‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் கொடுக்கும், இறந்தாலும் ஆயிரம் பொன் கொடுக்கும்’ என்பது போல, ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) அதன் தலைவர் ஜே.ஆர். ஜெவர்த்தனவும் (ஜே.ஆர்.) ஜே.வி.பியை நேர் வழியிலும் எதிர்வழியிலும் தொடர்ந்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஜே.ஆர். இவ்வாறு ஜே.வி.பியைப் பயன்படுத்தியதற்குக் காரணம், அந்த இயக்கம் ஒன்றும் தெரியாத சிறுபிள்ளை என்பது இதன் அர்த்தமாகிவிடாது.
ஜே.வி.பி. இத்தகைய ஒரு எதிர்ப்புரட்சி நிலையை எடுத்ததிற்கான காரணங்கள், ஒன்று, அதன் ஏகாதிபத்திய சார்பானதும், குறுகிய சிங்கள இனவாத அடிப்படையிலான குட்டி முதலாளித்துவ சிந்தனையாகும். இரண்டாவது, ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற உத்தியை கையாளும் ஜே.வி.பியின் தன்மை.
1977இல் நடந்த தேர்தலில் அதுவரை ஆளும் கட்சியாக இருந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா சுதந்திர கட்சி படுதோல்வியடைய (8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது), ஜே.ஆர். தலைமையிலான ஐ.தே.க. ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜே.ஆர். முதலில் பிரதமராகவும், பின்னர் தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் ஆக்கிக் கொண்டார். அத்துடன் அவர் நிற்கவில்லை. அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்தார்.
முதலில், தனது நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, சிறீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்குப் பறித்தார்.
முன்னைய அரசாங்கம் 1972 இல் கொண்டு வந்த குடியரசு அரசியலமைப்பை நீக்கிவிட்டு, 1978இல் புதிய அரசியல் அமைப்பொன்றை நிறைவேற்றினார். அதன் மூலமே அவர், தன்னை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ஆக்கிக் கொண்டார்.

ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜேவீர
இவற்றை விட முக்கியமான நடவடிக்கை ஒன்றையும் ஜே.ஆர். எடுத்தார். அதாவது, 1971 ஆயுதக் கிளர்ச்சி காரணமாக சிறீமாவோ அரசால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜேவீரவையும், அந்த இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களையும், எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி சிறையிலிருந்து விடுதலை செய்தார். அரசியல் உள் நோக்கத்துடனேயே ஜே.ஆர். அவர்களை விடுதலை செய்தார் என்பதை பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் நிரூபித்துள்ளன.
விடுதலை செய்யப்பட்ட ஜே.வி.பி. தலைவர் விஜேவீர, நாடு முழுவதும் சென்று அரசியல் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்கள் சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜே.ஆர். அரசுக்கெதிராக நடத்தப்படவில்லை.
மாறாக, செத்த பாம்பை அடிப்பது போல, தேர்தலில் தோல்வியடைந்திருந்திருந்த சுதந்திர கட்சிக்கெதிராகவே நடத்தப்பட்டது. அந்தக் கூட்டங்களின் இரு தலைப்புகளே அதற்கு உதாரணம்.
விஜேவீர நடத்திய கூட்டங்களின் ஒரு தலைப்பு:
‘பண்டாரநாயக்க வம்சத்தின் வீழ்ச்சி’ என்பதாகும்.
மற்றைய தலைப்பு:
‘ஹொரகொல்லை வளவின் முடிவு’ (ஹொரகொல்லை வளவு என்பது, அத்தனைகலவில் பண்டாரநாயக்கவின் வீடு அமைந்திருந்த வளவு ஆகும்)இந்த இரண்டு தலைப்புகளும் பண்டாரநாயக்கவின் குடும்பத்துக்கும், சுதந்திரக் கட்சிக்கும் எதிரானவையாகும். ஜே.வி.பி. தலைமையின் கருத்துப்படி, இந்தத் தலைப்புகள் இலங்கையில் பண்டாரநாயக்க வம்ச ஆட்சி முடிந்துவிட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.
ஆனால், உண்மையில் அதை முடித்து வைத்தது ஜே.வி.பி. 1971 இல் நடத்திய ஆயுதக் கிளர்ச்சி அல்ல. அப்படியானால் யார் அதை முடித்து வைத்தது? ஜே.வி.பியின் கருத்துப்படி, 1977 இல் ஐ.தே.கவின் அமோக வெற்றியே அதை முடித்து வைத்தது என்பதுதான் அர்த்தம். அதற்காகவே ஜே.வி.பியின் இந்தக் கொண்டாட்டம்.

இத்தகைய ஒரு வேலையை விஜேவீர செய்யட்டும் என்றுதான் ஜே.ஆர். அவர்களை சிறையிலிருந்து விடுவித்தார். அவரின் உள் நோகத்தைப் புரிந்துகொண்டு, விஜேவீர சுதந்திரக் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு, ஜே.ஆருக்கு தனது நன்றிக் கடனைச் செலுத்திக் கொண்டார். ஆனால், ஜே.ஆர்., ஜே.வி.பியைப் பயன்படுத்தும் வேலையை நிறுத்தவில்லை. வேறு ஒரு வடிவத்தில் அதைத் தொடர்ந்தார்.
1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவாக தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்தது. அவர்கள் வடக்கு கிழக்கில் இருந்த அனைத்துத் தொகுதிகளிலும் (18) வெற்றி பெற்றிருந்தனர். இந்த வெற்றியை ஜே.ஆரால் சீரணிக்க முடியவில்லை. எனவே, தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டார்.
தனது திட்டத்தை நிறைவேற்ற தமிழர்களைப் பார்த்து, ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ எனப் பகிரங்கமாக சவால் விட்ட ஜே.ஆர்., அரச ஆதரவுடன் தலைநகர் கொழும்பிலும், தென்னிலங்கையின் பிற பகுதிகளிலும், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களக் காடையர்களைப் பயன்படுத்தி இன வன்செயலைத் தூண்டி விட்டார்.
இதனால், தமிழ்களுக்கு உயிர், உடமை இழப்புகள் பாரியளவில் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முதலில் அகதி முகாம்களில் தஞ்சமடைந்து, பின்னர் ‘லங்கா ராணி’ என்ற கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆட்சிக்கு வந்தவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிராக ஜே.ஆர். அரசு மேற்கொண்ட இந்த இன வன்செயல் அண்டை நாடான இந்தியாவினதும் ஏனைய நாடுகளினதும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
தனது அரசு மீதான இந்தக் குற்றச்சாட்டைத் திசை திருப்புவதற்கும் ஜே.வி.பி. இயக்கத்தையே ஜே.ஆர். கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஜே.வி.பியே தமிழ் மக்களுக்கெதிரான இந்த வன்செயலை நிகழ்த்தியது எனக் கூறிய ஜே.ஆர்., ஜே.வி.பி. இயக்கத்தைத் தடை செய்தார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்த, ஜே.வி.பியின் தமிழர் விரோத நிலையைப் பயன்படுத்திக் கொண்டார்.
ஜே.ஆரின் குள்ள மூளை வேறு விதமாகவும் சிந்தித்தது. போலியான இடதுசாரி அமைப்பான ஜே.வி.பியுடன் சேர்த்து. உண்மையான இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி என்பனவற்றுக்கும் தடை விதித்தார்.
அந்த இரு கட்சிகளின் அலுவலகங்களுக்கும் ‘சீல்’ வைத்த ஜே.ஆர். அரசு, அவற்றின் தினசரிப் பத்திரிகைகளான ‘அத்த’. ‘தினமின’ என்பனவற்றுக்கும் தடை விதித்தது. அந்தக் கட்சிகளின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜே.ஆர். அரசு தானே முன்னின்று தமிழர்களுக்கு எதிரான வன்செயலை நடத்திவிட்டு, வேண்டுமென்றே இடதுசாரிக் கட்சிகள் மீது பழி சுமத்தியது.
இதன் மூலம் மீண்டுமொருமுறை ஐ.தே.கவும் ஜே.ஆரும் ஜே.வி.பியை தமது நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு ஏற்ப இசைவான முறையில் ஜே.வி.பியின் நடவடிக்கைகள் அமைந்திருந்ததே காரணமாகும்.
ஜே.வி.பியின் 1971 ஆயுதக் கிளர்ச்சியும், அதைத் தொடர்ந்த அதன் செயல்பாடுகளுமே இலங்கையில் உண்மையான இடதுசாரி இயக்கம் வீழ்ச்சி அடைவதற்குப் பிரதான காரணியாகும். அந்த வீழ்ச்சியிலிருந்து இன்றுவரை இடதுசாரி இயக்கம் மீள முடியாமல் உள்ளது..
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!