ilakkiyainfo

“மோடி அறிவித்திருந்தால் ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன்!’ – சுப்பிரமணியன் சுவாமி

சேது சமுத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, `மோடி ஒத்துழைத்திருந்தால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கைது செய்திருப்பேன்’ என்று காட்டமாகியுள்ளார்.

பாக் ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் மணல் திட்டுகளை அகற்றிவிட்டு கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்த சேது சமுத்திர திட்டம் உருவாக்கப்பட்டது.

இத்திட்டம் கொண்டுவரப்பட்டால், இலங்கையை சுற்றிச் செல்லும் சரக்கு கப்பல்கள் சேது சமுத்திர கால்வாய் வழியாக இந்திய பெருங்கடலை அடைய முடியும். இதனால் பயண நேரமும், தூரமும் குறைவதோடு தூத்துக்குடி துறைமுகம் வர்த்தக ரீதியாக பெருவளர்ச்சி அடையும்.

swamy-759_11039சுப்பிரமணியன் சுவாமி

2004-ல் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன், சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த தி.மு.க. முயற்சிகளை எடுத்தது.

அப்போதைய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, இத்திட்டத்தில் ஊழல் செய்துவிட்டதாகவும், புராதன ராமர் பாலத்தை இடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

சேது சமுத்திர திட்ட மாற்றுப் பாதையை ஆராய, சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஆர்.கே.பச்சோரி தலைமையில் குழு ஒன்றை காங்கிரஸ் அரசு அமைத்தது.

இக்குழு அளித்த புதிய பாதையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு உள்ளாக, காங்கிரஸ் ஆட்சி முடிந்தது. அடுத்ததாக வந்த பா.ஜ.க. அரசு, ராமர் பாலத்தை எக்காலத்திலும் இடிக்க முடியாது என்று கூறி சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக, மத்திய அரசுகள் தொடர்ந்துள்ள வழக்குகளால், மாற்றுப் பாதையில் கொண்டு செல்லக் கூட முடியாமல் திட்டமும் முடங்கிய நிலையிலேயே உள்ளது.

சுப்பிரமணியன் சாமி

இந்த நிலையில், தி.மு.க. வெளியிட்டுள்ள 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவோம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் ட்விட்டரில் சிலர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “தி.மு.க.வுக்கு அறிவு என்பதே இல்லை. சேது சமுத்திர திட்ட விவகாரம் உச்சநீதிமன்றத்தால் மூடப்பட்டுவிட்டது.

என் ஆலோசனைப்படி, ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக மோடி அறிவித்திருந்தால், பலங்கால சின்னங்களை அவமதித்த குற்றச்சாட்டில் மு.க.ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன்” என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சுப்பிரமணியன் சாமியின் இந்தக் காட்டமான பதில், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அவரது கருத்துக்கு, தி.மு.க. இணையதளவாசிகள் பலரும் கண்டித்து பின்னூட்டம் செய்து வருகின்றனர்.

Exit mobile version