Site icon ilakkiyainfo

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை: ஐதராபாத் மாணவிக்கு ரூ.2 கோடி சம்பளம்

ஐதராபாத் மாணவி ஒருவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துக்கு வேலை பெற்றுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் தீப்தி. ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா என்ஜினீயரிங் கல்லூரியில் மென்பொருள் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற தீப்தி, அமெரிக்க நிதி நிறுவனமான ஜெபி மோர்கன் நிறுவனத்தில் மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றி கொண்டிருந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலையில் இருந்து ராஜினாமா செய்து விட்டு மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றார். அவருக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில்தான் அவருடைய படிப்பு முடிந்தது. பல்கலைக்கழக வளாக தேர்வின்போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது.

ஆண்டு சம்பளம் ரூ.2 கோடி. மைக்ரோசாப்ட் நிறுவனம் 300 மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்தது. அதில் தீப்தி அதிக ஊதிய பிரிவில், கிரேடு 2 என்ஜினீயராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மட்டுமல்ல, கோல்டுமேன் சாக்ஸ், அமேசான் ஆகிய நிறுவனங்களில் இருந்தும் தீப்திக்கு வேலை வாய்ப்பு வந்தது.

ஆனால், அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே 2014-2015-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மாணவ பணியாளாராக இருந்துள்ளார்.

“அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதில் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. மனிதர்களின் வாழ்வை மாற்றி அமைப்பதில் தொழில்நுட்பங்கள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன” என்று தீப்தி தன்னுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தீப்தியின் தந்தை ஐதராபாத் போலீஸ் துறையில் தடயவியல் நிபுணராக உள்ளார்.

Exit mobile version