1. அறிமுகம்

இப்பொழுது தேர்தல் காலம். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முக்கியமான தேர்தல்கள் நடக்கும் காலம். இந்தியத் தேர்தல்பற்றி, இந்திய அரசியல்பற்றி தமிழ்நாட்டில் அனைவரும் அறிவர்.

எனவே, இந்தியத் தேர்தலிலிருந்து, அதன் அரசியலிலிருந்து மிகவும் மாறுபாடுடைய, வித்தியாசமான, சிலசமயம் விநோதமான அமெரிக்கத் தேர்தலைப்பற்றி, அதன் அரசியலைப்பற்றி, முக்கியமாக அதன் அதிபர் தேர்தல்/அரசியல்பற்றி எனக்குத் தெரிந்த்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

அமெரிக்க அதிபர் [President of the United States of America] தேர்தலைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் அமெரிக்க அரசியலைப்பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியமாகிறது. அத்துடன் அமெரிக்க அரசியல் சட்டத்தைப்பற்றியும் தெரிந்துகொண்டால்தான் தெளிவுகிட்டத்துவங்கும்.

எனவே, வாருங்கள், அமெரிக்க அரசியல் வழித்தடத்தில் நடந்துசெல்வோம்.

ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களை [United States of America] நிறுவிய அமெரிக்கத் தந்தையர் [founding fathers of United States of America] மிகவும் சந்தேகப் பேர்வழிகளாக இருந்தனர்.

தனிமனிதர் ஒருவர் கையில் நாட்டின் அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும்கருத்தாக இருந்தனர்.

ஏன் அப்படி என்ற கேள்வி நமது மனதில் உடனே எழுவதில் வியப்பில்லை.

“அளுநர் கையில் அதிகாரம் இல்லாவிட்டால் எப்படி நாட்டை ஆளமுடியும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதிகாரம் இல்லாதுபோனால்  திறமையுடன் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது? அதனால்தானே இந்தியா/பிரிட்டனில் நடுவன் அரசில் பிரதம மந்திரிக்கும், இந்திய மாநிலங்களில் முதன்மந்திரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது?”

உண்மை.

ஆனால் அமெரிக்காவை நிறுவிய தந்தையர்கள் சந்தேகப் பேர்வழிகளாக இருந்ததற்குத் தலையாய காரணம் ஒன்று இருந்தது.

என்ன அது?

தனிமனித உரிமை.

அத்தனிமனித உரிமை காக்கப்படவேண்டுமென்ற தணியாத தாகம்.

தனிமனிதர் ஒருவரிடம் நாட்டையாளும் முழு அதிகாரமும் இருந்தால், மற்ற தனிமனிதர்களின் உரிமை, முழு அதிகாரம்பெற்ற தனிமனிதர் ஒருவரால் பறிக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள்.

அதற்குக் காரணம், அவர்கள், ஐரோப்பிய அடக்குமுறைகளிலிருந்து தப்பிவந்து, தனிமனித உரிமையுள்ள நாடாக அமெரிக்காவை நிறுவமுற்பட்டதே காரணம்.

ஐரோப்பாவில் எவ்வித அடக்குமுறைகள் இருந்தன?

சமய அடக்குமுறை, பேச்சு அடக்குமுறை, வாழ்வில் தனக்குப்பிடித்த வேலையைச்செய்து முன்னேறுவதைத் தடுக்கும் ஆண்டான்/அடிமை அடக்குமுறை போன்ற பலவிதமான அடக்குமுறைகள் தலைவிரித்தாடின.

ஐரோப்பாவில் பெரும்பான்மையாக்க் கிறித்தவ சமயமே பின்பற்றப்பட்டாலும், அதிலும் பலபிரிவுகள் — கத்தோலிக்கம், புரொடெஸ்டென்ட்,  ஆங்க்லிகன் சர்ச், ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸ் போன்ற பெரிய பிரிவுகளூம், இன்னும் சில சிறிய பிரிவுகளும் இருந்தன.

jesuuu

ஒவ்வொரு நாடும் ஒருபிரிவினரால் ஆளப்பட்டது, மற்ற பிரிவுகள் அடக்குமுறைக்கு உள்ளாகின.

ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகளிலருந்த கத்தோலிக்கக்  கிறித்தவம், ஜெர்மனியில் பிராடெஸ்டென்ட் கிறித்தவம், இங்கிலாந்தின்  சர்ச் ஆஃப் இங்கிலாந்து,    ரஷ்யாவின் ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸ் போன்ற பிரிவுகள் நாட்டில் மற்றபிரிவுகளை அடக்கமுற்பட்டன.

ஸ்பெயின், ரஷ்யா போன்ற சிலநாடுகளில் யூதர்கள் சித்திரவதைக்கும், விரட்டலுக்கும் உள்ளானார்கள். ஸ்பானிஷ் இன்க்விஸிஷன் [Spanish Inquisition] ஸ்பெயின் நாட்டு அரசு மற்றும்  கத்தோலிக்க சமயகுருக்களின் ஆதரவுடன் பல்லாயிரக்கணக்கான யூதர்களைச் சித்திரவதைசெய்து சமயமாற்றம் செய்தது.

சித்திரவதைக்கு உள்ளானோரில் கிட்ட்த்தட்ட    இரண்டு விழுக்காடுப் பேர்[2%] கம்பத்தில் கட்டப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.

ஜெர்மனியில் அவர்கள் அதிக அளவில் திட்டமிட்டுப் படுகொலையும் செய்யப்பட்டார்கள்.

எனவே, சமயச்சார்பற்ற அரசாக விளங்கவேண்டுமென்றால் தனிமனிதர் கையில் அதிகாரம் குவியக்கூடாது என்பதில் அமரிக்கநாட்டு நிறுவனத் தந்தையர் உறுதியாக இருந்தார்கள்.

எனவே, அதிகாரத்தை மூன்று பிரிவுகளாக்கி ஒருவர் குடுமி மற்றவரிடம் இருக்கும்படி அரசியல் சாசனத்தை எழுதினார்கள்.

அமெரிக்க அதிபருக்கு இந்தியப் பிரமதருக்கோ, பிரிட்டிஷ் பிரதமருக்கோ உள்ள அதிகாரம் இல்லை.

அரசர்கள் ஆட்சியில் அரசகுடும்பங்களுக்கே    அதிகாரம் இருந்துவந்ததால், அவர்கள் மக்களின் நலத்தைக் கருத்தில் கொள்ளவில்லை.  எனவே, நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆளப்படவேண்டும் என்று விரும்பினார்கள்.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் திரும்பப்பெறும் உரிமையும் மக்களுக்கே இருக்கவேண்டும் என்றும் எண்ணினார்கள்.

ஆனால் நாடு நன்றாக ஆளப்படவேண்டுமே!

தனிமனித உரிமைகள், மாநிலங்களின் உரிமைகள் காக்கப்படவேண்டுமே!

எனவே, அமெரிக்க ஒருங்கிணைந்த மாநிலங்களின் அரசியல் அமைப்பு இவ்வாறு துவங்குகிறது.

constitution_quill_pen

We the people of the United States, in order to form a more perfect union, establish justice, insure domestic tranquility, provide for the common defense, promote the general welfare, and secure the blessings of liberty to ourselves and our posterity, do ordain and establish this Constitution for the United States of America.

“ஒருங்கிணைந்த மாநிலங்களின் மக்களான நாங்கள், மிகவும் முழுநிறைவுள்ள ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காகவும், நீதியை நிலைநிறுத்தவும், உள்நாட்டு அமைதியை உறுதிபடுத்தவும், பொதுப்பாதுகாப்பை ஏற்பாடு செய்யவும், பொதுநலத்தை மேம்படுத்தவும், நமக்கும் நமது வழித்தோன்றல்களுக்கும் தன்னுரிமையின் பேறுகளைப் பாதுகாக்கவும், ஒருங்கிணைந்த அமெரிக்க மாநிலங்களின் அரசியல் அமைப்பை அதிகாரமளித்து நிலைநிறுத்துகிறோம்.”

ஒரே ஒரு சொற்றொடரில் எப்படிப்பட்ட செய்தியை, அரசியல் அமைப்பின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்!

2.  அரசின் பிரிவுகளும், அதன் கட்டுப்பாடுகளும்

தனிமனித உரிமை காக்கப்படவேண்டுமென்ற கருத்தினால் அமெரிக்கத் தந்தையர்கள் நாட்டையாளும் அதிகாரத்தை மூன்று பிரிவுகளாக்கி ஒருவர் குடுமி மற்றவரிடம் இருக்கும்படி அரசியல் சாசனத்தை எழுதினார்கள் என்று அறிந்தோம்.

அதேசமயம், தாங்கள் எழுதிய அரசியல் சாசனம் தங்களது அடக்குமுறையாக இருந்துவிடக்கூடாது என்று அரசியல் சாசனம் திருத்தப்படுவதற்கு வழியையும் வகுத்துக் கொடுத்தார்கள்.

ஆனால் நினைத்தபோதெல்லாம் அது திருத்தப்படக்கூடாதென்றும், அது அனைத்து மக்களின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் முடிவாக இருக்கவேண்டும் என்றெண்ணி, அதற்குத்தகுந்தபடி விதிமுறைகளையும் அமைத்துத்தந்தார்கள்.

அதனால்தான், ஒன்பதாயிரம் முறைகள் அமெரிக்க அரசியல் சாசனத்தைத் திருத்த முற்பட்டும், அது எழுதப்பட்ட இருநூற்றுமுப்பது ஆண்டுகளில் [1787] இருபத்தேழு திருத்தங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.  அரசியல் சாசனத்தைத் திருத்தும் விதிமுறைகள் என்ன என்பதைப் பின்பு காணுவோம்.

அமெரிக்கத் தந்தைகளே “மிகவும் முழுநிறைவான [more perfect]” என்று தோற்றுவாயில் எழுதித் துவங்கியதால், எதுவுமே முழுநிறைவானதல்ல என்பதை விரைவிலேயே உணர்ந்து, அவர்களே முதல் பதினோரு அரசியல் சாசனத் திருத்தங்களைக் கொணர்ந்தார்கள்.

இவையே புகழ்பெற்ற உரிமை மசோதா [Bill of Rights] எனப்படும்.  மாநிலங்களின் விருப்பத்திற்கிணங்க, தனிமனித உரிமையை மெலும் நிலைநாட்ட இந்த உரிமை மசோதா கொண்டுவரப்பட்டது.

மிகவும் முக்கியமான திருத்தம் முதலாம் திருத்தம் [amendment].  அது சொல்கிறது:

(அமெரிக்கச்) சட்டமாமன்றம் சமயத்தை நிறுவுதலை மதித்தோ, அல்லது தடையின்றி சமயத்தைப் பின்பற்றுதலை மட்டுப்படுத்தியோ, அல்லது பேச்சுரிமை மற்றும் பத்திரிகையுரிமையைக் குறைத்தோ, மக்கள் அமைதியாகக்கூடுவதை தடைசெய்தோ, குறைகளைக் களைய அரசை விண்ணப்பிப்பதைத் தடுத்தோ சட்டமியற்றக்கூடாது.

Congress shall make no law respecting an establishment of religion, or prohibiting the free exercise thereof; or abridging the freedom of speech, or of the press; or the right of the people peaceably to assemble, and to petition the Government for a redress of grievances.”

First-Amendment_detail

எப்படிப்பட்ட திருத்தம் அது!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசாக இருந்தாலும், பதவிக்கு வருபவர்கள் தங்களைத் தங்கள் பதவியில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகப் பிற்காலத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சமயத்தை அனுசரிப்பது, அல்லாது அனுசரிக்காமலிருப்பது இவற்றைச் சட்டமியற்றி மட்டுப்படுத்தக்கூடாது என்பதில் அமெரிக்க்த் தந்தையர் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பது கண்கூடாகிறதல்லவா?

மக்கள் ஒன்றுகூடிப்பேசினால்தானே அவர்கள் தேர்ந்தெடுத்த மனிதர்கள் பொறுப்புடன் அரசியல் சாசனத்தின் தோற்றுவாய்ப்படி நடந்துகொள்கிறார்களா இல்லையா என்று தெரிந்துகொள்ளமுடியும்? அதற்கு பேச்சுரிமை, எழுத்துரிமை அவசியமல்லவா?

இந்த இரண்டு உரிமைகளோடு, சமய உரிமையும் இந்த சட்டத்திருத்தத்தால் காக்கப்பட்டது.  அரசு எந்த சமயத்தையும் போற்றிமதித்து, நிலைநாட்டக்கூடாது என்று எழுதி, ஒருசமயத்தோர் [எந்தவொரு சமயத்தையும் பின்பற்றாதோர் உள்பட] மற்றவரைக் கீழ்நிலைக்குத்தள்ள அரசே வழிவகுக்கும் சட்டமியற்றக்கூடாது என்பதில் நாட்டம் காட்டி அமெரிக்காவை உண்மையிலேயெ ஒரு தனிமனித உரிமையுள்ள சுவர்க்கபூமியாக்கினார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

இன்றுவரை தனிமனித உரிமையைக் காத்துவருவது அமெரிக்க அரசியல் அமைப்பின் முதல் திருத்தம்தான் என்றால் மிகையாகாது.  உலகத்திலிருக்கும் எந்தநாடும் தொடர்ந்து பேச்சுரிமை, எழுத்துரிமை, சமய உரிமையை ஏதாவது ஒரு காரணங்காட்டி மட்டுப்படுத்தாமலிருந்த்தில்லை.

அரசுச் சமயம் உள்ள பலநாடுகளால் இன்றும் மற்ற சம்யத்தோர் எப்படி அடக்கியொடுக்கப்படுகிறார்கள், என்னென்ன அடிப்படை உரிமைகளை இழக்கிறார்கள், உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலைமையில் எப்படி அச்சத்துடன் வாழ்ந்துவருகிறார்கள், தொன்மையான மற்ற சமய/பண்பாட்டுச் சின்னங்கள் உருத்தெரியாமல் உடைத்துநொறுக்கப்பட்டன/படுகின்றன் என்பது அனைவரும் அறிந்த்தே!

அந்தவிதத்தில் அமெரிக்கா சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவிரும்பும், மற்றவரைக் கட்டுப்படுத்தாமல் தனிமனித உரிமை காக்கப்படும் வாழ்வு வாழவிரும்பும் அனைவரையும் ஈர்க்கும் மண்தான்!

அதனால்தான் அரசையோ, அரசாள்பவர்களையோ பயமின்றி – மறுபடியும் சொல்கிறேன், பயமின்றி எதிர்த்துக் குரல்கொடுக்க அமெரிக்காவில் யாரும் தயங்குவதில்லை.  அப்படிக் குரல்கொடுப்பவர்கள் தாக்கப்படுவதுமில்லை.

இப்படியாகத் தனிமனித உரிமையை அரசியல் அமைப்பின் வாயிலாகக் காத்த அமெரிக்கத் தந்தைகள் அத்துடன் நிற்கவில்லை.  நாட்டையாள்பவர்களுக்கு மக்கள்தான் எந்தவொரு அதிகாரத்தையும் தருகிறார்கள், எனவே அரசியல் அமைப்பில், “ஒன்றிணைந்த மாநிலங்களுக்குக்குக் [United States Federal Government] கொடுக்கப்படாத அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு அதனால் தடுக்கப்படாதவைகளும், மாநிலங்களுக்கும் மக்களுக்குமே உரித்தானவை” என்று அழுத்தம் திருத்தமாக எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இப்படி பேச்சுரிமை, எழுத்துரிமை, சமயவுரிமை கிடைக்க வழிவகுத்த அரசியல் அமைப்பு, தனது இரண்டாவது திருத்தத்தில் இன்னொரு உரிமையையும் மக்களுக்குக் கொடுத்த்து.  அது இன்றும் பலராலும் விமரிசனத்திற்கும், வாத்த்திற்கும் உள்ளாகிறது.

அது எது?

ஆயுதம் ஏந்தும் உரிமைதான்!

வியப்பாக இருக்கிறதா?

வியப்படையவே வேண்டாம்.  அமெரிக்க அரசியல் சாசனம் அதன் குடிமக்களுக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை இரண்டாம் திருத்தத்தில் வழங்கியிருக்கிறது.  அதைக் காப்பாற்ற கடும்வாக்குவாதம் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

[தொடரும்]

– ஒரு அரிசோனன்

[1]        http://www.encyclopedia.com/topic/Pogroms.aspx

During the first two Crusades (1096–1102 and 1147–1149), the Jews of central Europe, especially in Germany, fell victim to persecutions and sacrifices. The initial nature of the conflict was religious. The persecutors justified their action with the argument that the liberation of the Holy Land should be preceded by the murder of the “murderers of Christ” in Europe.

http://www.jewishvirtuallibrary.org/jsource/History/pogroms.html

[2]       http://www.encyclopedia.com/topic/Pogroms.aspx

A rise in anti-Semitism in Russia coincided with the shaking off of Mongolian rule and the strengthening of the Orthodox Church in the late Middle Ages. Czar Ivan IV (1530–1584) forced religious conversion on the Jews in the newly conquered territories and severely restricted Jewish trade.

[3]      http://www.huffingtonpost.com/cullen-murphy/10-questions-about-the-inquisition_b_1224406.html

[4]   Article 12 of Bill of Rights says that “The powers not delegated to the United States by the Constitution, nor prohibited by it to the States, are reserved to the States respectively, or to the people”

Share.
Leave A Reply