ilakkiyainfo

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா செய்த துரோகமும், அதன் தோல்வியும்! : தாலிபன்களின் கதை – 9

டொனால்டு ட்ரம்ப் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானைக் கடுமையாகத் திட்டிவிட்டு, ‘இனி அமெரிக்காவே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும்’ என அறிவித்தார்.

ஆப்கனில் பிறந்த அமெரிக்கரான ஜல்மாய் கலில்ஸாத் என்பவரை சிறப்புத் தூதராக நியமித்தார்.

‘இது சமாதானமா, சரணடைதலா?’

தாலிபன்களிடம் அமெரிக்கா போட்ட சமாதான உடன்படிக்கையைப் பார்த்து ஆப்கானிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கேட்ட கேள்வி இதுதான்.

பின் லேடனைக் கொன்றபிறகு, தாலிபன் தலைவர் முல்லா ஒமர் இறந்தபிறகு, ஆப்கனில் தொடர்ந்து சண்டையிடும் ஆர்வம் அமெரிக்காவுக்கு இல்லாமல் போய்விட்டது.

‘கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டு, ஏராளமான உயிரிழப்புகளை சந்தித்து, முடிவற்ற ஒரு போரைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம்’ என்ற உண்மை அவர்களுக்குப் புரிந்தது.

ஆப்கன் புதைசேற்றிலிருந்து எப்படியாவது மீண்டால் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்தார்கள்.

அமெரிக்காவுக்கு முன்பே ஆப்கனில் சமாதான முயற்சிகளைச் செய்தவர், அப்போதைய அதிபர் ஹமீத் கர்சாய். 12 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வெள்ளைக்கொடியை உயர்த்திப் பிடித்தார்.

‘தாலிபன் சகோதரர்கள் ஆப்கன் மண்ணில் நம் ரத்தம் சிந்துவதைத் தடுக்க வேண்டும்’ என்றார்.

அமெரிக்காவின் சம்மதம் இல்லாமலேயே அவர் தாலிபன் துணைத் தலைவர் அப்துல் கனி பரதாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனால் அமெரிக்காவும் பாகிஸ்தானும் கோபம் கொண்டன. பாகிஸ்தானின் கராச்சியில் இருந்த பரதாரைக் கைது செய்து சிறையில் அடைத்தது பாகிஸ்தான். ஆப்கன் அமைதிவழிக்குத் திரும்புவதை பாகிஸ்தான் விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்

ஹமீத் கர்சாய்

அதன்பின் ஆப்கன் அரசுடன் பேசுவதற்கு தாலிபன்கள் தயாராக இல்லை. ”அந்நியப் படைகள் ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறினால்தான் பேச்சுவார்த்தை” என்றனர். ”அமெரிக்காவின் ஆதரவில் இருக்கும் பொம்மை அரசுடன் பேசத் தயாராக இல்லை” என்றனர்.

அதன்பின் ஒரு கட்டத்தில் அமெரிக்காவே நேரடியாக தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

நேட்டோ கூட்டுப்படையின் அதிகாரிகள் பாதுகாப்புக்கு உறுதி அளித்ததால், பாகிஸ்தானிலிருந்து தாலிபன் தலைவர்கள் குழு காபூல் வந்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேசிவிட்டுப் போனது.

தாலிபன்களின் அப்போதைய தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர் தலைமையில் தூதுக்குழு வருவதாக தாலிபன்கள் சொன்னார்கள்.

பேச்சுவார்த்தை முடிந்தபிறகுதான் தெரிந்தது, வந்தவர் மன்சூர் அல்ல என்று! மன்சூர் போலவே தோற்றத்தில் இருந்த வேறு ஒருவரை அனுப்பி விளையாட்டு காட்டினர் தாலிபன்கள்.

”ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ பேச்சுவார்த்தை நடத்த முடியாது. வேறு ஏதாவது ஒரு நாட்டில் பேசலாம்” என நிபந்தனை விதித்தனர் தாலிபன்கள்.

பாகிஸ்தானின் ஏற்பாட்டில் அப்படி இரண்டு பேச்சுவார்த்தைகள் நடந்தன. அமெரிக்க அதிகாரிகள் இதில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

சம்பந்தமே இல்லாமல், சீனாவையும் உள்ளே இழுத்து வந்தது பாகிஸ்தான். ரஷ்யா இன்னொரு பக்கம் கூப்பிடாமலேயே ஆஜராகி, தன் பங்குக்கு ஓர் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியது.

இப்படிப் பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் காமெடியாகத் தொடர, இன்னொரு பக்கம் தாலிபன்களுக்கும் அமெரிக்க ராணுவத்துக்கும் உக்கிரமான மோதல்களும் நடந்துகொண்டிருந்தன.

ஆப்கனில் அமைதி திரும்ப வேண்டும் என்பதைவிட, நாம் சேதாரமில்லாமல் திரும்பிப் போனால் போதும் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டது அமெரிக்கா.

டொனால்டு ட்ரம்ப் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானைக் கடுமையாகத் திட்டிவிட்டு, ”இனி அமெரிக்காவே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும்” என அறிவித்தார்.

ஆப்கனில் பிறந்த அமெரிக்கரான ஜல்மாய் கலில்ஸாத் என்பவரை சிறப்புத் தூதராக நியமித்தார்.

தாலிபன்கள் உடனே கத்தார் தலைநகர் தோஹாவில் அரசியல் அலுவலகம் ஒன்றைத் திறந்தனர். பாகிஸ்தான் சிறையில் இருந்த அப்துல் கனி பரதார் அதன்பின் கத்தார் வந்தார். நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்கியது.


ஜல்மாய் கலில்ஸாத்

ஆரம்பத்திலிருந்து தாலிபன்கள் விதித்த நிபந்தனைகள் எல்லாவற்றையும் அமெரிக்கா ஏற்றது. இதுதான் ஆப்கன் மக்களுக்கு அமெரிக்கா இழைத்த முதல் துரோகம்.

தொடர்ச்சியாகத் தாலிபன்கள் நடத்திவந்த வெடிகுண்டு தாக்குதல்களில் வெறுத்துப் போன ஆப்கன் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு ஒரு மாபெரும் அமைதி ஊர்வலத்தை நடத்தினர்.

தாலிபன்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்கள் வழியாகவும் அந்த ஊர்வலம் போனது. ஆப்கனின் அத்தனை அரசியல் தலைவர்களையும் யோசிக்க வைத்த ஊர்வலம் அது. அதன்பிறகே தாலிபன்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

ஆப்கனில் மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்த ஓர் அரசு இருந்தது. ஆனால், ‘அவர்களுடன் நாங்கள் பேச முடியாது.

நாம் ரெண்டு பேரும் பேசி முடிவு செய்வோம்’ என அமெரிக்காவிடம் நிபந்தனை விதித்தனர் தாலிபன்கள். அதை அமெரிக்கா ஏற்றது.

ஆப்கன் அரசைக் கூப்பிடாமலேயே ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது, உலகில் எங்கும் நடக்காத விநோதம்.

உடனடியாக ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றனர். அதையும் அமெரிக்கா ஏற்றது. எங்கள்மீது விமானத் தாக்குதல் நடத்தக்கூடாது என்றனர். அதுவும் ஏற்கப்பட்டது.

அதற்கு அடுத்ததாக, ”ஆப்கன் சிறைகளில் இருக்கும் எங்கள் தாலிபன் வீரர்கள் 5,000 பேரை விடுவிக்க வேண்டும்.

அதற்கு பதிலாக, எங்களிடம் பிடிபட்டுள்ள ஆப்கன் ராணுவ வீரர்கள் 1,000 பேரை விடுவிக்கிறோம்” என்றனர் தாலிபன்கள்.

இதை அமெரிக்கா ஏற்றது. ஆனால், ஆப்கன் அரசு மறுத்தது. சிறைகளில் இருப்பவர்களை விடுதலை செய்தால் விபரீதமாகிவிடும் என்று பயந்தது. கடைசியில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து தாலிபன்களை விடுதலை செய்தது ஆப்கன் அரசு. அவர்கள் பயந்தது போலவே விபரீதம் நிகழ்ந்தது.

ஜல்மாய் கலில்ஸாத்

அதுவரை தாலிபன்கள் கூட்டமாகச் சேர்ந்தோ, வாகனத்தில் பயணம் செய்தோ தாக்குதல்களை நடத்தவில்லை.

காரணம், அமெரிக்க போர் விமானங்கள் உடனடியாக குண்டுவீசி அவர்களைக் கொன்றுவிடும். பேச்சுவார்த்தை ஆரம்பித்த பிறகு சூழ்நிலை மாறியது.

அமெரிக்க ராணுவத்தின் மீது தாலிபன்கள் கை வைக்கவில்லை. ஆனால், ஆப்கன் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளைக் கடுமையாகத் தாக்கியது. போதுமான பயிற்சி இல்லாமல், அரசில் நிலவிய ஊழல் காரணமாக சரியான சம்பளமும் இல்லாமல் பணியாற்றிய ராணுவத்தினரும், போலீஸும் மிரண்டு போனார்கள்.

எதிர்த்தால் கொல்கிறார்களே என ஆயுதங்களை அப்படியே தாலிபன்கள் கையில் கொடுத்துவிட்டு சரணடைந்தார்கள்.

அமெரிக்கா கொடுத்த அத்தனை நவீன ஆயுதங்களும் தாலிபன்கள் கைக்கு இப்படித்தான் வந்தன.

உடல் வெப்பநிலையை உணர்ந்து எதிரிகளை அடையாளம் கண்டு சுடும் துப்பாக்கிகள், இரவிலும் தெளிவாகப் பார்க்க உதவும் கண்ணாடிகள், குண்டு துளைக்காத உடைகள், கவச வாகனங்கள் என தாலிபன்கள் பலம் பெருகியது.

அதுவரை பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த அத்தனை தாலிபன்களும் துணிச்சலாக ஆப்கன் மண்ணை மிதித்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான தாலிபன்களும் சேர்ந்துகொள்ள, சுமார் 85 ஆயிரம் பேர் கொண்ட படையாக தாலிபன்கள் பெருகினர்.

அதுவரை கிராமங்களில் அதிகாரம் செலுத்தியவர்கள், அதன்பின் நகரங்களையும் வளைத்தனர். பீட்சா டெலிவரி ஆவதைவிட வேகமாக ஆப்கனின் பல பிரதேசங்கள் தாலிபன் வசம் வந்தன.

அமெரிக்கப் படை இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது. இந்த சூழலில் தாலிபன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது ஒன்றே ஒன்றுதான்.

அது, ஆப்கன் அரசிடம் இருந்த விமானப்படை. அதை முடக்குவதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்கள்.

விமானப்படை விமானிகள் ஒவ்வொருவராகத் தேடிப் பிடித்துக் கொன்றார்கள். மிச்சம் இருந்தவர்கள் தலைமறைவாகிவிட, அந்த விமானங்களும் பறக்காமல் முடங்கின.

”அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆப்கன் மண்ணில் புகலிடம் தர மாட்டோம்” என்ற ஒற்றை வாக்குறுதியை மட்டுமே பெற்றுக்கொண்டு வெளியேறியது அமெரிக்கா.

அவர்களே எதிர்பார்க்காத வேகத்தில் நாட்டைப் பிடித்த தாலிபன்கள், இப்போது ஆப்கனில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கே வழி தர மறுக்கிறார்கள்.

மற்ற நாடுகளும் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பாக ஆப்கனிலிருந்து வெளியேற்றிக் கூட்டிச் செல்ல முடியாமல் தவிக்கின்றன.

இந்த எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம், அமெரிக்கா செய்துகொண்ட அவசர சமாதான ஒப்பந்தம்.

”இப்போது, ‘ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறாவிட்டால் நடப்பதே வேறு’ என தாலிபன்கள் மிரட்டுகிறார்கள். அமெரிக்காவை இவ்வளவு கடுமையாக மிரட்டும் துணிச்சல் பல நாடுகளின் தலைவர்களுக்குக்கூட கிடையாது. தாலிபன்களின் இந்தத் துணிச்சலுக்குக் காரணம், சீனா.”

– தாலிபன்களின் கதை தொடரும்…

ஆப்கானிஸ்தானின் தலைவர்களாகப் போவது யார், ஆட்சி அதிகாரம் எப்படியிருக்கும்?!: தாலிபன்களின் கதை – 8

Exit mobile version