ஜூலை 25ம் திகதி வெலிக்கடை சிறையில் ஒரு திட்டம் உருவானது.
சோபாலலோகேனயா, சந்திரே போன்ற கிரிமினல் குற்றவாளிகள் ஏனைய சிங்கள கைதிகளோடு சேர்ந்து ரச்கசியமாக போட்ட திட்டம் அது.
இந்தத் திடம் பற்றி சிறைகாவலர்கள் சிலருக்கும் தெரிந்திருந்தது என்று நம்பபடுகிறது.
வெலிக்கடை சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 73 பேர் வரை இருந்தனர்.
சிறைக்குள் சிந்திய புனித இரத்தம் :
குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், தேவன், டக்லஸ் தேவானந்தா, மாணிக்கம், தாசன், றொபட், வணபிதா சிங்கராஜர், டாக்டர் தர்மலிங்கம், கோவை மகேசன், பரந்தன் ராஜன், டாக்டர் இராஜசுந்தரம், பனாகொடை மகேஸ்வரன், டேவிட் ஐயா, நடேசுதாசன், பாஸ்கரன், தேவகுமார், சிவபாதம் மாஸ்டர், வணபிதா சின்னராசா, ஜெயதிலகராஜா, ஜெயகுலராஜா, ஜெயகொடி ஆகியோர் உட்பட 71 தமிழ் கைதிகள் வரை சிறையில் இருந்தனர்.
சிறையில் இருந்த போதும் 73 அரசியல் கைதிகளும் சிறைக்காவலர்களோடு அரசியல் கைதிகளுக்கான உரிமைகளுக்காக அடிக்கடி போராடிக் கொண்டிருந்தார்கள்.
அதே சமயம் சிங்களக் கைதிகள் பலரோடு தமிழ் அரசியல் கைதிகள் நட்பாகவே இருந்தனர்.
பயங்கரமான கிரிமினல்குற்றவாளிகளான சிங்களக் கைதிகள் தான் வெலிக்கடை சிறையில் இருந்தனர்.
உணவு கொண்டுவந்து கொடுப்பது போன்ற காரியங்களை சிங்களக் கைதிகள் சிலரே கவனித்து வந்தனர்.
அவ்வாறு கவனித்து வந்த கைதிகளில் ஒருவர் அசப்பில் பிரபாகரன் மாதிரி இருப்பார்.
இதனால் அவரை குட்டிமணி ‘தம்பி’என்று அழிக்கத் தொடங்கினார். ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் ‘தம்பி’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.
அவர் மீது தனி பிரியத்தோடு நடந்துக்கொண்டார்கள். தங்களின் ஒருவராகவே அந்தக் கைதியைக் கருதினார்கள்.
மதியம் 2 மணி :
ஜூலை 25ம் திகதி மதியம் 2 மணிக்கு சிறைக்குள் திடீரென்று ஒரே கூச்சல்கள்.
தமிழ் அரசியல் கைதிகள் 73 பேரும் தனியாக சிறைக் கூண்டுகளுக்குள் இருந்தார்கள்.
அரசியல் கைதிகளை அவர்களுக்குரிய கூண்டுகளுக்குள் மத்திய நேரத்திலும் பூட்டி வைத்திருப்பது வழக்கம்.
கிரிமினல் கைதிகளை மாலை நேரம் வரை வெளியே நடமாட அனுமதித்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் திறந்துதான் வெட்டடா, குத்தடா என்று கூச்சல் போட்டுக் கொண்டு தமிழ் கைதிகளின் கூண்டுகளை நோக்கி ஓடிவந்தார்கள்.
கூண்டுகளின் சாவிக் கொத்து சிறைக்கவலர்களிடம்தான் இருக்கும். சாவிக் கொத்துக்களில் சில கூச்சல் போட்டுக்கொண்டு வந்த கைதிகளிடம் இருந்தது.
எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சாவிக்கொத்துக்களை காவலர்கள் கொடுத்துவிட்டார்கள்.
குட்டிமணி- தங்கதுரை- ஜெகன், தேவன் ஆகியோர் இருந்த சிறை தொகுதிதான் முதலில் தாக்குதலுக்கு உள்ளானது.
கோடலிகள், இரும்பு சட்டங்கள், பொல்லுகள் சகிதம் சிங்கக் கைதிகள் கூண்டுகளுக்குள் புகுந்தனர்.
குட்டிமணி போன்றவர்கள் எங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று துல்லியமாக வழிக்காட்டிக் கொண்டிருந்தார் ஒருவர்.
அவர் வேறு யாரும்மல்ல, ‘தம்பி’ என்று குட்டிமணியால் பிரியமாகப் பெயர் சூட்டப்பட்ட கைதியே தான்.
ஏற்றிபரத தாக்குதல், நிராயதபநிகளாக நிலை, தாக்குதல் நடத்த வந்தவர்கள் தொகையோ அதிகம். குறுகலான சிறை கூண்டு. எதிர்த்துப் போராட வசதியில்லை.
சில தமிழ் கைதிகள் தனித் தனியே அடைக்கபட்டிருன்தனர்.
இறுதிவரை எதிர்த்தனர் :
கூண்டுகள் உடைத்து திறக்கப்பட்ட போது குட்டிமணி- தேவன் ஆகியோர் வெறுங்கைகளால் காடையர்களை எதிர்த்து தாக்கினார்கள்.
குட்டிமணி பலசாலி, குத்துச் சண்டை மல்யுத்தம் போன்றவற்றை தெரிந்து வைத்திருந்தார். இறுதிவரை சளைக்காமல் எதிர்த்து தாக்கினார்.
ஆனாலும்- ஆட்பலமும், ஆயுதங்களும் காடையர் தரப்பில் அதிகம். அவர்கள் கைகளே மேலோங்கின.
குட்டிமணி வெட்டிச் சைக்கப்பட்டார். தொடர்ந்து அந்த சிறைத் தொகுதிக்குள் இருந்த 35 பேர் காடையர்களால் கொல்லப்பட்டனர்.
சிறைகாவளர்கள் வேடிக்கை பார்க்க சிறைக் காடையர்கள் நடத்திய வேட்டையில் 35 போராளிகள் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
குட்டிமணியின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கோரமும் அன்று தான் நடந்தது.
“இன்று இது போதும் மிகுதியை நாளை பார்த்துக் கொள்ளலாம்” என்று சிறைக் காவலர் ஒருவர் வேட்டையர்களை அழைத்துச் சென்றார் என்றும் தகவல்கள் வெளியாகின.
சிலுவை வடிவில் அமைந்த சிறைத் தொகுதிகளைக் கொண்டது வெலிக்கடை சிறை 25ம் திகதி சிலுவை வடிவத்தில் ஒரு பகுதியில் இருந்து சிறைத் தொகுதியில்தான் வேட்டை நடந்தது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், தேவன், சிவபாதம் மாஸ்டர், நடேசுதாசன், போன்றவர்கள் உட்பட 35 பேர் பலியானார்கள்.
ஏனைய சிறைத் தொகுதிகளுக்கும் செய்தி பரவியது.
எச்சரிக்கை :
அடுத்தது தாங்கள் தான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
சாப்பாட்டு கோப்பைகளை உடைத்தும் வளைத்தும் ஆயுதமாக்கிக் கொண்டார்கள் மீதியிருந்த தமிழ் கைதிகள்.
மறுநாள் 26ம் திகதி ஏனைய தமிழ் கைதிகள் மிரட்டபட்டார்கள்.
யார் தாக்குதால் நடத்தியது என்று சாட்சி சொல்லக்கூடாது. சொன்னால் உங்கள் கதையும் முடிந்துவிடும் என்று சிங்களக் கைதிகள் எச்சரித்தனர்.
தமிழ் கைதிகள் அஞ்சவில்லை பார்வையிட வந்த உயரதிகாரிகளிடம் தாக்குதல் பற்றி விபரித்தனர்.
26ம் திகதி எதுவும் நடக்கவில்லை.
சிறைகாவளர்கள் நினைத்திருந்தால் மீதியிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றாக வைத்திருந்திருக்கலாம்.
ஆனால் அவர்களோ வழக்கம் போல் தனித்தனி கூண்டுகளுக்குள் பூட்டினார்கள்.
ஒன்று அல்லது மூன்று, ஐந்து என்று ஒற்றை எண் வரக்குடியதாகத்தான் ஒரு கூண்டுக்குள் கைதிகள் விடப்படுவார்கள். அதுதான் சிறை விதி.
உயிருக்கே உத்தரவாதமளிக்க முடியாத நிலையில் விதிகளை மட்டும் கடைப்பிடித்து பயன் என்ன?
ஜூலை 27ம் திகதி-மதியம் 2 மணி மீண்டும் கூச்சல்கள்.
கொலைகார ஆயுதங்களோடு காடையர்கள் தமிழ் கைதிகளது கூண்டுகளை நோக்கி ஓடி வந்தனர்.
ஒரு சிறைக்காவலர் சிறந்த புத்திசாலி. தனது கைகளை பின்புறமாகக் கட்டிக்கொண்டு நின்றார். கையில் சாவிக் கொத்து. ஓடி வந்தவர்களுக்கு அது மிக வசதியாக இருந்தது. அவர்கள் சாவிக் கொத்தை அவரிடமிருந்து எடுத்துக் கொண்டனர்.
அதற்காகவேதான் அவர் அப்படி நின்றிருந்தார். வேலியே பயிரை மேய அனுமதி கொடுத்த காட்சி தான் அது.
சாவிக் கொத்துகளோடு வந்து கூண்டுகளை திறக்க முற்பட்ட காடையர்களை தமிழ் கைதிகள் தாக்கினார்கள்.
டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கம் தாசன், பாஸ்கரன், தேவகுமார், றொபேட, ஜெயக்கொடி ஆகியோர் உட்பட பல அரசியல் கைதிகள் துணிச்சலோடு எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.
சாப்பாடு கோப்பை மூலமாக தயாரான ஆயுதங்களால் கூண்டுக் கதவில் கைவைத்தவர்கள் மீது தாக்கினார்கள்.
முதிர்ந்தோர் ஆயினும் :
இதோ சமயம் டாக்டர் தர்மலிங்கம், டாக்டர் இராஜசுந்தரம், வணபிதா சிங்கராஜா, கோவை மகேசன், டேவிட் ஐயா போன்றவர்கள் ஒரே தொகுதியில் ஒன்றாக வைக்கபட்டிருன்தனர்.
வயது முதிர்தவர்கள், ஆபத்தில்லாதவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை ஒன்றாக அனுமதித்திருந்தனர்.
அவர்களும் பொல்லுகள் சகிதம் தயாராக இருந்தனர்.
அவர்கள் இருந்த சிறைத் தொகுதியை நோக்கி ஒரு கும்பல் பாய்ந்து சென்றது.
அப்போது காந்தியம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் இராஜசுந்தரம் கும்பலை நோக்கி முன்னே சென்றார்.
“நாங்கள் காந்தியவாதிகள், எங்களை தாக்குவது முறையல்ல”
என்றார் டாக்டர் இராஜசுந்தரம். காட்டுமிராண்டித்தனத்திடம் காந்தியம் செல்லுமோ?
ஒரு காடையன் தனது பொல்லால் டாக்டர் இராஜசுந்தரத்தின் தலையில் ஓங்கி அடித்தான்.
இரத்த வெள்ளத்தில் விழுந்த காந்தியவாதி தனது கடைசி மூச்சை இழுத்தார்.
அவரை சாய்த்துவிட்டு சிறை தொகுதியை நோக்கி பாய்ந்தது கும்பல்.
முதியவர்கள் என்ற போதும் அவர்கள் கும்பலை தாக்கினார்கள், கும்பல் பின்வாங்கியது.
அதில் சிலரை பிடித்து தமது சிறைத் தொகுதிக்குள் கொண்டுவந்து முழங்காலில் இருத்தி வைத்தனர் அந்த மூததோரான தமிழ் கைதிகள்.
தமிழ் கைதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்திருந்தால் சுலு 25 – 27இல் தாக்குதல் நடத்திய கும்பல் காணமல் போயிருக்கும்.
குறைந்த பட்சம் முதல் தாக்குதல் நடந்த பின்பாவது தமிழ் கைதிகளை ஒன்றாக வைத்திருந்திருக்கலாம்.
18 பேர் பலி :
ஆனால் செய்யவில்லை, ஜூலை 27இல் நடந்த வெறியாட்டத்தில் 18 தமிழ் அரசியல் கைதிகள் பலியானார்கள்.
பலத்த எதிர்தாக்குதல் நடத்தியதால் 18 பேரோடு பலியெடுப்பு நின்றது.
றொபட், டாக்டர் இராஜசுந்தரம், தேவகுமார், பாஸ்கரன் உட்பட 18 பேர் ஜூலை 27 அன்று இரத்தம் சிந்தி இன்னுயிர் இழந்தனர். இரண்டு நாளிலும் 53 பேர் பலியானார்கள்.
அதன் பின்னர் தான் இராணுவம் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியது.
தம்மிஸ்டர் ஆட்சியில் வெறித்தனம் தம்மிஸ்டப்படி வேட்டை நடத்தியது.
சிறைக்குள் தமிழ் கைதிகள் செத்துக்கொண்டுருக்கும் போது, வெளியேயும் தமிழர்கள் கலவரத்தியில் கருகிக் கொண்டிருந்தனர்.
“என் கண்களை பார்வையற்ற தமிழ் மகன் ஒருவருக்கு கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை அந்தக் கண்கள் மூலம் காண்கிறேன்”
என்று நீதிமன்றத்தில் சொன்னவர் போராளி குட்டிமணி.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குடிமணிக்கு வட்டுக்கோட்டை தொகுதி எம்.பி. பதவி தருவதாகக் கூறியது கூட்டணி.
குட்டிமணி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
அந்த தியாகப் போராளி வெலிக்கடை சிறையில் இரத்த சாட்சியானார்.
சிறை மாற்றம் :
ஜூலை 27ம் திகதி மாலையில் வெலிக்கடை சிறையில் மீதியிருந்த தமிழ் கைதிகள் இடம் மாற்றப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு தமிழ் கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
தென்னிலங்கையில் வேறு சிறைகளில் இருந்த தமிழ் கைதிகளும் மாற்றப்பட்டனர்.
மகர சிறையில் இருந்த பரமதேவாவும் அவ்வாறு மாற்றப்பட்டவர்களில் ஒருவர்.
சிறைகளில் கூட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதை அரசாங்கமே மறைமுகமாக ஒப்புக்கொண்டதின் அடையலாம் தான் சிறை மாற்றம்.
சிறையில் போராளிகள் படுகொலையான செய்தி உலகெங்கும் அதிர்சியோடு நோக்கப்பட்டது.
ஜே.அரசின் தர்மிஸ்ட முகமூடி கிழிந்து போனது. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்ட தப்பிய போராளிகள் தயாராக இருந்தனர்.
நேர்மையான விசாரணை மூலம் கொலையாளிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் தண்டிக்க அரசு முன்வரவில்லை.
வெலிக்கடை வேட்டைக்கு தலைமை தாங்கியவர்களின் ஒருவர் சேபால. இவர்தான் பின்னர் ஒரு விமானக் கடத்தலில் ஈடுப்பட்டார். மனநோயாளி என்று கூறப்பட்டார்.
காட்டுத் தீ :
83 ஜூலைப் படுகொலைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஈழப் போராட்டம் மீதான ஆழமான பிடிப்பை ஏற்படுத்தியது.
இனியும் ஒற்றையாட்சியின் கீழ் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவு திட்டவட்டமாக ஏற்ப்பட்டது.
மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் ஆயுதம் ஏந்துவது தவிர வேறு வழியில்லை என்று கருத்து காட்டுத் தீயாக பற்றிக்கொண்டது.
இந்திய அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. தமிழகம் கொந்தளித்தது.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மாநில அரசின் சார்பாக பொது வேலை நிறுத்தம் அறிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியும் இலங்கை அரசு மீது கண்டனங்களைத் தொடுத்தனர்.
இந்திய பிரதமர் அன்னை இந்திரா காந்தி ஒரு முடிவுக்கு வந்தார்.
எடுத்துச் சொன்னால் ஜே.ஆர். அரசு கேட்கப் போவதில்லை.
போராளி இயக்கங்கள் மூலமாக அடித்துச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்திய பிரதமர் தீர்மானித்தார்.
போராளி அமைப்புக்களில் முக்கியமனவற்றுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க இந்திய முன்வந்தது.
இயக்கங்களோடு தொடர்பு கொள்ளும் பொறுப்பை இந்திய ஆய்வு பகுப்பாய்வு பிரிவு என்று அழைக்கப்படும் ‘றோ’ ஏற்றுக்கொண்டது.
தமிழ் நாட்டில் அப்போது எம்.ஜி.ஆரின் ஆதரவோடு செயற்பட்டுக் கொண்டிருந்தது ‘புளொட்’ அமைப்பு.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் செல்வாக்குள்ள அமைச்சராக இருந்தவர் எஸ்.டி.சோமசுந்தரம். சுருக்கமாக எஸ்.டி.எஸ். என்று அழைபார்கள். எஸ்.டி.எஸ். உமா மகேஸ்வரனுக்கு நெருக்கம்.
புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர் காமராஜர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த நெடுமாறன்.
கலைஞர் கருணாநிதி ரெலோ அமைப்புக்கு ஆதரவாக இருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் நாட்டில் உள்ள ‘நக்சலைட்’என்று அழைக்கப்படும் குழுக்களோடு உறவாக இருந்தது.
இவற்றில் எந்த அமைப்பை தெரிவு செய்வது என்பதில் ‘றோ’ வுக்கு குழப்பம்.
தொடரும்…
எழுதுவது அற்புதன்