தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்.
சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு என்கிற சந்தேகங்களும் விமர்சனங்களும் பரவலாக நிலவிவந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் சி வி விக்னேஸ்வரனுக்கும் இடையில் முறுகல் நிலை நிலவுவதாக முன்பே வெளிவந்த செய்திகள் இத்தகைய சந்தேகத்துக்கும் சர்ச்சைக்கும் அடிப்படையாக அமைந்திருந்தன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி வி விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையிலும் இடம்பிடித்திருந்தது இந்த சந்தேகம் மற்றும் சர்ச்சையை அதிகரிக்கச் செய்திருந்தது.
இந்த பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சி வி விக்னேஸ்வரன் இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தனியாக சந்தித்துப் பேசினார்.
அந்த சந்திப்புக்கு பின்னர் பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சி வி விக்னேஸ்வரன் தமக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை குறைந்து புரிந்துணர்வு மேம்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இதே சந்திப்பு குறித்து பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த இரா சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது ஜனநாயக அமைப்பு என்றும் அதில் கருத்து மாறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றும் அதை பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் கூறினார்.
தமிழ் மக்கள் பேரவையை அமைப்பதும் செயற்படுவதும் ஜனநாயக உரிமையின்பாற்பட்ட செயற்பாடுகள் என்று தெரிவித்த சம்பந்தன், அந்தப் பேரவையில் இருப்பவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி வி விக்னேஸ்வரன் தவிர்த்த மற்ற தலைவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.
அதேசமயம் அவர்கள் அனைவருக்கும் தமது கருத்துக்களை சொல்வதற்கு போதிய உரிமைகள் இருப்பதை தாம் மறுக்கவில்லை என்று கூறிய சம்பந்தன், இந்தப் பேரவையின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பது அத்தியாவசியம் என்று தாம் நம்புவதாகவும், அதற்கு மாறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயல்களுக்கு (இவர்களால்) குந்தகம் ஏற்படுமாக இருந்தால் அவர்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதாகவே அமையும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
பிபிசி செய்தி-
சம்பந்னின் பேட்டியை இங்கே கேளுங்கள்