ilakkiyainfo

மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் ஆஸ்பத்திரி- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் இன்று திறந்துவைத்தார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை காணலாம்

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (20-ந்தேதி) முதல் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

முதல்கட்டமாக சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு நோய் தடுப்பு சிறப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.

நேற்று இரவு 8 மணி அளவில் தனி விமானம் மூலம் கோவையில் இருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முதல்-அமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் முதன் முறையாக மதுரை வருவதால் அவரை காண தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் விமான நிலைய பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். ஆனாலும் விமான நிலைய வளாகத்துக்குள் அவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை

விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா விடுதிக்கு சென்று இரவு தங்கினார்.

மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றையும் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மதுரை அருகே உள்ள தோப்பூருக்கு காரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் பிற்பகல் கார் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு கலெக்டர் சிவராசு, கெரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பணீந்திரரெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு 5.10 மணிக்கு திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கிறார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து அந்த மருத்துவமனையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கை உள்ளிட்ட 200 படுக்கை வசதிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து ஆய்வு செய்கிறார்.

அதைத்தொடர்ந்து அரசு செயலர், கலெக்டர், கமி‌ஷனர், சுகாதாரத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரிக்கு (என்.ஐ.டி.) செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதையடுத்து மாலை 6.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றடையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் விளக்கம் அளிக்கிறார். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Exit mobile version