கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலைய குண்டு வெடிப்பு, மருதானை பொலிஸ் நிலையம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன்.

இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளால் பணம் கொடுத்து பயன்படுத்தப்பட்டவர் மனோகரி. அவரது தொழில் விபச்சாரம்.

புலிகள் இயக்க உறுப்பினரான மூர்த்தியுடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது, ஹோட்டலில் வேலை செய்த ஒரு இளைஞர்மீது கண்வைத்தார் மனோகரி.

மூர்த்தி வெளியே செல்லும் நேரங்களில் அந்த இளைஞரோடு நெருக்கமாக இருந்தார் மனோகரி. ஆனாலும் தாம் எதற்காக அங்கு தங்கியிருக்கிறோம் என்பதை மட்டும் சொல்லவில்லை.

அந்த இளைஞரின் பெயர், முகவரியை தனது டயரியில் குறித்து வைத்திருந்தார் மனோகரி.

மனோகரி கைது செய்யப்பட்டபோது  டயரியும் மாட்டடியது. டயரியைத் துருவினார்கள் பொலிசார்.

மனோகரியின் டயரியில் இருந்த பெயர் முகவரியை வைத்து மனோகரிக்கு நெருக்கமான அந்த இளைஞரும் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் முஸ்தபா. கிட்டத்தட்ட ஒருவருடம் அவர் உள்ளே இருந்தார்.

மற்றொரு முஸ்லிம் இளைஞரும் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் சையத் அகமட். அவர் மூர்த்தியின் நண்பர். ஆனால் மூர்த்தி இயக்கத்தில் இருந்தது அவருக்குத் தெரியாது.

ஈரோசின் நடவடிக்கைகள்

கொழும்பில் எங்கு குண்டுவெடித்தாலும்   ஈரோசின் வேலை என்றுதான் அக்காலகட்டத்தில் நம்பப்பட்டது.

அதனால்தான் கொழும்பு புறக்கோட்டை குண்டு வெடிப்பும், மருதானைக் குண்டுவெடிப்பும் ஈரோசின் வேலை என்று சொல்லப்பட்டது.

கொழும்பில் குண்டுவெடிப்புக்களை ஆரம்பித்துவைத்த இயக்கம் ஈரோஸ்தான்.

கொழும்பில் அப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்று ஏனைய இயக்கங்கள் புலிகள் உட்பட – சந்தேகித்துக்கொண்டிருந்தபோது ஈரோஸ் தான் முதலில் இறங்கியது.

ஈரோஸ் இயக்கம் கொழும்பில் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாகச் சொல்வதற்காக 1984ம் ஆண்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் ஈழப்போராளி இயக்கங்களை நசுக்க இஸ்ரேலிய மொசாட்டை அழைத்திருந்தது. மொசாட் ஆலோசகர்கள் கொழும்பில் எங்கு தங்குகிறார்கள் என்பது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

மொசாட்டை சேர்ந்த சிலர் கொழும்பில் உள்ள ஒபரோய் ஹோட்டலில் அறை எடுத்து இரகசியமாக தங்கியிருந்தனர். அந்த விடயம் எப்படியோ ஈரோஸ் இயக்கத்துக்கு கிடைத்துவிட்டது.

மொசாட்டை சேர்ந்தவர்கள் 7ம் மாடியில் உள்ள அறையில்தான் தங்கியிருந்தார்கள்.

ஒபரோய் ஹோட்டலில் குண்டுவைப்பதற்கு ஈரோஸ் திட்டமிட்டது. கொழும்பில் ஈரோசின் முதல் நடவடிக்கை அதுதான். ஈரோசின் முதலாவது இராணுவ நடவடிக்கையும் அதுதான்.

ஒபரோயில் வெடித்தது

முதல் நடவடிக்கை என்பதால் மிகக் கவனமாக திட்டம் தீட்டினார்கள்.

ஈரோஸ் இயக்க்த்தில் குண்டு தயாரிப்பதில் திறமையானவர் கரண். அவரே நேரடியாக கொழும்புக்கு அனுப்பப்பட்டார். அவருடன் வாணி என்னும் பெண் உறுப்பினரும் வந்தார்.

இருவரும் தம்பதிகள் போல ஒபரோய் ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கினார்கள். 7வது மாடியில் அவர்களுக்கு அறை கிடைத்தது.

சூட்கேஸில் வெடிமருந்து தயாராக இருந்தது. அறையில் வைத்து குண்டு தயாரித்தார் கரண்.

குண்டைத்தயாரித்து  வைத்துவிட்டு இருவரும் அறையைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டனர்.

வெளியே சுற்றிப்பார்க்க செல்கிறார்கள் என்று ஹோட்டல் ரிசப்ஷனில் உள்ளவர்கள் நினைத்தனர்.

அவர்கள் வெளியே சென்றபின்னர் 7ம் மாடியில் குண்டுவெடித்தது. பல அறைகக் சேதமடைந்தன. ஒபரோய் ஹோட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பலியானார். 30 பேர்வரை படுகாயமடைந்தனர்.

இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றது 28.06.84 இல்.

குண்டுவெடிப்பில் மொசாட்டை சேர்ந்த ஒருவரும் பலியானதாக ஈரோஸ் இயக்கம் கூறியது. இலங்கை அரசு அதனை மறுத்தது.

இரண்டாவது நடவடிக்கை

வடக்கு-கிழக்கு யுத்தத்தை மையடாக வைத்து ஜே.ஆர் அரசாங்கம் புதிதாக உருவாக்கியதுதான் தேசிய பாதுகாப்பு அமைச்சு.

கொழும்பில் தேசிய பாதுகாப்பு அமைச்சின் அலுவலகம் முன்பாக குண்டுவெடிப்பை நடத்துவது என்று ஈரோஸ் திட்டமிட்டது.

ஒபரோயில் குண்டு வெடிக்கும் அதே நாளில் தேசிய பாதுகாப்பு அமைச்சின் முன்பாகவும் குண்டு வெடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.

குண்டுப்பார்சலை கொண்டுசென்று வைக்கும் பொறுப்பு குட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஈரோஸ் இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்.

குண்டுப்பார்சலை கொண்டுசென்று வைத்துவிட்டு திரும்பிவிட்டார் குட்டி.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் பார்வையில் பட்டுவிட்டது பார்சல். அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதனால் பார்சல் பரிசோதிக்கப்பட்டது. குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது.

இந்த சம்பவங்களின் பின்னர் கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கேந்திர நிலைகள் எந்நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட அதே நேரத்தில், அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள ஓட்டைகளை தேடியது ஈரோஸ்.

கொழும்பில் பழைய பேப்பர்கள் பொறுக்குவது அப்போது பரவலாக நடைபெற்ற தொழில்.

ஈரோஸ் உறுப்பினர்கள் மூன்று பேர் பழைய பேப்பர் பொறுக்குபவர்களட போல சென்று மூன்றாவது குண்டுவெடிப்பை நடத்துவது என்று திட்டமிடப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து சப்புகஸ்கந்தை, கொலன்னாவ பகுதிகளுக்கு செல்லும் எண்ணெய் குழாய்களை குண்டு வைத்து தகர்ப்பதுதான் இலக்கு.

கொலன்னாவ, முகத்துவாரம், ஊறுகொடவத்த ஆகிய இடங்களில் குண்டு வைப்பதுதான் திட்டம்.

மூன்று குண்டுகள் தயாரிக்கப்பட்டன. குண்டுகளை தயாரிப்பதில் முக்கிய பங்கெடுத்தவர் பரிபூரணன், அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவராக இருந்தவர்.

08.10.84 அன்று பரிபூரணன், குட்டி, வரதன் ஆகியோர் பேப்பர் பொறுக்குபவர்கள் போன்ற தோற்றத்துடன் புறப்பட்டனர்.
மூன்று திசைகளில்

மூவரும் மூன்று திசைகளில் பிரிந்து சென்றனர். கொலன்னாவ பஸ் நிலையத்திற்கு பின்புறமாக எண்ணெய் குழாய் செல்லும் பகுதியில் ஒரு குண்டு வைக்கப்பட்டது.

துறைமுகத்தில் இருந்து முகத்துவாரம் பகுதியாக செல்லும் எண்ணைய் குழாய் ஒன்றுக்கும் குண்டுவைக்கப்பட்டது.

மூன்றாவது குண்டை ஊறுகொடவத்தயில் உள்ள எண்ணைய் குழாய்க்கு வைப்பதற்காக பரிபூரணன் கொண்டு சென்றார்.

முதல் இரு குண்டுகளும் வெடித்து விட்டன. எனினும் எதிர்பார்த்ததுபோல பெரும் சேதம் ஏற்படவில்லை.

எண்ணெய் குழாய்கள் செல்லும் பாதைகளை கண்டுபிடித்து திட்டம் தீட்டியவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். அவர்களுக்குத்தான் குறிப்பிட்ட பகுதிகள் நன்கு பரிச்சயமாக இருந்தன.

எந்த இடத்தில் குண்டுவைத்தால் பாரிய சேதம் ஏற்படும் என்ற விபரங்களும் அவர்களுக்குத்தான் நன்கு தெரிந்திருந்தது.
திட்டம் தீட்டியவர்கள் யாழ்ப்பாணம் சென்றுவிட்டு திரும்பிவர முடியவில்லை.

அதனால் திட்டம் மட்டும் கொழும்புக்கு வந்தது.

வரதன், பரிபூரணன், குட்டி ஆகியோருக்கு தாம் நடவடிக்கைகளில் ஈடுபடப்போகும் பகுதிகள் பரிச்சயமானவையாக இருக்கவில்லை.

அதனால் குண்டுவைப்பதில் சில தவறுகள் நேர்ந்தன. எனவே இரு குண்டுகள் வெடித்தபோதும் எதிர்பார்க்கப்பட்ட விளைவு ஏற்படவில்லை.

மூன்றாவது குண்டுடன் ஊறுகொடவத்தக்கு சென்ற பரிபூரணனும் இலக்கை சென்றடைய கஷ்டப்பட்டார். எப்படியோ நுழைந்து குண்டை பொருத்திக் கொண்டிருக்கும் போது, பொலிசார் வந்துவிட்டனர்.

தப்பிச் செல்ல வழியே இல்லை என்று தெரிந்துவிட்டது. என்ன செய்யலாம்? யோசிக்கவோ, தாமதிக்கவோ நேரம் இல்லை.

கொண்டுசென்ற குண்டை வெடிக்க வைத்து தன்னை அழித்துக்கொண்டார் பரிபூரணன்.

பரிபூரணன் ஊர்காவத்துறையைச் சேர்ந்தவர். ஈரோஸின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்.

பரிபூரணனின் மறைவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பும் அஞ்சலி வெளியிட்டு கௌரவம் செய்தது.

ஈரோஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தபடி குண்டுவெடிப்பு நடந்திருந்தால் எண்ணெய் குதம்வரை தீ பரவி, கொழும்பு நகரமே உருமாறியிருக்கும்.

ஆனால், நடடிக்கையின் போது ஏற்பட்ட சில தவறுகளால் குண்டுவெடிப்பு பாரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை.

கொழும்பில் முதன் முதலாக பாரிய பொருளாதார இலக்குக்கு குறிவைக்கப்பட்ட நடவடிக்கை அதுதான்.

madi
அத்துலத் முதலிக்கு குண்டு

22.10.84 அன்று கொழும்புக்கும் வத்தளைக்கும் இடைப்பட்ட பேலியகொடவில் ஒரு பார்சல் கிடந்தது. அந்த வழியாக சென்ற இருவருக்கு பார்சலைக் கண்டதும் ஆசை வந்துவிட்டது.

உள்ளே பெறுமதியான பொருட்கள் ஏதாவது கிடக்கலாம். காலையிலேயே அதிஷ்டம் தேடிவருகிறது. விடுவானேன்.
பார்சலை எடுத்துப் பிரித்தனர். குண்டு வெடித்தது. இருவரும் பலியானார்கள்.

அன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன.

கொழும்பு கொச்சிக்கடையிலுள்ள துறைமுக பொலிஸ் நிலையம் முன்பாக ஒரு குண்டு வெடித்தது.

இன்னொரு குண்டு புகையிரத நிலையத்திற்கு முன்பாக வெடித்தது. அதன் அருகிலுள்ள இரவுச் சந்தைக்கு முன்பாக மூன்றாவது குண்டு வெடித்தது.

மருதானையில் உள்ள டவர் மண்டபம் முன்பாகவும் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது.

ஒரே நாளில் கொழும்பின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதேநேரம் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் வீட்டுக்கு அருகிலும் ஒரு வெடிகுண்டு பார்சல் வைக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அருகேயும் வெடிகுண்டு பார்சல் ஒன்று அதுவும் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஈரோஸ் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டன.

aaaaமலை உச்சியில் ஒரு தாக்குதல்

பேதுருதாலகால மலையின் உச்சியில் ஒரு இராணுவ முகாம் அமைந்திருந்தது. அங்கிருந்த ரூபவாகினி தொலைக்காட்சி அஞ்சல் கோபுரத்திற்கு பாதுகாப்பாகவே முகாம் இருந்தது.

மலையகமும் ஈழத்தின் ஒரு பகுதி என்பதுதான் ஈரோசின் கொள்கை. அதனால் மலையகத்தில் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஈரோஸ்.

நிலத்தில் இருந்து ஏறக்குறைய 8281 அடி உயரமான இடத்தில் மலையின் உச்சியில் இருந்தது இராணுவ முகாம். தொலைக்காட்சி கோபுரம்தான் இலக்கு.

மலையகத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், மலையகத்தில் தலவாக்கலயைச் சேர்ந்த வரதன் ஆகியோருடன் ஈரோசின் முக்கிய உறுப்பினரான் வரதனும் (ஐ.பி.ரி.வரதன்) இணைந்து நடவடிக்கையில் பங்குகொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

மலையில் வழிகாட்டிச் செல்வதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அவர் இயக்க உறுப்பினரல்ல. ஆனாலும் மலை ஏறுவதில் கெட்டிக்காரர்.

அவர் வழிகாட்டிச்செல்ல் மூவரும் மலையில் ஏறினார்கள். உச்சிக்கு வந்து விட்டனர்.

தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் உயர்ந்து நின்றது. நெருங்கிவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு மூவருக்கும்.

இராணுவ முகாம் காவலரணில் இருந்தவர்கள் தங்களை கவனித்துவிட்டது போல மூவருக்கும் ஒரு உறுத்தல். அதனால் பதட்டம்.

இருப்பதோ மலை உச்சியில். பழக்கமில்லாத சூழல். கண்டுபிடித்துவிட்டார்கள் என்றால் தப்பிச்செல்ல வாய்ப்பே இல்லை என்றும் தெரிந்தது.

பதட்டம் காரணமாக தொலைக்காட்சி கோபுரத்தை நோக்கிச் செல்ல முடியவில்லை.

காவலரணுக்கு பின்புறமாக குண்டை வைத்துவிட்டு வந்துவிட்டார் கிருஷணன்.

மூவரும் சென்ற வழியே இறங்கி வந்துவிட்டனர்.

மலை உச்சியில் குண்டு வெடித்தது.

காவலரணில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் உட்பட நால்வர் பலியானார்கள்.

தொலைக்காட்சி அஞ்சல் கோபுரம் தப்பிவிட்டது.

ரயில் நிலையத்தில்

இலங்கை அரசுக்கு பிரிட்டிஷ் அரசு இராணுவ உதவிகளை தாராளமாக வழங்கியது.

இலங்கை இராணுவத்துக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் பயிற்சி கொடுப்பதாகவும் இயக்கங்கள் குற்றம் சாட்டியிருந்தன.

பிரிட்டிஷ் பிரதமர் மாக்கிறட் தட்சர் கொழும்புக்கு விஜயம் செய்தார்.

ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என்று கருதி கொழும்பில் பொலிசாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

கட்டுநாயக்கா செல்லும் புகையிரதத்தில் ஈரோஸ் உறுப்பினர்கள் இருவர் ஏறிக்கொண்டனர். ஒருவர் வரதன். இன்னொருவர் சகுந்தலா. தம்பதிகள் போல பயணம் செய்தனர்.

கட்டுநாயக்கா புகையிரத நிலையம் கட்டுநாயக்கா விமான நிலையம் அருகே இருந்தது. கட்டுநாயக்கா புகையிரத நிலையத்தில் தம்பதிகள் போலவே இறங்கி, குண்டை வைத்துவிட்டு நடையைக் கட்டினார்கள்.
குண்டு வெடித்தது.

புகையிரத நிலையமும் நான்கு புகையிரத பெட்டிகளும் முற்றாக சேதம் அடைந்தன.

மார்க்கிறட் தட்சரின் விஜயத்தின் போது குண்டுவெடிப்பு நடைபெற்றமையால் அரசாங்கத்திற்கு பெரும் சங்கடமாகப் போய்விட்டது.

article-2279724-1772ADCF000005DC-75_634x375விருந்தில் குண்டு

 29.04.85  கொழும்பில் உள்ள இராணுவ தலைமையக கட்டிடத்திற்குள் விருந்து வைபவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு பழைய பேப்பர்களை பொறுக்குவதுபோல பாசாங்கு செய்தபடி இராணுவ தலைமையக கட்டிடப்பகுதிக்குள் சென்றுவிட்டனர்.

விருந்து கொண்டாட ஏற்பாடுகளில் கவனம் இருந்தமையால் பழைய பேப்பர் பொறுக்குபவர்களது நடமாட்டத்தை யாரும் கவனிக்கவில்லை.

இருவரும் இராணுவ தலைமையக கட்டடத்தில் குண்டை மறைத்து வைத்து விட்டு திரும்பிவிட்டனர்.

இரவு விருந்து வைபவம் ஆரம்பமானது. சரியாக இரவு 8.20 மணிக்கு குண்டு வெடித்தது. இராணுவ ஆலோசகர்கள் உட்பட இரண்டு இராணுவவீரர்கள் பலியானார்கள்.

இராணுவ தலைமையகம் அருகில் இருந்த தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

குட்டி, கண்ணன் ஆகிய ஈரோஸ் உறுப்பினர்கள் அந்த நடிவடிக்கையில் பங்கு கொண்டனர்.

பாகிஸ்தான் ஜனாதிபதி சியாவுல் ஹக் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

பாகிஸ்தானும் இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள், பயிற்சிகள் என்பவற்றை வழங்கிவந்தது.

அதனால் சியாவுல் ஹக் விஜயம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குண்டு வெடிப்பு நடத்த ஈரோஸ் முடிவு செய்தது.

அது தொடர்பாகவும், கொழும்பில் திட்டமிடப்பட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை தொடர்பாகவும் அடுத்தவாரம் சொல்கிறேன்.

(தொடர்ந்து வரும்)

-எழுதுவது அற்புதன்-

றோ-புலிகள் கூட்டுத் திட்டம்: 150 சிங்கள பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்!! ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-80)

 

Share.
Leave A Reply