இலங்கையில் 1970களில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) எதிர்க்கட்சியாக இருந்தது. அதன் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன (ஜே.ஆர்.) எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1970 பொதுத்தேர்தலில் ஐ.தே.க. மோசமான தோல்வியைத் தழுவிய பின்னர், அதன் முன்னைய அரசாங்க பிரதமராகவும் தலைவராகவும் இருந்த டட்லி சேனநாயக்க தலைமைப் பதவியிலிருந்து விலக ஜே.ஆர். தலைமைப் பதவியை ஏற்றிருந்தார்.
‘அரசியல் குள்ளநரி’ என்று வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர்., அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டங்களை வகுப்பதில் வல்லவராக இருந்தார். அந்த வகையில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை என்ன விதத்திலேனும் வீழ்த்திவிட வேண்டும் என்பதில் அவர் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்.
தனது நோக்கத்தை இடதுசாரித்துவம் பேசிக்கொண்டு 1970 பொதுத்தேர்தலில் சில தொகுதிகளில் சிறீமாவோவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு உழைத்த ஜே.வி.பி. இயக்கத்தைப் பயன்படுத்துவது குறித்து அவர் தயக்கமடையவில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி அரங்கேற்றப்பட்டது. அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.ஆர், ‘நான் இப்பொழுது ஒரு இளைஞனாக இருந்தால், ஜே.வி.பி. இயக்கத்தில்தான் இருப்பேன்’ எனப் பகிரங்கமாக அறிவித்தார்.
அவரது இந்த உரை, ஐ.தே.கவுக்கு சார்பானதும், ஜே.ஆரின் குடும்பத்தினதும் நிறுவனமான ‘லேக்ஹவுஸ்’ வெளியிடும் ஆங்கிலத் தினசரியான ‘டெயிலி நியுஸ்’ பத்திரிகையில் ஏப்ரல் 2 ஆம் திகதி முதலில் பிரசுரமானது.
பின்னர் இரண்டு நாள்கள் கழித்து ஏப்ரல் 4ஆம் திகதி (ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி நடைபெற்ற தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக) அதே பத்திரிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. ஜே.ஆரின் அர்த்தமுள்ள உரையும், அது இரு தடவைகள் டெயிலி நியுஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டமையும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இதன் மூலம் ஜே.ஆர். ஐ.தே.க. இளைஞர்களுக்கு ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சியில் இணையும்படி மறைமுகமாக சமிக்ஞை கொடுத்ததாகக் கருதப்படுகிறது.
ஜே.வி.பிக்குள் ஐ.தே.கவின் ஊடுருவலும், 1971 ஆயுதக் கிளர்ச்சியில் அதன் பங்களிப்பும் இருந்தது என்பதற்கு வேறு சில ஆதாரங்களும் இருக்கின்றன. அந்த வகையில் பின்வரும் விடயம் கவனத்துக்குரியது.
1965இல் அமைந்த ஐ.தே.க. தலைமையிலான ஏழுகட்சி கூட்டரசாங்கம், விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு என்ற போர்வையில் இளைஞர்களைக் கொண்டு ‘விவசாயப்படை’ என்றொரு அமைப்பை உருவாக்கியது.
தெற்கில் ஐ.தே.கவுக்கு ஆதரவான சிங்கள இளைஞர்களும், வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இருந்த தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் இளைஞர்களும் இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விவசாயப் படைக்குப் பொறுப்பாக இராணுவத்தில் கப்டன் நிலையில் பதவி வகித்து ஓய்வுபெற்ற ஐ.தே.கவுக்கு சார்பான செனவிரத்ன என்பவர் நியமிக்கப்பட்டார்.
அதன் தலைமை அலுவலகம் ராஜாங்கனையில் அமைக்கப்பட்டது. வடக்கைப் பொறுத்தவரை விசுவமடுவிலும் முத்தையன்கட்டிலும் என இரண்டு விவசாயப்படை முகாம்கள் அமைக்கப்பட்டன. விசுவமடு முகாமுக்கு பிற்காலத்தில் ஐ.தே.கவின் யாழ்ப்பாண அமைப்பாளராகச் செயல்பட்ட விசுவநாதன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
(இந்தச் சந்தர்ப்பத்தில் சில விடயங்களை நினைவுகூருவது பொருத்தமாக இருக்கும். சில வருடங்களுக்கு முன்னர் முத்தையன்கட்டில் நிலை கொண்டிருக்கும் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
ஆனால், அதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் முத்தையன்பட்டு விவசாயப்படை முகாமில் இருந்த சாவகச்சேரியைச் சேர்ந்த சிவலோகநாதன் என்ற இளைஞர் விவசாயப்படை முகாம் அதிகாரிகளினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.
அதேபோல, விசுவமடு விவசாயப்படை முகாமிலும் பொறுப்பதிகாரி விசுவநாதன் செய்த அடக்குமுறைகளால் அங்கிருந்த இளைஞர்களால் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன)
இந்த விவசாயப்படை அமைக்கப்பட்டதன் நோக்கம் விவசாய அபிவிருத்தியை ஊக்குவிப்பதே என ஐ.தே.க. கூட்டரசாங்கம் சொல்லிக்கொண்டாலும், உண்மையான நோக்கம் அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதும், எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்துவதுமே என்பதை ஆங்காங்கே விவசாயப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுத்துக் காட்டிவிட்டன. உதாரணத்துக்கு ஒன்றைக் கூறலாம்.
அந்தக் காலகட்டத்தில் விசுவமடு படித்த வாலிபர் திட்டத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி விவசாயிகள் இயக்கமான அகில இலங்கை விவசாயிகள் சங்க சம்மேளனத்தின் கிளை தமது பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகளை நேரில் வந்து ஆராய்ந்து பார்த்து தீர்வுகாண உதவும்படி, எதிர்க்கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய கம்பஹா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்க அவர்களை அழைத்திருந்தது.
(இந்த பண்டாரநாயக்க தான் தமிழர்களுக்கு அதிகளவு சுயாட்சி சுயாட்சி உரிமை வழங்கிய பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையை எதிர்த்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.கவைச் சேர்ந்த சிங்கள இனவெறியர்கள் 1957இல் ‘கண்டி யாத்திரை’ போனபோது, இம்புல்கொட சந்தியில் வைத்து பொது மக்களின் உதவியுடன் ஊர்வலம் தொடர்ந்து செல்லவிடாது தடுத்து நிறுத்தியவர்)
விசுவமடு விவசாயிகளின் அழைப்பை ஏற்று எஸ்.டி.பண்டாரநாயக்க விசுவமடுவுக்கு விஜயம் மேற்கொண்டார். அங்கு அவரை வரவேற்று பொதுக்கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தை நடைபெற விடாது குழப்பும்படி விசுவமடு விவசாயப்படை முகாம் பொறுப்பதிகாரி விசுவநாதன் முகாமில் இருந்த இளைஞர்கள் சிலரை அனுப்பி வைத்தார்.
ஆனால், ஏற்கனவே விவசாயப்படை முகாம் அதிகாரிகள் மீது வெறுப்பில் இருந்த அந்த இளைஞர்கள், கூட்டத்தில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தாததுடன், எஸ்.டி.பண்டாரநாயக்க அவர்களுடனும் அவரை அழைத்த விசுவமடு விவசாய சங்கத்தினருடனும் அந்நியோன்யமாக உறவாடிச் சென்றனர்.
இந்த விவசாயப்படை என்ற அமைப்பு 1970 பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பாக ஐ.தே.க. அரசால் கலைக்கப்பட்டது. கலைக்கும் போது, அந்த அமைப்பில் இருந்த ஒவ்வொரு இளைஞருக்கும் தலா 500 ரூபா வீதம் கொடுத்து, அடுத்த பொதுத் தேர்தலில் தென்னிலங்கையில் ஐ.தே.கவுக்கும், வடக்கு கிழக்கில் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளுக்கும் ஆதரவாக தேர்தல் பணியாற்றும்படி அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
(விசுவமடுவில் விவசாயப்படை முகாம் இருந்த இடத்தில் அரசாங்கம் பின்னர் இராணுவ முகாம் ஒன்றை அமைத்தது. அங்கு குடிகொண்ட இராணுவத்தினர் அயல் கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு – குறிப்பாக பெண்களுக்கு – தொல்லைகள் விளைவித்ததால், தருமபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நிலையும், அதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் மக்களின் வீடுகளுக்குத் தீவைத்ததுடன், சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த நிலையும் ஏற்பட்டது. வரலாற்றுக் குறிப்புகளின்படி, தமிழ் இளைஞர்கள் ஆயுதப்படைகளுக்கு எதிராக 1980களில் ஆயுதம் தூக்குவதற்கு முன்னர், இந்த தருமபுரம் இளைஞர்களே முதன் முதலாக இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் ஆவர்)
1970 பொதுத் தேர்தலில் ஐ.தே.க. படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, விவசாயப்படையில் இருந்த ஐ.தே.கவுக்கு சார்பான இளைஞர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். இந்த நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்திய ஜே.ஆர். போன்ற ஐ.தே.க. தலைவர்கள் சிலர், அவர்களை விவசாயப்படைக்கு பொறுப்பாக இருந்த கப்டன் செனவிரத்ன தலைமையில் ஜே.வி.பிக்குள் அனுப்பி வைத்தனர். பின்னர் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சியில் இந்த இளைஞர்களும் பங்குபற்றியிருக்கலாம் என்ற ஊகங்கள் பலமாக உண்டு.
இராணுவத்துக்குள் இருந்த ஒரு பிரிவினரும் ஜே.வி.பியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்ற விடயமும் கவனத்துக்குரியது. ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீர பின்னொரு சந்தர்ப்பத்தில் தமது கிளர்ச்சி தோல்வியடைந்ததிற்கான காரணங்கள் குறித்து விளக்கிய போது, தலைநகர் கொழும்பை கைப்பற்றுவதாக இராணுவத்தின் ஒரு பிரிவினர் தமக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி விட்டனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
நிச்சயமாக, பிரித்தானிய காலனித்துவத்தால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து உள்நாட்டு முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வந்த இராணுவத்துக்குள் ஜே.வி.பியின் ‘சோசலிசப் புரட்சி’க்கு உதவக்கூடிய பிரிவினர் இருந்திருப்பார்கள் என்பதை சுயபுத்தியுள்ள எவருமே நம்பமாட்டார்கள். எனவே, ஜே.வி.பியின் இந்த இராணுவத் தொடர்பும் சந்தேகத்துக்குரியதே. அதுவும் இந்த இராணுவத்தின் ஒரு பிரிவினரே 1962இல் சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசைத் தூக்கி எறியச் சதி செய்தவர்கள் எனும்போது.
(தொடரும்)
– சுப்பராஜன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!