இடைநிறுத்தம்:

ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையைச் சேர்ந்தவர்.  ஈரோஸ் இயக்க தலைமையோடு மைக்கேலுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் தங்கச்சிமடத்தில் இருந்த ஈரோஸ் முகாமுக்கு மைக்கேல் தான் பொறுப்பாக இருந்தார். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட  ஆயுதங்களும் அந்த முகாமில் வைக்கப்பட்டுத்தான் தளத்திற்கு அனுப்பப்படுவதுண்டு.

தங்கச்சிமடத்தில் ஈரோஸ் முகாமுக்கு  அருகில்தான் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்றும் இருந்தது.

மைக்கேலின் பிரச்சனை புலிகளுக்கும் தெரியும். உள் பிரச்சனையால் விரக்தி நிலையில் இருந்த மைக்கேல் சக இயக்கங்களுக்கும் ஈரோஸ் உள்பிரச்சனை தொடர்பாக கூறியிருந்தார்.

மைக்கேலின் போக்கு ஈரோஸ் தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவரை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இயக்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிக்குமாறு மைக்கேலுக்கு கூறப்பட்டது.

தங்கச்சிமடத்துக்கு செல்ல வேண்டாம். சென்னையிலேயே இருங்கள் என்று மைக்கேலுக்கு கூறிவிட்டார் சங்கர்ராஜு.

தன்னை வெட்டிவிடப் பார்க்கிறார்கள் என்று நினைத்தார் மைக்கேல். ‘தன்னை கட்டுப்படுத்தும் தகுதி சென்னையில் உள்ளவர்களுக்கு கிடையாது.

தளத்தில் உள்ள தோழர்கள் தனது பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று கூறினார் மைக்கேல்.

சென்னையில் உள்ள ஏனைய இயக்க தலைவர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை கூறினார்.

நடுக்கடலில்

சென்னையில் இருந்து புறப்பட்டு நேராக தங்கச்சிமடத்துக்குச் சென்றார் மைக்கேல். தங்கச்சிமடம் முகாமில் இருந்தவர்கள் பலர் மைக்கேலுக்கு விசுவாசமானவர்கள்.

அக்காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் தங்கச்சிமடம் முகாமில்தான் வைக்கப்பட்டிருந்தன.

முன்பு வழங்கப்பட்ட  ஆயுதங்களை விட புதியரக ஆயுதங்களையும் அக்கட்டத்தில்தான் இந்திய அரசு கொடுத்திருந்தது.

மோட்டார்கள், 90 கலிபர் துப்பாக்கிகள் 2 உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் அங்கு இருந்தன. மைக்கேல் ஆயுதங்களை கணக்கிட்டுப்பார்த்தார்.

தனியாக ஒரு இயக்கம் நடத்துவதானால் கூட தாராளமாகப் போதும்.

சகல ஆயுதங்களையும் படகொன்றில் ஏற்றினார். நம்பகரமான சிலருடன் புறப்பட்டார். ஈரோஸ் உறுப்பினரும், படகோட்டியுனமான மன்னாரைச் சேர்ந்த வீராதான் படகை செலுத்தினார்.

படகு புறப்பட்டு கடலில் சென்று கொண்டிருந்தபோதுதான்  தொலைத்தொடர்பு சாதனம் மூலமாக தகவல் சொன்னார் மைக்கேல்.

மைக்கேல் ஆயுதங்களுடன் புறப்பட்டுவிட்ட செய்தி சென்னையில் இந்த ஈரோஸ் தலைமைக்கு பலத்த அதிர்ச்சி. அவர்கள் தளத்தில் இருந்தவர்களுக்கு அவசரமாகச் செய்தி அனுப்பினார்கள்.

நேராக மன்னார் சென்று இறங்குவதுதான் மைக்கேலின் திட்டம். மன்னாரில் ஒரு தளத்தை வைத்துக்கொண்டு பின்னர் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கலாம் என்பதுதான் அவரது நினைப்பு.

ஆயுதங்களோடு மைக்கேல் புறப்பட்ட போதே தங்கச்சிமடத்தில் இருந்த புலிகளுக்கு அது தெரிந்துவிட்டது.

kadalpadaiiமைக்கேல் சென்ற படகு நடுக்கடலில் வைத்து புலிகளின் படகொன்றால் வழிமறிக்கப்பட்டது.

படகில் இருந்தவர்கள்மீது  சரமாரியாகச் சுட்டனர் புலிகள்.  மைக்கேல், வீரா உட்பட படகில் இருந்தவர்கள் அனைவரும் பலியானார்கள்.
அவர்கள் படகில் இருந்த ஆயுதங்களை தமது படகில் ஏற்றினார்கள் புலிகள்.

ஆயுதங்கள் அனைத்தும்   ஏற்றப்பட்டதும் மைக்கேல் குழுவினரின் படகு தகர்க்கப்பட்டது. நடுக்கடலில் படகு எரிந்துகொண்டிருந்தது.

தங்கச்சிமடத்தில் இருந்து புறப்பட்ட மைக்கேல் குழுவினர் எங்கே போய் இறங்கினார்கள்? என்ன செய்கிறார்கள்? என்று அறிய முடியாமல் யோசித்துக் கொண்டிருந்தது ஈரோஸ் தலைமை.

சில நாட்களின் பின்னர்தான் விஷயம் மெல்லக் கசிந்து, நடுக்கடலில் விபரீதம் தெரியவந்தது.

புலிகளுடன்  முரண்படுவதை  விரும்பாததால் கடலில் நடந்த சம்பவம் பற்றி ஈரோஸ் வெளியே சொல்லவில்லை.

ஈரோசுக்குள் மைக்கேல் பிரச்சனைபட்டது வெளியே தெரியும் என்பதால், மைக்கேலைக் காணவில்லை என்றதும் ஈரோஸ்மீதுதான் ஏனைய இயக்கங்கள் சந்தேகப்பட்டன.

ஈரோசுக்குள் நடந்த உட்கொலை என்று அதனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டனர்.

மைக்கேல் சுறு சுறுப்பான ஒரு போராளி. நாவாந்துறையில் இருந்து பலரை ஈரோசில் இணைத்தார். அரசியல் வகுப்புக்கள் நடத்தி ஈரோசிற்கு உறுப்பினர்  திரட்டலில்  தீவிரமாக செயற்பட்டவர்களில் முன்னணியில் இருந்தவர் மைக்கேல்.

என்ன நடந்தது, எப்படி மறைந்தார் என்றே மக்களுக்குத் தெரியாமல் அவரது மரணம் நிகழ்ந்ததுதான் மாபெரும் சோகம்.

ஈரோசின் தனித்துவம்

கடந்த சில வாரங்களாக ஈரோசின் இராணுவ நடவடிக்கைகள் பற்றி விபரித்திருந்தேன்.  ஈழப்போராளி அமைப்புக்குள் ஆயதப்போராட்டத்தை முன்னோக்கி  நகர்த்தியதில்  ஈரோஸின் பங்கு குறிப்பிடத்தக்கதாயிருந்தது.

1983 இல் ஏனைய இயக்கங்கள் சில விதிமுறையற்ற வகையில் உறுப்பினர் திரட்டலில் ஈடுபட்டன. சக்திக்கு மீறிய வகையில் உறுப்பினர் பெருக்கம் ஏற்பட்டு, அதுவே பின்னர் ஒழுக்க மீறல்கள், கட்டுப்பாடற்ற தன்மை என்பவற்றுக்கும் காரணமாயின.

ஈரோஸ் அந்த அலையில் சிக்கிக் கொள்ளாமல் இருந்தது. 1987 வரை உறுப்பினர் தொகையைப் பொறுத்தவரை ஈ.ரோஸ் ஏனைய இயக்கங்களை விட பின்னணியில் தான் இருந்தது.

அதே சமயம் குண்டுவெடிப்புக்கள், வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல்கள் மூலம் ஈரோஸ் முன்னணியில் இருந்தது.

உறுப்பினர்களது எண்ணிக்கை குறைந்தளவில் இருந்ததும் ஈரோஸ் கெட்ட பெயரை சம்பாதிக்காமல் தப்பிக் கொண்டதற்கு ஒரு பிரதான காரணம் எனலாம்.

உறுப்பினர்களது எண்ணிக்கையியை வைத்து மட்டுமே ஒரு இயக்கத்தின் ஆற்றலை மதிப்பிட முடியாது என்பதற்கு ஈரோஸ் ஒரு உதாரணம்.

ஈரோஸ் இயக்கத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகளில் பங்குகொண்ட பலர் தற்போது ஒதுங்கிச் சென்றுவிட்டனர்.

ஐ.பி.ரி வரதன் தற்போது கிளிநொச்சியில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார். ஈரோஸ் இயக்க துணைத்தளபதியாக இருந்த கரண் வெளிநாட்டில் இருக்கிறார்.

மலையகத்தைச் சேர்ந்த முன்னணி உறுப்பினர்களான கிருஷணன், வரதன் ஆகியோர் ஒதுங்கிவிட்டனர். லொறிக் குண்டோடு கைதான ஹென்றி வெளிநாட்டில் இருக்கிறார்.

மட்டக்களப்பு, திருமலை, யாழ்ப்பாணம், மன்னார் பிராந்தியங்களில் ஈரோஸ் பொறுப்பாளர்களாக இருந்து முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் ஒதுங்கி வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

ஈரோஸ் இயக்கம் 1987ற்கு பின்னர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் காரணமாகவே தனது சக்திமிக்க முன்னணிப் போராளிகளை இழந்தது.

உறவுகளும் – பிரிவுகளும்

devaஒரே பெயரில் இரண்டு இயக்கங்கள்

அதேபோல 1987 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பும் சமரசத்திற்கே இடமில்லாத வகையில் இரண்டாக உடைந்தது.

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் செயற்பட்டவர்கள் தாமே உண்மையான ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்று உரிமை கோரினார்கள்.

டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அணியினருடன் எவ்வித தொடர்போ, உறவோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று பத்மநாபா தலைமையில் செயற்பட்டவர்கள் தமது அணிக்குள் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டனர்.

பத்மநாபா உட்பட அவரது தலைமையில் செயற்படும் உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்று டக்ளஸ் தேவானந்தா அணியினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

ஒரே பெயரில் இயங்கினால் நாம் யாரை அங்கீகரிப்பது? எனவே பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றனர் இந்திய ‘றோ’ அமைப்பினர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்பது பத்மநாபா தலைமையிலான அமைப்புத்தான் என்பதே ‘றோ’வின் நிலைப்பாடாக இருந்தது.

1987 இல் மீண்டும் இயக்கங்களுக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்க முடிவு செய்தது றோ.

umamakeswaran
புளொட் பிரிவு

இதேவேளையில் புளொட் அமைப்பில் இருந்து பிரிந்து ஈஸ்வரன், பரந்தன் ராஜன் ஆகியோர் தலைமையில் ஒரு அணியினர் இயங்கிக் கொண்டிருந்தனர்.

புளொட்டும்  இரண்டாக  உடைந்து இரு பிரிவினருமே தம்மை புளொட் என்றே அழைத்துக் கொண்டனர். சென்னையில் இரு பிரிவினருக்கும் இடையே துப்பாக்கி வேட்டுக்களும் பரிமாறப்பட்டன.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இரண்டாகப் பிரிந்தபோதும் தமக்குள் ஆயுத மோதல் எதிலும் ஈடுபடவில்லை.

புளொட்டில் இருந்து பிரிந்தவர்கள் மத்தியில் ஒத்த கருத்து காணப்படவில்லை. பரந்தன் ராஜனை தமக்கு பாதுகாப்பாக பயன்படுத்தவே நினைத்தனர். ஒருவரோடு ஒருவர் நம்பிக்கையில்லாத அணியினராகவே அவர்கள் காணப்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிரிவைப் பொறுத்தவரை இரண்டு பிரிவுமே தமது தலைமைமீது விசுவாசம் கொண்டதாகவே இருந்தது.

இந்நிலையில் பரந்தன் ராஜனை ஓரம்கட்ட நினைத்த ஈஸ்வரன் குழுவினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அணியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இரண்டு அணியினரும் ஒரே இயக்கமாக மாறுவது, புதிய பெயரில் செயற்படுவது என்ற அடிப்படையில் பேச்சு நடந்தது.

ஈஸ்வரன் குழுவினர் நம்பிக்கையற்ற ஒரு குழுவினர் என்பதால் அவர்களோடு ஒன்றாகச் செயற்படுவது சாத்தியமில்லை என்று டக்ளஸ் தேவானந்தா அணியினர் கருதினார்கள். ரமேஷ், இப்ராகிம் போன்றவர்கள் ஈஸ்வரன் குழுவினரை நம்பமுடியாது என்று கூறினார்கள்.

சூழ்நிலை கருதி கூட்டாக செயற்படலாம். விதிகளை மீறினால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார். அவரது முடிவின்படி பேச்சுக்கள் நடந்தன.

plottt
கூட்டமைப்பு

இரு அணியினர் கூட்டமைப்பாக  ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF) உருவானது. ஒரே பெயரில் இயக்கிய போதும் தனியாகவும், தனித்துவமாகவுமே இரு பிரிவினரும் செயற்பட்டனர்.

முகாம்களை ஒன்றாக்க வேண்டும். ஒரே அணியாக செயற்படவேண்டும் என்று ஈஸ்வரன் குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

அப்படியானால்தான் தமது  குழுவில் உள்ள பரந்தன்  ராஜனின் செல்வாக்கை குறைக்கலாம் என்பது அவர்களின் ஆவலாக இருந்தது.
எனினும் டக்ளஸ் தேவானந்தா அணியினர் அதனை விரும்பவில்லை.

அதே நேரத்தில் ‘றோ’ பயிற்சிக்காக ஆட்கள் கேட்டது. இரண்டு அணியில் இருந்தும் ஆட்கள் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

பயிற்சி முடித்து உறுப்பினர்கள் திரும்பியதும் ஆயுதம் வழங்கப்பட்டது.

ஈ.என்.டி.எல்.எஃப். என்ற பெயரில் ஆயுதங்கள் பொதுவாக வழங்கப்பட்டது. ஆயினும் அதனை பிரித்தெடுப்பதில் இரு அணியினர் மத்தியில் கசப்பு ஏற்பட்டது.

பரந்தன் ராஜனை விமர்சித்த சிலரும் அவருடன் இணைந்து கொண்டதால் ஈஸ்வரன் குழுவுக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது.

பிளவு

இந்திய-இலங்கை ஒப்பந்த நேரத்தில் டக்ளஸ் தேவானந்தா  அணியினர்  கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டனர்.  ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள சில விடயங்களோடு உடன்படமுடியாது என்று ‘றோ’வுக்கு கூறினார்கள்.

வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு விடயம் அதில் முக்கியமானது.

அதனால் டக்ளஸ் தேவானந்தாவை அழைக்காமல், பரந்தன் ராஜனைமட்டுமே டில்லிக்கு அழைத்தது ‘றோ’. ராஜனும் யாருக்கும் அறிவிக்காமல் கனகராசா என்பவரை அழைத்துக்கொண்டு டில்லி சென்றார்.

Eelamurazu 232-1_Eelamurazu 232.qxdபரந்தன் ராஜன்

பரந்தன் ராஜனின் நடவடிக்கையால் பிரச்சனை ஏற்பட்டது.

அத்தோடு ஈ.என்.டி.எல்.எஃப். கூட்டில் இருந்து டக்ளஸ் தேவானந்தா அணியினர் வெளியேறினார்கள்.

தமது அணிக்கு  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) என்று பெயரிட்டனர்.  ஈஸ்வரன் குழுவினரும் பரந்தன் ராஜனுடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறினார்கள்.

ஈஸ்வரன் குழுவில் இருந்த யோகன், கண்ணமுத்து, அர்ச்சுனா, செல்வம் ஆகியோர் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து சில காலம் செயற்பட்டனர்.

ஈஸ்வரன்  விரக்தி நிலைக்கு உள்ளாகி ஒதுங்கிச் சென்றார்.

“ஈ.பி.டி.பி. இந்தியாவுக்கு  விரோதமான அமைப்பு. இந்தியாவின் ஆணைக்கு கட்டுப்படக்கூடாது என்பதே அதன் கொள்கை. எனவே ‘றோ’ ஈ.பி.டி.பி.க்கு உதவி வழங்கக்கூடாது” என்று பரந்தன் ராஜன் குழுவினர் ‘றோ’ அதிகாரிகளிடம் கூறினார்கள்.

அதனால் ‘றோ’வுக்கும், ஈ.பி.டி.பி.க்கும் இடையே நல்லுறவு ஏற்பட முடியவில்லை. இத்தோடு அந்த விபரம் போதும்.

நாம் மீண்டும் 1987 இன் ஆரம்பகட்டத்துக்கு திரும்பிச் செல்லலாம்.

புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா தலைமையில் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டனர் புலிகள். திட்டமும் வகுக்கப்பட்டது.

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-

 முன்னைய தொடர்கள் பார்வையிட : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை1…………….85)

தமிழ் ஈழம் என்பது தான் முடிந்த முடிவு: “தமிழ் ஈழத்தைக் கைவிடோம்”

amirrrதமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர், முன்னால் எதிர்க்கட்சி தலைவர் அமரர் தளபதி அமிர்தலிங்கம் அவர்கள் 13.07.89 அன்று புலிகளால் கொல்லப்பட்டார்.

1987இல் பிரபல எழுத்தாளர் சாமிஜிக்கு அமிர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

கொள்கை மாறுமா?

“உங்கள் ‘தமிழ் ஈழக்’ கேரிக்கையை கைவிடக்கூடிய சந்தர்ப்பமோ சூழ்நிலையோ எதிர்காலத்தில் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?” என்கிறார் டென்மார்க் நிருபர்.

“நிச்சயமாக இல்லை!

1958இலும், 1961இலும், 1977இலும் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக எங்களது கொள்கைகளுக்கு வலு ஊட்டிய வண்ணமே வருகின்றன.

நாம் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறோம்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, பல தடவைகள் நாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக இருக்கின்ற காரணத்தினால், தமிழ் பேசும் இனம் முழுவதுமே பல சித்திரவதைகளை அனுபவித்துவந்திருக்கிறது.

எத்தனையோ வழக்குகளை நாம் எதிர்நோக்கவேண்டி இருந்தது.

எத்தனையோ பல தடவைகள் பொலிசார் குண்டாந்தடிகளினால் தாக்கியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்ற பின்னருங்கூட பொலிசார் காட்டுமிராண்டித் தனமாக ரைபிளினாலும், குண்டாந்தடிகளினாலும் என்னைத் தாக்கியிருக்கிறார்கள். எந்தநாட்டிலுமே நடைபெற்றிராத அடக்குமுறை ஆணவ, சர்வதிகார நிகழ்ச்சிகள் இவை.

ஆனால்-

இவற்றினாலெல்லாம் எமது கொள்கைப் பிடிப்பு மாறப்போவது கிடையாது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எங்கள் இனத்தின் ஒற்றுமைக்கும், கொள்கை உறுதிக்கும் எருக்களாகவே பயன்பட்டு வருகின்றன.

தமிழ் ஈழம் என்பது தான் முடிந்த முடிவு.

ஆனால்-இது சமாதான முறையில் அமையப்போகிறதா, அஹிம்சை போராட்டத்தின் மூலம் அமையப்போகிறதா அல்லது வன்முறைப் போராட்டத்தின் மூலம் அமையப் போகிறதா என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி! இதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.” என்கிறார் அமிர்,

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

“இன்றைய அரசியல் சூழ்நிலையில் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன புத்திமதி கூற விரும்புகிறீர்கள்?” என்றேன்.

எமது இளைஞர்கள் தன்னம்பிக்கை அற்ற ஒரு நிலைக்கு கடந்த சில வருடங்களாக தள்ளப்பட்டு வருகிறார்கள். தாழ்வு மனப்பான்மைக்கு எமது மக்கள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் தமது அறிவை விருத்தி செய்வதிலும், ஊக்கத்துடன் கல்விச் செல்வத்தை தேடுவதிலும் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். தமிழர்கள் பலர் இன்று எத்தனையோ நாடுகளில் மிகச் சிறந்த பதவிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பல ஆபிரிக்க நாடுகள், பல அரபு நாடுகள் ஆகிய இடங்களிலெல்லாம் எமது தமிழ் இளைஞர்கள் பலர் தமது அறிவினாலும், முயற்சியினாலும் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், எதற்கும் அஞ்சாத இயல்பும், நல்ல ஒழுக்கமும் கொண்டவர்களாக ஒவ்வொரு தமிழ் வாலிபனும் விளங்கவேண்டும். அதுதான் எனது ஆசை.

தமிழ் இளைஞர்கள்- இங்கேயிருந்தாலும் சரி, அல்லது பிறநாடுகளில் இருந்தாலும் சரி-‘தமிழ் ஈழம்’ என்ற லட்சியத்திறாகாக உழைக்க உற்சாகத்தோடு முன்வர வேண்டும்.

தமிழ் ஈழத்தை அடையும் லட்சியத்தைக் கொண்ட இயக்கத்தலைவர்கள் மீது இளைஞர்கள் பூரண நம்பிக்கை வைக்க வேண்டும்.

ஒவ்வொரு தமிழ் இளைஞனும் – விடுதலை இயக்கத்தில் – பார்வையாளனாக இருக்காது பங்காளனாக மாற வேண்டும்!

இளைஞர்கள் எம்மீது வைக்கும் நம்பிக்கைக்கு நாம் எப்போதும் பாத்திரவாளிகளாகச் செயற்படுவோம். இது உறுதி!” என்கிறார் அமிர்.

 முன்னைய தொடர்கள் பார்வையிட : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை1…………….85)

Share.
Leave A Reply