Site icon ilakkiyainfo

கொழும்பில் மூன்று சடலங்கள் மீட்பு – மர்மம் துலக்க விசாரணைகளில் பொலிஸார்

கொழும்பின் வெள்ளவத்தை, பம்பலபிட்டி கடற்கரைகளில் இருந்து நிர்வாணமான நிலையில் இரு ஆண்களின் சடலங்கள் நேற்று ( 10) மீட்கப்பட்டுள்ளதுடன், கொலன்னாவை  பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்துக்கு அருகே  உள்ள  கால்வாயிலிருந்தும் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

வெள்ளவத்தை:

வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியை அண்மித்த கடலில், சடலமொன்று மிதப்பதாக   வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  ரொஷான் டி சில்வா தலைமையிலான குழுவினர் சென்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் நிர்வாணமாக இருந்த நிலையில், ஆள் அடையாளம் எதுவும் உடனடியாக தெரியவில்லை என வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ரொஷான் டி சில்வா தெரிவித்தார்.

சடலமானது சுமார் 40 முதல் 55 வயதுக்கு உட்பட்ட ஒருவரினுடையதாக இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  சடலத்தை அடையாளம் காணவும் மர்மம் துலக்கவும் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 பம்பலபிட்டி :

இதனிடையே பம்பலபிட்டி பொலிஸாருக்கும், பம்பலபிட்டி கடற்கரையில் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளதாக் தகவல்  நேற்று முற்பகல் கிடைத்துள்ளது.

இந் நிலையில் பம்பலபிட்டி மெரீன் ட்ரைவ் வீதியை ஒட்டிய கடற் கரையில் கரை ஒதுங்கியிருந்த நிலையில்  குறித்த நிர்வாண சடலம் மீட்கப்பட்டதாக பம்பலபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  பிரசன்ன ரத்நாயக்க தெரிவித்தார்.  குறித்த சடலமானது  40 முதல்  50 வயதுக்கு உட்பட்ட நபர் ஒரிவரினுடையது என சந்தேகிக்கும் பொலிஸார் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அதனை களுபோவில வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.

கொலன்னாவை :

கொலன்னாவ  பெற்றோலியக் கூட்டுத் தாபணத்தை ஒட்டிய  கால்வாய் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம்  நேற்று மீட்கப்பட்ட்து.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் என உயிரிழந்தவரின் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

நெற்று முன் தினம் 9 ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயிருந்ததாகவும் உறவினர்கள் பொலிசாரிடம் கூரியுள்ளனர். இந் நிலையில்  குறித்த நபர் தற்கொலைச் செய்துகொண்டாரா அல்லது அது  நாசகார செயலா என்பது தொடர்பில் தெமட்டகொடை மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வெள்ளவத்தை பம்பலபிட்டி பகுதியில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டு கொழும்பு தெற்கு வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் அவ்வந்த பொலிஸாருடன் இணைந்து விசாரித்து வருவதாக அறிய முடிகிறது. சடலங்கள் தொடர்பில் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version