ஜே.வி.பி. 1971 ஏப்ரலில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நேரத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையைத் தெளிவாக விளங்கிக்கொண்டால்தான், அவர்களது ஆயுதக் கிளர்ச்சி ஒரு திட்டமிட்ட எதிர்ப்புரட்சி நடவடிக்கை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
1970 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியனவும் இணைந்த ‘மக்கள் முன்னணி’ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால், வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரிக்கட்சிகள் இரண்டும் சுதந்திரக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றதுடன், சுதந்திரக் கட்சி தலைவி திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராகக் கொண்டு அமைந்த அரசாங்கத்திலும் பங்காளிகளாக இருந்தன.
இவ்வாறான ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு, முற்போக்கு அரசாங்கம் பதவிக்கு வந்தது உள்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான பிற்போக்கு சக்திகளுக்கும், அவர்களது சர்வதேச எஜமானர்களான ஏகாதிபத்திய சக்திகளுக்கும் உவப்பானதாக இருக்கவில்லை.
1959 இல் பிற்போக்கு சக்திகளால் அப்போதைய இலங்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிதமரும், சிறீமாவோ பண்டாரநாயக்கவின் கணவருமான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க, 1960ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டினதும் உலகத்தினதும் முதலாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அப்போதைய அவரது அரசாங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் அங்கம் வகிக்காத போதும், அவைகளின் ஆதரவுடன், அவர் தனது கணவர் பண்டாரநாயக்கவைப் பின்பற்றி, பல ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதனால் ஆத்திரமடைந்த உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளும், அவர்களுக்கு ஆதரவான அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும் அவரது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வந்தன.
அப்பொழுது மேற்கத்தைய ஏகாதிபத்தியவாத சக்திகளின் பிரதான உள்நாட்டு அரசியல் சக்தியாக ஐ.தே.க.வே இருந்தது. அதே நேரத்தில் பிரதான தமிழ் கட்சிகளான தமிழரசு மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சிகளும், ஐ.தே.க. தலைமையிலான உள்நாட்டு பிற்போக்கு சக்திகளின் அணியில் அங்கமாக இருந்ததுடன், ஏகாதிபத்திய விசுவாசிகளாகவும் இருந்தன. (இன்றுவரை அந்த நிலைமை மாற்றமில்லாமல் தொடர்கிறது).
1960இல் அமைந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசுக்கு எதிரான முதல் தாக்குதல் தமிழ் பிற்போக்கு கட்சிகளிடமிருந்தே ஆரம்பமானது. குறிப்பாக தமிழரசுக் கட்சி அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஒருதலைப்பட்சமாக நிராகரித்துவிட்டு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாகத்தை முடக்கும் நோக்குடன் அரசாங்க செயலகங்கள் முன்பு ‘சத்தியாக்கிரகம்’ என்ற போர்வையில் ஒரு போராட்டத்தை 1961இல் முன்னெடுத்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது ஏகாதிபத்தியவாத மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
அரசுக்கெதிரான தமிழ் பிற்போக்கு சக்திகளின் செயல்பாடு தோல்விகண்ட பின்னர், ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்கு சக்திகள் வேறு விதமான ஒரு நடவடிக்கையில் இறங்கின.
அதாவது, இலங்கை இராணுவத்தின் ஒரு பகுதியினர் மூலம் இராணுவச்சதி ஒன்றை அரங்கேற்றி, அரசாங்கத் தலைவர்களைக் கொலை செய்யும் அல்லது கைது செய்து சிறையில் அடைக்கவும், அரசாங்கத்தைக் கவிழ்க்கவுமான ஒரு முயற்சியை 1962 இல் அரங்கேற்ற முயன்றனர். ஆனால், சில தேசபக்த இராணுவ அதிகாரிகளால் இந்த விடயம் அரசாங்கத் தலைமைக்கு முன்கூட்டியே தெரிய வந்ததால், அந்த இராணுவச்சதி முயற்சி முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது. அதில் ஈடுபட்ட சில இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. (இந்த விடயத்திலும் வழக்கு தொடுக்கப்பட்ட படை அதிகாரிகளுக்காக தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தான் நீதிமன்றத்தில் வாதாடினார்!)
ஆனாலும், அந்த முயற்சியிலும் தோல்வி கண்டபோதிலும், சற்றும் மனம் தளராத வேதாள கதை போல, ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்கு சக்திகள், அரசைக் கவிழ்ப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தன. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று என்பதுதான் அவர்களது செயல்தந்திரம். அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தபடி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அதாவது, சிறீமாவோ அரசாங்கம் ‘பத்திரிகை மசோதா’ ஒன்றைக் கொண்டு வருவதற்கு முயன்றது. இந்த பத்திரிகை மசோதா என்பது இலங்கை அரசியலைத் தீர்மானிப்பதில் எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தி வந்த, ஐ.தே.க.வுக்கு சார்பான ‘லேக்ஹவுஸ்’ பத்திரிகை நிறுவனத்தை தேசியமயமாக்கும் நடவடிக்கையாகும். இந்த நிறுவனத்தை தேசியமயமாக்கும்படி இலங்கையின் அனைத்து முற்போக்கு சக்திகளும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தன.
முற்போக்கு சக்திகளின் கோரிக்கையை ஏற்றும், நாட்டு நலன் கருதியும் லேக்ஹவுஸ் நிறுவனத்தை நாட்டுடமையாக்கும் சட்ட மூலத்தை 1964ஆம் ஆண்டு பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய வலதுசாரி பிற்போக்கு சக்திகள், சிறீமாவோ அரசாங்கத்தில் இருந்த வலதுசாரி அமைச்சரான சி.பி.டி.சில்வா தலைமையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சிக்குத் தாவ வைத்து, ஒரு மேலதிக வாக்கால் சட்ட மூலத்தைத் தோற்கடித்தனர்.
அந்த சட்ட மூலம் தோற்றதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. சட்டமூத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக்கூடிய அரசாஙகத்தின் நிதியமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி என்.எம்.பெரேரா, உலக வங்கி அதிகாரிகளுடனான ஒரு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அல்பிரட் துரையப்பா கொழும்பில் இருந்தும், சில சக்திகளின் தூண்டுதலால் சட்டமூல வாக்கெடுப்பு நடைபெற்ற தினத்தன்று நாடாளுமன்றத்துக்குப் போகாமல் தவிர்த்துக்கொண்டார். (பின்னர் தனது சுயதேவைகளின் பொருட்டு 1970 இல் அமைந்த சிறீமாவோ தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தார்)
அத்துடன் மிக மோசமான ஒரு விடயம் என்னவெனில், சட்டமூலத்தை லங்கா சமசமாஜக் கட்சி ஆதரித்தபோதிலும், கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அதன் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களான எட்மன் சமரக்கொடி மற்றும் மெரில் பெர்னாண்டோ ஆகியோர் எதிர்க்கட்சியான ஐ.தே.க.வுடன் இணைந்து சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்து, அதன் தோல்விக்கு உதவி துரோகமிழைத்தனர்.
இந்த நான்குபேரும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அரசாங்கம் மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று, சட்டம் நிறைவேற்றப்பட்டு, லேக்ஹவுஸ் நிறுவனம் 1964 ஆம் ஆண்டிலேயே மக்கள் உடமையாகி இருக்கும். (பின்னர் 1970இல் அமைந்த சிறீமாவோ தலைமையிலான மக்கள் முன்னணி அரசால் லேக்ஹவுஸ் நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது)
பத்திரிகை மசோதா தோற்றதால், வேறு வழியின்றி அரசியல் அமைப்பின் பிரகாரம் சிறீமாவோ அரசாங்கம் பதவி விலகியது. அதைத் தொடர்ந்து 1965ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தல் முடிவுகளின்படி, சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி யும், ஐ.தே.க.வும் ஏறத்தாழ சம அளவான தொகுதிகளில் வெறறி பெற்றன. தமிழரசுக் கட்சி ஆதரவளித்தால் சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது.
பதிலாக தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும், படுமோசமான சிங்கள இனவாதிகளான கே.எம்.பி. ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்றவர்களுடன் இணைந்து, டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. தலைமையில் ஏழு கட்சி கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஆதரவு வழங்கின. தமிழரசுக் கட்சி பேரம்பேசி நிபந்தனையுடன் சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு உதவியிருந்தால், அத்தகைய அரசாங்கத்தின் மூலம் அன்றே தமிழ் மக்களின் சில பிரச்சினைகளையாவது தீர்த்திருக்க முடியும்.
ஆனால் ஐ.தே.க.வுடன் அவர்களுக்கு இருந்த வர்க்க மற்றும் அரசியல் பாசம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. (தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வ.நவரத்தினம் கட்சியை விட்டு விலகியதற்கு கட்சித் தலைமை எடுத்த இந்த தவறான முடிவும் ஒரு காரணம்)
இத்தகைய ஒரு அரசியல் சூழ்ச்சி காரணமாகவே, 1970 பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் ஐ.தே.க.வை மட்டுமின்றி, தமிழரசு மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களையும் தோற்கடித்து, சுதந்திரக் கட்சி தலைமையிலான மக்கள் முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர் என்று கருதுவதில் தவறில்லை.
ஆனால் இம்முறை அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த காரணத்தால், ஏகாதிபத்திய – பிற்போக்கு சக்திகள் 1964இல் செய்தது போல, அரசியல் சூழ்ச்சிகளால் அரசைத் தோற்கடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால் அவரகள் அரசை வீழ்த்துவதற்கு வேறு வழிவகைகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அவ்வாறான வேறு வழிவகையாகக் கண்டு பிடிக்கப்பட்டதுதான் ஜே.வி.பி. மூலம் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியாகும். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. (ஆனால், ஏகாதிபத்தியவாத சக்திகள் 2022 இல் ‘அரகலய’ என்ற ஒரு கிளர்ச்சியை உருவாக்கி, தமக்குச் சார்பான ஜே.வி.பி. தலைமையிலான அரசொன்றை உருவாக்கிக் கொண்டன)
1971 இல் ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சியில் ஐ.தே.க.வின் பங்கு என்னவென்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்)
பகுதி 1பகுதி 2
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!