‘அகரம்’ அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவி ஒருவர் தனது குடும்பச் சூழல் குறித்து மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, நடிகர் சூர்யா அழுதது சமூக ஊடகங்களில் பரவலானது.
ஞாயிறன்று நடந்த அந்த நூல் வெளியீட்டுவிழாவின் பின்னர், அதில் பேசிய மாணவி காயத்ரியும் கவனம் பெற்றுள்ளார்.
தனது குடும்பப் பின்னணி, அப்பாவின் மரணம், படிப்பு, வேலை என்று தன்னைப் பற்றி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் ‘அகரம்’ அறக்கட்டளையின் உதவியுடன் தற்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் காயத்ரி.
“தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள நெய்வாசல் என்கிற கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். அப்பா கேரளாவில் தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அம்மா வயல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் 440. அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்ணும், சமூகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும் எடுத்திருந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் நான் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுப்பேன் என என் தந்தை நினைத்தார். ஆனால் நான் எடுத்த மதிப்பெண் 765.”
“அதுவரையில் ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்த குடும்பசூழல் மிகவும் மோசமாக மாற ஆரம்பித்தது. அப்பாவினால் வேலைக்குச் செல்ல முடியாமல் போனதும் அதற்கு ஒரு காரணம்.”
“பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.
சிகிச்சையின் முடிவில் அப்பாவிற்கு வாய்ப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்த சமயத்திலிருந்து அப்பாவை மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் கூட்டிச் செல்ல ஆரம்பித்தேன்.”
அதன் காரணமாகவே, பன்னிரெண்டாம் வகுப்பில் படிப்பில் தன்னால் கவனம் செலுத்த முடியாமல் போனது என்றவர் தன்னுடைய அப்பாவிற்கு புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவருடைய குடும்பத்தில் நடைபெற்ற விஷயங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

“மருத்துவமனையில் அப்பாவை பார்த்துக் கொள்ள ஓர் ஆள் வேண்டும் என்பதால் சில நாட்களில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டோம்.
தினமும் அவருக்கு மின்சாரம் மூலமாக சிகிச்சை அளிப்பார்கள். அந்த சிகிச்சையின் முடிவில் கொஞ்சம் வலி குறைந்ததாக அப்பா சொல்லுவார்.
அதற்காக, வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு தினசரி 20 கிமீக்கு மேலாக பயணப்படுவோம். அந்தப் பயணத்திற்கான பணமும் நாங்கள் வாங்கிய கடன்களுள் ஒன்று.”
“அப்பாவால் சாப்பிட முடியாது என்பதால் மிக்ஸியில் சாப்பாட்டை அரைத்துக் கொடுப்பார்கள். சமைக்கும்போதெல்லாம் வாசனை சூப்பராக இருக்கிறது. ஆனால், என்னால் சாப்பிட முடியவில்லையே என அவர் அழுத நாட்களும் உண்டு.”
“தொண்டையிலும், வயிற்றிலும் அவருக்கு குழாய் போட்டிருப்பார்கள். தொண்டை மூலமாகத்தான் அவர் சுவாசித்துக் கொண்டிருந்தார்.
அவரால் சுலபமாக பேச முடியவில்லை. எனக்கு எப்படியும் சரியாகிவிடும். என் பிள்ளைகளுக்காக நான் வாழனும் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். கிட்டத்தட்ட ஒரு வருடம் புற்று நோயுடன் போராடினார்.”
“நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, என் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அகரம் மூலமாக பட்டப்படிப்பு படிப்பதைத் தெரிந்து கொண்டேன். அவரிடம் உதவிகேட்டு அகரத்திற்கு எழுதி அனுப்பினேன்.
அந்த சமயத்தில் குடும்ப சூழல் காரணமாக, எங்களைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் என்னை படிக்க அனுப்பாமல் வேலைக்கு அனுப்பச் சொன்னார்கள்.”
“அதோடு சேர்த்து இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்துக் கொடுத்து விடுங்கள் என கூற ஆரம்பித்தார்கள். அதனாலேயே அப்பா என்னை வெளியூரில் படிக்க வைக்க நினைத்தார்.”
“அகரத்தில் தேர்வானவுடன் அப்பாதான் என்னை சென்னைக்கு அழைத்து வந்தார். ஒருநாள் முழுக்க என்னுடன் அவர்தான் இருந்தார்.
ஆனால், அந்த நாள் முழுவதும் அவர் சாப்பிடவே இல்லை. டீ குடிக்கலாம் என்றாலும் சிரின்ஞ் மூலமாகத் தான் குடிக்க முடியும். பெரும்பாலும் புற்றுநோயாளி எனக் கூறினால் டீ கூடக் கொடுக்க மாட்டார்கள்.
ஒருமுறை அப்பாவை அழைத்துக் கொண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த சமயமெல்லாம் அப்பா மெலிந்துபோய் இருந்தார். முதன் முதலாக மொட்டை அடித்து அப்பாவை அப்பொழுதுதான் பார்த்தேன்.”
“அப்பொழுது அப்பாவின் பக்கத்தில் ஒருவர் அமர்ந்தார். அவர் அப்பாவைப் பார்த்துவிட்டு அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டார்.
அவருக்கு கேன்சர் என நான் சொன்ன அடுத்த நொடி அவர் அப்பாவின் அருகிலிருந்து எழுந்து பின்னால் போய் அமர்ந்து கொண்டார்.
அதிலிருந்து யார் கேட்டாலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதுடன் முடித்துக் கொள்வேன். அடுத்தவர்களை கடிந்தும் பேசாதவருக்கா இந்த நிலை என அடிக்கடி என்னுள் கேட்டுக் கொள்வேன்.”
“நான் கல்லூரியில் சேர்ந்த ஐந்தாவது மாதத்தில் அப்பா தவறிவிட்டார் என்கிற செய்தி வந்தது.
அவருடைய இறுதிச் சடங்கிற்கு கூட கடன் வாங்க வேண்டிய சூழலில் தான் இருந்தோம். அப்பா இறப்பிற்கு பிறகு அம்மாவும், தம்பியும் சாப்பிடக் கூடப் பணத்தை செலவழிக்காமல் கடனை அடைத்துக் கொண்டிருந்தார்கள். “
“அம்மாவும், தம்பியும் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
அதனால் நானும் வேலைக்கு போகிறேன் என அம்மாவிடம் கூறினேன். நீ படிச்சா மட்டும்தான் சாமி நம்ம குடும்பம் மாறும்னு அம்மா உட்பட பலரும் சொன்னதால் மட்டுமே எப்படியாவது மூன்று ஆண்டுகள் படித்து முடித்துவிட வேண்டும் என நினைத்தேன்.”
“தம்பி பத்தாவது முடிக்கவும் ஐடிஐ படிக்க விரும்பினான். அம்மாவால் பணம் கட்ட முடியவில்லை என்பதால் அவனை வேலைக்கு அனுப்பினாங்க. ஒரு மாதம் வேலைக்குப் போனான். சுற்றியுள்ள அனைவரும் பையனுடைய படிப்பை கெடுத்து வேலைக்கு ஏன் அனுப்புறன்னு அம்மாவை கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. “