ilakkiyainfo

ilakkiyainfo

ஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்

ஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்
January 04
16:52 2020

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஹோசூர் கிராமத்தில், படித்த இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மற்றும் எல்லோரும் படிக்கும் பள்ளிகளிலேயே படிப்பது, கிராம கோயில்களில் நுழைவது என்று முன்னெடுத்த இயக்கம் 2019 டிசம்பர் 14ஆம் தேதியன்று உள்ளூர் கோயிலில் நுழையும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

”எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது. எங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக இப்போதுதான் கோயிலுக்குள் நாங்கள் நுழைந்திருக்கிறோம். கோயில் கருவறையில் சாமி எப்படி இருக்கும் என்று இதுநாள் வரை எங்களுக்குத் தெரியாது. கோயிலுக்குள் நுழைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். நாங்களும் இப்போது மத சடங்குகளைச் செய்ய முடிகிறது,” என்று தலித் சமூகத்தைச் சேர்ந்த சுரேந்திரா கூறினார்.

ஹோசூர் கிராமத்தில் மிகப் பழமையான கோயிலில் தலித் மக்கள் நுழைய 2019 டிசம்பர் 14 ஆம் தேதி முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது.

இது அவ்வளவு எளிதான பயணமாக இருக்கவில்லை. ஊர்ப் பெரியவர்களிடம் பல ஆண்டுகளாக அந்த மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். பல போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது. மேல் சாதியினர் என கூறிக் கொள்ளும் சாதிகளின் பெரியவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்த கடைசியில் காவல் துறையினர் தலையிட வேண்டியதாயிற்று.

7000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட ஹோசூர் கிராமத்தில் சுமார் 400 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன.

2019 செப்டம்பர் 10ஆம் தேதி வந்த இஸ்லாமியர்கள் கொண்டாடும் ‘மொகரம்’ திருநாளுக்கு முன்னதாகவே இந்த இயக்கத்துக்கான விதைகள் ஊன்றப்பட்டன என்று பெங்களூருவில் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த ரங்கசாமி பிபிசியிடம் தெரிவித்தார்.

”தீண்டாமை என்ற பெயரில் எவ்வளவு காலத்துக்கு எங்களை தள்ளி வைத்திருக்க முடியும்? மொகரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க எங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஊர்ப் பெரியவர்களிடம் நீண்ட காலமாக நாங்கள் கேட்டு வந்தோம். அவர்கள் இதை ஏற்காத காரணத்தால், வேறு வழியின்றி போராட்ட வழியைத் தேர்வு செய்தோம்,” என்று ரங்கசாமி கூறினார்.

2019 ஆகஸ்ட் 19ஆம் தேதி முகரம் திருவிழா நாளில் விளையாடுவதற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி கர்னூல் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தோம் என்று அவர் தெரிவித்தார்.

_110374631_40bc74ac-df94-4df3-a837-2e40c9bc0e89மொகரம் நாளில் இறைதூதர் நபியின் நினைவாக நிகழ்வுகள் நடைபெறும். இஸ்லாமியர் அல்லாதவர்களும் அவற்றில் பங்கேற்பார்கள். ஆனால் அந்த நிகழ்வுகளில் பங்கேற்க தலித்துகளை அனுமதிக்காமல் இருந்தனர் என்று அந்தப் பகுதிக்கான காவல் துறை டி.எஸ்.பி. நரசிம்ம ரெட்டி கூறினார்.

”மொகரம் நிகழ்வுகளில் பங்கேற்க தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தலித் மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தபோதிலும், அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. தலித்துகளையும் பங்கேற்க அனுமதிக்காவிட்டால், யாரையும் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று நாங்களும் கூறினோம். இருந்தபோதிலும், எங்கள் அறிவுறுத்தல்களை அவர்கள் மீறி, மொகரத்துக்கு முந்தைய நிகழ்வுகளில் சில இளைஞர்கள் பங்கேற்றனர்.”

”காவல் துறையினர் அங்கு சென்றபோது, தலித் அல்லாதவர்கள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காவல் துறையினர் சிலர் காயமடைந்தனர். காவல் துறையினரின் சில வாகனங்கள் சேதமடைந்தன. எங்களைத் தாக்கியவர்கள் மீது நாங்கள் வழக்குகள் பதிவு செய்திருக்கிறோம்.”

”காவல் துறையினர் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளால் கிராமத்தில் சூழ்நிலை மாறியது. காவல் துறையினரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் தலித் மக்களுக்கு ஆதரவாக நின்றனர். அதையடுத்து தலித் மக்கள் கோயிலில் நுழைய மேல் சாதி என்று கூறிக்கொள்ளும் சாதிகளின் பெரியவர்கள் கடைசியாக அனுமதிக்க வேண்டியதாயிற்று.”

”அதே சமயத்தில், இரட்டை குவளை முறை (பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் டம்ளர்கள்) நடைமுறை இருந்ததும், உணவகங்களில் தலித்துகளுக்கு தனியாக இடம் ஒதுக்கியிருப்பதும், ஆட்டோ ரிக்சாக்களில் மற்றவர்களுடன் சேர்ந்து தலித் மக்கள் பயணம் செய்ய தடை செய்வதும் எங்கள் கவனத்துக்கு வந்தது.”

”கிராமத்தினரிடம் நாங்கள் பேசி இந்த பாகுபாடுகளுக்கு முடிவு கட்டினோம். டிசம்பர் 14ஆம் தேதி கிராமத்தின் தலித் மக்கள் கோயிலில் நுழைந்தனர், கிராமத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டது,” என்று நரசிம்ம ராவ் கூறினார்.

கிராமத்தில் தலித்துகள் எதிர்கொள்ளும் அவலத்துக்கு முடிவு கட்டுவதற்காக, தனியார் கல்லூரி விரிவுரையாளர் பணியை ரங்கசாமி ராஜிநாமா செய்துவிட்டு, இதற்கான இயக்கத்தில் பங்கேற்றார். வேறு சிலரும் அவருடன் கைகோர்த்தனர், சிலர் தங்களுடைய வேலைகளை ராஜிநாமா செய்துவிட்டு வந்தனர். அவர்களில் யாரும் உயர் பொறுப்பிலான வேலைகளில் இல்லை.

”ஏப்ரல் மாதம் எனக்குத் திருமணம் ஆனது. மாதச் சம்பளம் ரூ.25,000 கிடைத்து வந்தது. சமூக பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்க என் வேலையை ராஜிநாமா செய்ய வேண்டியதாயிற்று,” என்று ரங்கசாமி கூறினார்.

_110374632_4a4586f5-0b45-445d-a28a-3e05cd45e5c1”வேலையை ராஜிநாமா செய்ததற்காக என் மனைவியும் அவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு வேறு சொத்துகள் எதுவும் கிடையாது. என் பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள்.”

”இப்போது என் வேலையை விட்டுவிட்டு சேவைக்கு வந்திருக்கிறேன். என்னுடைய நோக்கத்தை என் குடும்பத்தினர் புரிந்து கொள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.”

எங்களைப் போன்ற படித்தவர்கள் முன்முயற்சி எடுத்து நமது உரிமைக்காகப் போராடாவிட்டால், இந்த இயக்கம் பாதியிலேயே செத்துவிடும் என்று ரங்கசாமி கூறினார்.

தலித்துகள் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட மக்கள் பல ஆண்டு காலமாகப் பார்த்திராத கோயில் மணிகள், சுவர்கள் மற்றும் மூலவரைக் காண, காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் டிசம்பர் 14ஆம் தேதி கோயிலுக்குள் செல்ல முடிந்தது.

கோயிலுக்குள் நுழைந்தது குறித்து கிராம மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஹோசூரில் தலித் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ரமேஷ் இதுபற்றி பிபிசியிடம் பேசினார். ”கோயிலுக்குள் வரக் கூடாது எங்களை மிரட்டி வைத்திருந்தனர். கருவறையில் சாமி எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. நீங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், எதற்காக வந்தீர்கள் என்பது போன்ற வார்த்தைகளை நாங்கள் கேட்பது வழக்கமானதாக இருந்தது,” என்றார் அவர்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. நாங்கள் கோயிலுக்கு வர முடிகிறது. என் வாழ்நாளுக்குள் இது நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. என்னால் செய்ய முடியாதவற்றை, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களால் செய்து காட்ட முடிந்துள்ளது.”

ரமேஷின் மனைவி ராணி மும்பையில் வளர்ந்தவர். கோயிலுக்குள் தலித்துகளை அனுமதிப்பதில்லை என்பதை அறிந்தபோது, ஏதோ தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

_110374633_b8ed9fc9-bd9e-462f-9a6d-c9657dd43a2a”இங்கு பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் பற்றி எனக்குத் தெரியாது. கோயிலில் இருந்த ஒரு பெண்மணி, என் சாதியைக் கேட்டார். அப்படி கேட்டது எனக்கு விநோதமாகத் தோன்றியது. மும்பையில் யாரும் என் சாதி பற்றிக் கேட்டது கிடையாது. அந்தக் கேள்வியை கேட்டு அதிர்ச்சியில் நான் திரும்பிவிட்டேன். கோயிலில் நாங்கள் இப்போது நுழையலாம் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று ராணி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கிராமத்தின் தலைவர்கள் என்று கூறிக் கொண்ட சிலரிடம் இதுபற்றிப் பேச பிபிசி தெலுங்கு செய்திப் பிரிவு முயற்சி மேற்கொண்டது. ஆனால் ஊடகத்தினருடன் பேச அவர்கள் மறுத்துவிட்டனர். தொலைபேசி மூலம் பேச சிலர் ஒப்புக்கொண்டனர்.

கோயிலுக்குள் தலித்துகள் நுழைய கிராமத்தினருக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது என்று கிராம வருவாய் அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற சுரேந்திரநாத் ரெட்டி கூறினார்.

”எங்களுடன் பேசுவதற்குப் பதிலாக, காவல் துறையினரை அவர்கள் நாடியது எங்களுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் நாங்கள் தானே சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும்” என்று அவர் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்தார்.

தங்களிடம் சாதி பாகுபாடு ஒருபோதும் இருந்தது கிடையாது என்று அவர் உறுதிபட கூறினார்.

”கோஷ்டி மோதல் ஏற்படும் என்ற அச்சம் காரணமாகத்தான் மொகரம் நிகழ்ச்சிகளில் தலித்கள் பங்கேற்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம்” என்று ஹோசூர் கிராம முன்னாள் அலுவலர் சீனிவாசலு தெரிவித்தார்.

”எந்தக் காரணமும் இல்லாமல் காவல் துறையினர் தடியடி நடத்தி, கிராமத்தினர் 17 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் 45 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, ஜாமீனில் வந்துள்ளனர்.”

ஆனால், மொகரம் நிகழ்வுகளில் பங்கேற்கவும், கோயிலில் நுழையவும் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஊர்ப் பெரியவர்களிடம் தாங்கள் கோரிக்கைகள் விடுத்தும், ஏற்காத காரணத்தால்தான் காவல் துறையினரின் உதவியை நாட வேண்டியதாயிற்று என்று தலித் இளைஞர்கள் கூறுகின்றனர்.

_110374634_80af1f0a-efcb-46c0-8b62-49e62da3cc75”இதை எவ்வளவு காலத்துக்கு நாங்கள் சகித்துக் கொண்டிருக்க முடியும்” என்று ரங்கசாமி கேள்வி எழுப்பினார்.

”நாங்கள் சாதித்துள்ளதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. சாப்பிடுவதற்கு ஓட்டலுக்குப் போனால், தனியாக உட்கார வைப்பார்கள். இப்போது மற்றவர்களுடன் நாங்கள் உட்காரலாம். எங்கள் குடும்பங்களில் யாராவது இறந்து போனால், உடலை மயானத்திற்கு வேறு பாதை வழியாகத்தான் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று மற்றொரு தலித் இளைஞர் சுரேந்திரா கூறினார்.

”ஒரு தனியார் பள்ளியில் எங்கள் குழந்தைகளை ஒருபோதும் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படி சேர்த்தால் மற்ற குழந்தைகள் வராமல் போய், மாணவர் சேர்க்கையை இழக்க வேண்டியிருக்கும் என்று ஒரு முறை பள்ளிக்கூட நிர்வாகம் கூறியது.”

இப்போது அவர்கள் தலித் காலனிகளுக்கு வந்து, எங்கள் குழந்தைகளை தங்கள் பள்ளியில் சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இப்போது எல்லோருடனும் சேர்ந்து எதையும் செய்வதற்கு சம உரிமையை நாங்கள் பெற்றிருப்பதாக நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
பாகுபாடு முடிவுக்கு வந்துவிட்டதா?

ஹோசூர் கிராமத்தில் அமைதி நிலைநாட்டப் பட்டுவிட்டது என்று காவல் துறையினர் கூறுகின்றனர். இருந்தபோதிலும் கிராமத்தில் அச்சம் கலந்த அமைதி நிலவுவதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

கோயிலுக்குள் தாங்கள் நுழைந்த நாளில் நடந்தவற்றை நினைவுபடுத்தும் அவர்கள், பூசைகள் செய்ய பூசாரிகள் யாரும் இல்லை என்றும், அன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவுக்கு யாரும் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு நாங்கள் தாக்கப்பட மாட்டோம் என்று தலித்கள் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று காவல் துறையினரிடம் நாங்கள் கோரினோம். அப்போதுதான் அமைதி நிலைநாட்டப் பட்டதாக நாம் கூற முடியும் என்று கிராமத்தினர் குறிப்பிடுகின்றனர்.

_110374635_b4b13e2f-f9c2-416e-a523-aaa40709b460மாநிலத்தில் பல கிராமங்களில் இன்னும் சமூக பாகுபாடு இருப்பதாகக் கூறும் மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாகி ராம்குமார், பல கிராமப் பகுதிகளில் இன்னும் அந்தப் பாகுபாடு நிலவுகிறது எனஅறு தெரிவித்தார்.

சில சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல நடத்தப்படுகின்றனர் என்றார் அவர்.

அந்த மக்களை அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிகளாக மட்டும் பார்க்கின்றன. தேர்தலின்போது பணம், மது கொடுத்து அவர்களுடைய வாக்குகளைப் பெற்றுவிடுகிறார்கள் என்று ராம்குமார் கூறினார்.

அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த, பாகுபாட்டை ஒழிக்க கல்விதான் ஒரே ஆயுதமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாலினம் மற்றும் பாரம்பர்யத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது மாநிலத்தில் பல பகுதிகளில் காணப்படுகிறது. அனந்தபுர் மாவட்டத்தில் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில், மாத விலக்கான மற்றும் குழந்தை பிறந்த நிலையில் உள்ள பெண்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு கிராமத்துக்கு வெளியே தங்கவைக்கப் படுகின்றனர். இதுபற்றிய செய்தியை பிபிசி தெலுங்கு செய்திப் பிரிவு 2018 மார்ச் மாதம் ஒளிபரப்பியது.

தமிழ்நாட்டில் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர்கள், இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல பாதை மறுக்கப்பட்டதால், பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கியது பற்றிய செய்தி ஆகஸ்ட் 2019ல் வெளியானபோது, அந்த காணொளி வைரலானது.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஆந்திராவில் உப்புலூரு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் தலித்துகள்தான் பூசாரிகளாக உள்ளனர். அந்தகி கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் அந்தக் கோயிலில் வழிபட்டு வருகிறார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News