சத்யராஜ் கதாநாயகனாக நடித்த பாரதிராஜாவின் “கடலோரக் கவிதைகள்” மகத்தான வெற்றி பெற்றது. அதன் மூலம், கதாநாயகனாகத் தொடர்ந்து நடிக்கலாம் என்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் அளித்தனர்.

“கடலோரக் கவிதைகள்” படத்தில் நடித்த அனுபவம் குறித்து, நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-

“சினிமாவில் எத்தனை வருடங்கள் ஆனாலும் சில கேரக்டர்களின் பெயர்கள் நமக்கு மறக்காது. சப்பாணி, பரட்டை, வேலு நாயக்கர், அலெக்ஸ் பாண்டியன் என கேரக்டர்கள் பெயரைச் சொன்னதுமே அந்தப்படமும், நடித்தவர்களும் நம் நினைவுக்குள் வந்து விடுவார்கள்.

டைரக்டர் பாரதிராஜா டைரக்ஷனில் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் நான் நடித்த ‘முட்டம் சின்னப்பதாஸ்’ கேரக்டரும், இந்த ‘மறக்க முடியாத’ பட்டியலுக்குள் வந்து விடும் என்று நம்புகிறேன்.

டைரக்டர் பாரதிராஜா இந்த கேரக்டரை ரசித்து, என்னிடம் வேலை வாங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கடல் கிராமத்தில் நடந்தது.

படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகர்கள், நான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பது தெரியாமல், “இந்தப் படத்தில் நீங்கள்தான் வில்லனா சார்?” என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்துப்போனேன்.

அது அவர்களுடைய தப்பில்லை. என்னை அதுவரை வில்லனாக ரசித்தவர்கள், அந்தப் படத்திலும் நான் ஏதோ வில்லன் வேஷத்தில் நடிப்பதாகவே நினைத்திருக்கிறார்கள்.

அதனால் அப்படிக் கேட்டிருக்கிறார்கள். படத்தில் நான் ஏற்றிருந்த சின்னப்பதாஸ் கேரக்டரும் படத்தின் பாதிவரை அடாவடி கேரக்டர்தானே! அதனால் ‘சின்னப்பதாஸ்’ கெட்டப்பில் என்னைப் பார்த்ததாலும் ரசிகர்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.

அதுவரை வில்லன், அடிதடி என்று பயணம் செய்து கொண்டிருந்த என் நடிப்பு வாழ்க்கையில், கையில் ஒரு ஆட்டுக்குட்டியுடன் ஒரு காதல் கதை தந்து, என் நடிப்பை இன்னொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றார், பாரதிராஜா.

இந்தப் படத்தில் இளையராஜா இசையமைப்பில் எல்லாப் பாடல்களுமே அற்புதம். படத்தில் நான் ‘அடி ஆத்தாடி’ பாடலுக்கு நடிக்க வேண்டிய நாளில், நான் அந்தப் பாடல் வரிகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன். டைரக்டர் என்னைப் பார்த்து “என்ன பண்றீங்க?” என்று கேட்டார்.

“இது டூயட் பாடல் மாதிரி தெரியுதே சார்! பாடல் காட்சியில் பாடலுக்கேற்றபடி பொருத்தமாக நான் வாயசைக்க வேண்டுமே. அதற்காகத்தான் பாட்டு வரிகளை மனசுக்குள் பாடம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் டைரக்டர் சிரித்து விட்டார். “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். மற்ற வேலையைப் பாருங்க” என்று கூறிவிட்டார்.

அவர் அப்படி சொன்னதற்கான அர்த்தம், பாடல் காட்சி படமாகும்போதுதான் தெரிந்தது. நானோ, ரேகாவோ வாயசைக்காமல் காட்சி பின்னணியில் எங்களை நடமாட விட்டு ‘கவிதை’ மாதிரி படம் பிடித்து விட்டார், பாரதிராஜா.

இந்தப் படத்தில் வலம்புரிச் சங்குக்கு ஒரு முக்கியமான இடம் இருந்தது. வலம்புரிச் சங்கை நம் காதுக்குள் வைக்கும்போது அது ஓசையெழுப்பும். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் உயிருக்குப் போராடியபடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பேன்.

பட்டணத்தில் இருந்து என்னைப் பார்க்க வரும் காதலி (ரேகா) நான் ‘கோமா’ நிலையில் இருந்து விடுபடவில்லை என்பது தெரிந்ததும், என் காதருகே அந்த வலம்புரிச் சங்கை வைத்துவிட்டு ரெயில் ஏறப் போய்விடுவார்.

வலம்புரிச்சங்கு என் காதுக்குள் ஒலிக்க, அந்த சத்தத்தில் நான் ‘கோமா’ நிலையில் இருந்து விடுபட்டு, காதலியை பார்க்க ஓடுகிற மாதிரி காட்சி.

இந்தக் காட்சியில் வலம்புரிச்சங்கு என் காதுக்குள் ஒலிக்கும் காட்சியில் ரசிகர்கள் கரகோஷம் செய்தால் கதாநாயகனாக நான் ஜெயித்து விட்டேன் என்று அர்த்தம்.

‘ஓ’ என்று கத்தினால் படமும், என் கதாநாயகன் முயற்சியும் அவுட். படம் ரிலீசாகியது. சின்னப்பதாசை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க தியேட்டருக்கு போயிருந்தேன்.

வலம்புரிச்சங்கு என் காதில் ஒலித்ததும் என் உடம்பில் ஏற்படுகிற மாற்றங்களை பார்த்து ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியில் கரகோஷம் செய்தார்கள்.

ரசிகர்கள் என்னை கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதையே இந்த காட்சி எனக்கு உணர்த்தியது. படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஒரு பாரதிராஜா கிடைத்து, அவர் மூலம் ஒரு நல்ல கதை கிடைத்து, நான் ஹீரோ ஆனேன் என்றாலும், நான் ஹீரோவாக நடிக்கலாம் என்று முதலில் பச்சைக்கொடி காட்டியவர், ரஜினி சார்தான்!

‘பாயும் புலி’ படத்தில் அவருடன் எனக்கு சண்டைக்காட்சி இருந்தது. ஒரு காட்சியில் நானே தொப்பென்று விழுந்து ஒரு டேபிளை உடைத்திருக்கிறேன்.

அப்போது, “ஏன் இப்படி சண்டைக் காட்சியில் ‘ரிஸ்க்’ எடுக்கிறீர்கள்?” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார், ரஜினி. அடுத்து அவருடன் நடித்த “தம்பிக்கு எந்தஊரு” படத்தில் எனக்கும் கொஞ்சம் பேர் சொல்கிற மாதிரி வேடம்.

இந்தப் படத்தில் நடித்தபோது ரஜினி சார் என்னிடம் நெருக்கமாக பழகினார். ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது திடீரென என்னை உற்று நோக்கியவர், “சத்யராஜ்! நீங்க ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது?” என்று கேட்டார்.

நான் பதில் சொல்லாமல் சிரித்தேன். அவரோ விடவில்லை. “நான் விளையாட்டுக்கு சொல்லவில்லை. நிச்சயம் நீங்கள் ஹீரோவாக நடிக்கலாம்.

உங்க பர்சனாலிடி பற்றி உங்களுக்குத் தெரியாது” என்றார். “போதும் சார்! விட்ருங்க” என்றேன், அவரது நம்பிக்கையை அங்கீகரிக்காமல். ரஜினி சாரோ விடவில்லை, “இல்லை. சத்யராஜ்! ஹீரோவா வர்றதுக்கான தகுதி உங்ககிட்டே இருக்கு.

அதுக்கு ஒரு டெஸ்ட். நாளைக்கு நம்ம படத்தோட ஹீரோயின் மாதவி படப்பிடிப்புக்கு வராங்க. அவங்களும் நான் சொன்னதையே உறுதிப்படுத்துவாங்க பாருங்க” என்றார்.

மறுநாள் மாதவி வந்ததும் என்னை அவரிடம் ரஜினி சார் அறிமுகப்படுத்தினார். எப்படித் தெரியுமா? நான் அமெரிக்காவில் உள்ள நடிப்புக் கல்லூரியில் இருந்து வந்திருக்கிற விசிட்டிங் புரொபசர் என்று!

ரஜினி சார் சொன்னதை மாதவி அப்படியே நம்பிவிட்டார். என் தோற்றமும், நிறமும் ரஜினி சார் சொன்னதுபோல மாதவியை நம்ப வைத்துவிட்டன!

இதன் பிறகு என்னைப் பார்க்கும் போதெல்லாம் மாதவி என்னிடம், அமெரிக்க நடிப்புப் பயிற்சி பற்றி ஆங்கிலத்தில் கேட்க ஆரம்பித்துவிட்டார். கேட்கும்போதுகூட அப்படியொரு மரியாதை.

நமக்குத்தான் ‘இங்கிலீஷ்’ தகராறு ஆச்சே! ஏதோ வாய்க்குள் முனகிக் கொள்வது போல ஆங்கிலத்தில் பேசிவிட்டு ‘எஸ்கேப்’ ஆகிவிடுவதுண்டு.

நான் மாதவியிடம் இப்படி படாதபாடுபடுவதைப் பார்த்து இரண்டு நாட்களாக ரஜினி சாரும் ரசித்து சிரித்து வந்தார்! இரண்டு நாள் கழித்து, சுலக்ஷனா நடிக்க வந்தார்.

அவர் மாதவியிடம், ‘அமெரிக்க புரபசராக’ நான் நடித்தது தெரியாமல் என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி விட்டார்.

‘சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்’ என்று அவர் என் நடிப்பு வரலாற்றை சொல்லிக்கொண்டே போக, மாதவி முகத்தில் நானும் ரஜினி சாரும் அவரை ஏமாற்றிய கோபம் தெரிந்தது!

இந்த களேபரம் நடந்து முடிந்த அன்று ரஜினி சார் என்னிடம் “சத்யராஜ்! இப்போதாவது நான் சொல்றதை நம்பறீங்க அல்லவா? உங்கள் பெர்சனாலிடி, பிரபல ஹீரோயினையே நம்ப வைத்தது என்றால், இந்த பர்சனாலிடிக்கு நீங்கள் நிச்சயம் ஹீரோ ஆகமுடியும் தானே!” என்றார். அவர் சொன்னது போலவே, “கடலோரக் கவிதைகள்” படம் எனக்கு அப்படியொரு ஹீரோ அந்தஸ்தை கொடுத்து விட்டது.

இது ‘ரீமேக்’ காலம். பழைய படங்களை மறுபடியும் வேறு வேறு நடிகர்களை போட்டு எடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘பருத்தி வீரன்’ கார்த்தியை பார்த்தபோது, “நான் நடித்த “கடலோரக் கவிதைகள்” படத்தை ரீமேக் பண்ணி அதில் நீ நடிச்சா சரியா இருக்கும்” என்று சொன்னேன்.

‘பருத்தி வீரன்’ முதல் படத்திலேயே முரட்டு கிராமத்து இளைஞனாக நடிப்பில் அசத்திய கார்த்தி, “கடலோரக் கவிதைகள்” சின்னப்பதாஸ் வேடத்திற்கும் பொருத்தமாக இருப்பார்.

சின்னப்பதாசாக என்னை உருவாக்கிய டைரக்டர் பாரதிராஜாவே, “வேதம் புதிது” படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் என்னை நடிக்க வைத்தார்.”

இவ்வாறு கூறினார், சத்யராஜ்.

முன்னைய சினி தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Share.
Leave A Reply