவாகரனைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும், திவாகரனின் ராஜ்ஜியத்தில் இயங்கிய அ.தி.மு.கவிற்குள், திவாகரனின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதற்கு முன்பு இருந்ததைவிட பல மடங்கு உயர்ந்தது.

தினகரன் ராஜ்ஜியம்….

சசிகலாவின் அக்கா வனிதாமணி. அவருடைய கணவர் விவேகானந்தன். அவர்களுக்கு மூன்று மகன்கள். டி.டி.வி.தினகரன், டி.டி.வி.பாஸ்கரன், டி.டி.வி.சுதாகரன். இவர்களில் அந்தக் காலகட்டத்தில் சுதாகரன், பாஸ்கரன் மட்டும் அடிக்கடி செய்திகளில் அடிபடுவார்கள்.

சசிகலாவின் தம்பி திவாகரன் கூட சர்ச்சைகளில் சிக்குவார். அதர்மம் என்ற பெயரில் முரளி நடித்த திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று நடிக்கவும் செய்தார் திவாகரன். ராஜகோபாலசுவாமி கும்பாபிஷேகத்தின் மூலம் நாடறிந்த ஆளாக மாறினார் திவாகரன். இவர்கள் ஒருவகை.

ஆனால், தினகரன் வேறு வகை. தினகரனை எங்கும் பார்க்க முடியாது. அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வராது. பெரும்பாலும் திருச்சி, மன்னார்குடி பகுதிகளில் மட்டும் தினகரனின் நடமாட்டம் இருக்கும். அவர் சென்னைக்கு வந்தால்கூட வெளியில் தென்படமாட்டார்.

ஆனால், கடல் கடந்த நாடுகளில் தினகரனுக்கு வேலைகள் இருந்தன. லண்டன், சிங்கப்பூர், மலேசியா தொடர்புகளை வைத்துக் கொண்டு தினகரன் தனி ராஜாங்கம் நடத்தி வந்தார்.

1990-களின் பிற்பாடு, தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் தாராளமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துகள் வாங்குவதற்கும், வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதில் இருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி தினகரன் பல சொத்துகளை இந்தியாவில் வாங்கிக் குவித்தார்.

அப்போது மன்மோகன்சிங் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் அந்தத் துறைக்கு வந்ததும், அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, அந்நியச் செலாவணி மோசடிகள். அதைக் கட்டுப்படுத்த நினைத்த மத்திய அரசு, ஹாவாலா புரோக்கர்களைத் துரத்தி துரத்திப் பிடித்தது.

டெல்லியைச் சேர்ந்த ஜெயின் சகோதரர்கள் மற்றும் அமீர் என்பவர் சிக்கினார்கள். அவர்கள்தான் இந்தியப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி அங்கு அவற்றை சிங்கப்பூர் டாலர்களாக மாற்றி, அதை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவரும் தொழிலைக் கில்லியாகச் செய்தவர்கள்.

இந்த வித்தையைப் பயன்படுத்தி, பல கோடிப் பரிவர்த்தனைகளைப் பராமரித்தவர் தினகரன். மத்திய அரசிடம் சிக்கிய ஹவாலா புரோக்கர்கள், தமிழகத்தில் தினகரனின் பக்கம் கை காட்டினார்கள்.

இதையடுத்து 1995 ஜூலை மாதம், தமிழகத்தில் தினகரன் சுற்றுவாட்டாரங்களில் மத்திய அமலாக்கத்துறை சூறாவளி ரெய்டுகளை நடத்தியது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட முறை, லண்டன் ஹோட்டல் விவகாரம், ஜெயலலிதாவுக்குப் பிறந்த நாள் பரிசாக வந்த அமெரிக்க டாலர்கள் எனப் பல வில்லங்கங்கள் வெளியாயின.

சென்னையில் ரெய்டு நடந்தபோது, மன்னார்குடிக்கு ஒரு டீம் சென்றது. அங்கு லெக்சஸ் என்ற வெளிநாட்டுக் கார் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அந்தக் காரை வைத்திருந்த மற்றொருவர், ஷேர் மார்கெட் ஊழல் நாயகன் ஹர்ஷத் மேத்தா மட்டுமே. இப்படி ஜெயலலிதா-சசிகலாவின் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் நாயகனாக தினகரன் வலம் வந்தார்.

பாஸ்கரன், சுதாகரன் ராஜ்ஜியம்…

இன்றைய ஜெயா டி.வி. அன்றைக்கு ஜெ.ஜெ டிவியாக இருந்தது. அதைக் கட்டுப்படுத்தியவர்கள் பாஸ்கரனும் சுதாகரனும்தான். அதையொட்டி சென்னையில் கேபிள் டி.வி உரிமையாளர்கள் மாநாடு நடந்தது.

அந்த மாநாட்டின் நோக்கம் ஜெ.ஜெ.டிவியின் வளர்ச்சியும், அதில் பங்கெடுத்திருந்தது பாஸ்கரன். பாஸ்கரனுக்காகவே நடத்தப்பட்ட மாநாடு அது.அதுபோல, ஜெயலலிதா தன் வாழ்வின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை 1995-ம் ஆண்டு  ஜூலை மாதம் வெளியிட்டார். அதில்தான் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாகக் குறிப்பிட்டார்.

அதன் மூலம் சுதாகரனின் ராஜ்ஜியம் ஒன்று உருவானது. எப்படிப்பார்த்தாலும் இந்தக் கரன்களின் ராஜ்ஜியங்கள் எல்லாம் அன்றைய தேதியில் தமிழக மக்களுக்கு வேதனைகளைக் கொடுக்கும் சோதனை ராஜ்ஜியங்களாகவே திகழ்ந்தன.

கதை தொடரும்…

Exit mobile version