கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போருக்குப் பின்னர் கடந்த 6 வருடங்களாக படையினர் தமது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டிருந்த 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் காணி உரிமையாளர்களிடமே மீள கையளிக்கப்பட்டிருக்கின்றது
இன்றைய தினம் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த காணிகளை மக்களிடம் கையளித்துள்ளார்.
இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 476 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 139 ஏக்கர் நிலமுமாக மொத்தமாக 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
போர் காலத்தில் படையினரின் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டிருந்த மக்களுடைய நிலங்கள், இன்றைய தினம் மக்களிடம் மீளவும் கையளிக்கப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
இதன்படி மக்களுடைய நிலங்களை மீண்டும் மக்களிடமே வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயமாக எடுப்போம். என அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேவேளை கிளிநொச்சி நகர் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பரவிப்பாஞ்சான் பகுதியிலிருந்த 39 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் உள்ளடங்கியிருக்கின்றது.
குறித்த காணியை விடுவிக்கக்கோரி கடந்த காலத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பகுதியில் மீள்குடியேற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1400 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பகுதி படையினர் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த நிலத்திற்குச் சொந்தமான மக்கள் மாதிரி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்தை மேற்கொள்வதற்கான தேசிய மட்டத்திலான உணவு உற்பத்தித் திட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் 23 வீதமானவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலைமைக்கான மக்களுடைய வறுமையைப் போக்குவதற்கு ஓரு யுத்தத்தை நடத்துவதைப் போலவே இந்த தேசிய உணவு உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சிறிசேன கூறியிருக்கின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வடமாகாணத்தின் பெரிய குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் செய்யப்படுகின்ற வட்டக்கச்சி வயற்பகுதியில் தேசிய உணவு உற்பத்தித்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதற்கென கடந்த 2004 ஆம் ஆண்டு மாத்திரம் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உள்ளுரில் உணவு உற்பத்தியை அதிகரித்து, இவ்வாறாக வீணாக்கப்படுகின்ற அந்நியச் செலவாணியை மிச்சப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் உள்ள அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான உணவு உற்பத்தி செய்யக்கூடிய காணிகளில் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பயன்படுத்தப்படாத தனியார் காணிகளை அவர்களிடமிருந்து எடுத்து வேறு ஆட்களின் மூலமாக உணவு உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்றும் சிறிசேன எச்சரிக்கை விடுத்தார்.
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் குழுவினரை வரவேற்ற வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு சௌபாக்கியத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தமக்கு இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் விவசாய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், வடமாகாண அமைச்சர்கள் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.