கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே பல உலகநாடுகளில் இருந்து சிறிலங்கா சம்பந்தமான விசாரணை அறிக்கை வெளிவருகிற காலத்திலே அந்த அறிக்கை ஒட்டிய தீர்மானம் எப்படி இருக்க வேண்டும் எப்படியான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதையிட்டு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

எங்களுடைய கணிப்பின்படி ஒரு வெற்றிகரமான இன்றைய சூழ்நிலையிலே ஒரு வெற்றிகரமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்தவகையில் 2009 ஆம் ஆண்டு போர்முடிந்த நிலையில் மே மாதம் 26 ஆம் திகதி ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையிலே சிறிலங்கா சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் பயங்கரவாதத்தை முறியடித்ததற்காக சிறிலங்கா அரசைப் பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

போரின் இறுதிக்கட்டத்திலே மனித உரிமை மீறல் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி எழுப்புவதற்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர அதை சிறிலங்கா அரசாங்கம் வேறுபல நாடுகளின் உதவியோடு மாற்றியமைத்து சிறிலங்கா அரசாங்கத்தைப் பாராட்டுகிற தீர்மானமாக அது நிறைவேற்றப்பட்டது.

இன்றைக்கு நாங்கள் திரும்பத்திரும்ப இவற்றை ஞாபகப்படுத்த வேண்டியது முக்கியமானது. ஏனென்றால் சென்றஆண்டு மார்ச் மாதம் – ஐந்து வருடத்துக்கு மேல் – சிறிலங்கா சம்பந்தமான ஒரு அனைத்துலக விசாரணையைக் கோருகின்ற தீர்மானத்தை வெளியிட்டிருந்தது.

இந்தமாற்றம் எப்படி நேர்ந்தது என்பது பலருக்குத் தெரியாது. தெரிந்திருந்தவர்களும் அதைப்பற்றிப் பேசுவதில்லை.

2011ஆம் ஆண்டு செப்ரெம்பர் அமர்விலே கனடா நாடு திரும்பவும் இந்தக் கேள்விகளை எழுப்புகிற ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. ஒரு கலந்துரையாடலுக்கு மட்டும் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. ஆனால் அப்படியான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குக்கூட உறுப்புநாடுகளுடைய ஆதரவு இல்லாத காரணத்தாலே – அதற்குச் சார்பாக நாடுகள் போதாத காரணத்தால் அது பிற்போடப்பட்டது.

அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க விஜயமொன்றை மேற்கொண்டது. 2011 ஒக்ரோபர் இறுதியிலே நாங்கள் இராஜாங்கத் திணைக்களத்தினால் அழைக்கப்பட்டு அங்கே பல சந்திப்புக்களை மூன்று நாட்கள் தங்கியிருந்து மேற்கொண்டோம்.

அந்தச் சந்திப்புக்களிலே தான் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாக இருந்தால் ஒரு பிரேரணையை அல்லது ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.

காரணம் அமெரிக்கா போன்ற நாடு அதனை முன்னின்று செய்தால் தவிர அது இடம்பெறாது என்பது எங்களுடைய கருத்தாக இருந்தது. நாங்கள் அவர்களோடு பேசி உடனடியாக அந்தத் தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம்.

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான் ஒருநாள் விஜயத்தை அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்தேன். அப்போதுகூட தாங்கள் (அமெரிக்கா) ஒரு தீர்மானத்தை கொண்டுவரப் போவதாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி அமெரிக்கா ஒரு தீர்மானத்தைப் பிரேரித்தது.

அமெரிக்கா பிரேரித்த முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த இரண்டு தீர்மானங்களும் போர்க்குற்றம், மனிதாபிமானத்துக்குஎதிரானகுற்றம் சம்பந்தமாக ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் அதை சிறிலங்கா அரசாங்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிற தீர்மானங்களாகும்

அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உலகம் எங்கணும் இருக்கிற எல்லாத் தமிழ் அமைப்புகளும் வேலைசெய்தன. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அந்த விசாரணையைத் தடுக்கவேண்டும் என நினைத்தது.

2012, 2013 இல் சுயாதீன விசாரணை வேண்டும் என்று கேட்டபோது அந்தத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை இருக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்ற ஒரு பொறுப்புண்டு என்றே கூறப்பட்டிருந்தது.

அன்று அந்த உள்ளகப் பொறிமுறைக்கு எல்லா அமைப்புகளும் ஆதரவளித்தன. உள்நாட்டிலே ஒரு விசாரணை நடக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தன. அதற்காக மற்றைய நாடுகளின் ஆதரவை கேட்டிருந்தார்கள்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதைச் செய்யாத காரணத்தாலே இறுதியாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஒரு அனைத்துலக விசாரணை உருவாக்கப்பட்டது.

இதிலே விசித்திரம் என்னவென்று சொன்னால் முதல் இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள், அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற போது இது வேண்டாம், இதில் பிரயோசனம்இல்லை, இதில் அனைத்துலக விசாரணை இல்லை என்று சொல்லி சென்ற ஆண்டு பெரியதொரு நாடகம் ஜெனிவாவில் நடத்தினார்கள்.

அவர்கள் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எரித்ததும் உங்களுக்குத் தெரியும். ஆகவே உள்ளகப் பொறிமுறையை ஆதரித்தவர்கள் அனைத்துலக விசாரணை வந்தபோது அது பிரயோசனம் இல்லை என்று சொல்லி அதை எதிர்த்தார்கள்.

நான் தொடர்ச்சியாக ஜெனிவாவில் நின்று கொண்டு இதை விமர்ச்சிக்க வேண்டாம், இதிலே அனைத்துலக விசாரணை உண்டு என்று எவ்வளவுதான் கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் அதற்கு எதிராகத்தான் செயற்பட்டார்கள். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை சிறிலங்காயிலும் கூட சில அரசியல்கட்சிகள் இது பிரயோசனமற்றது என்று வாதிட்டார்கள்.

இலகுவான ஒரு விடயத்தை கூட புரிந்து கொள்ளாமல் இந்த அனைத்துலக விசாரணை பிரயோசனமற்றது, இது எங்கள் போராட்டத்தை மலினப்படுத்துகிறது என்று பெரிய பிரச்சாரம் செய்து மக்களிடையே குழப்பம் விளைவித்தார்கள். வரலாற்றை குழப்புகிற நிகழ்ச்சி இன்றைக்கும் தொடர்கிறது.

ஆனால் அதே அனைத்துலக விசாரணை நடைபெற்றது. நடந்தது அனைத்துலக விசாரணை என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை முற்றுமுழுக்க அது அனைத்துலக விசாரணை தான். அதனுடைய அறிக்கை மார்ச் மாதம் வெளிவர வேண்டியது. ஆனால் அது ஒருதரம் மட்டும் செப்ரெம்பருக்கு பின் போடப்பட்டது.

ஆனால் செப்ரெம்பரில் அந்த அறிக்கை வருவதற்கு முன்னதாக, இது அனைத்துலக விசாரணை இல்லை, இது பிரயோசனமற்றது என்று சொன்ன அதே ஆட்கள் எங்களுக்கு அனைத்துலக விசாரணை வேண்டும் என்று கூக்குரல் இட்டார்கள்.

எல்லார் மனதிலும் பெரிய குழப்பம். ஒரு முழு விசாரணை நடந்து அந்த அறிக்கை வர இருக்கிறது. அந்த நேரம் பார்த்து எங்களுக்கு அனைத்துலக விசாரணை வேண்டும் என்று கேட்டால், நடந்தது என்ன? அதுவேண்டாம் இன்னொன்று கேட்கிறார்களா? பாரிய குழப்பம் மக்கள் மனதில் ஏற்பட்டது. நாங்கள் எதைச் சொன்னாலும், அவற்றில் முரண்பாடு இருக்கிறது என்று மக்களைக் குழப்பினார்களேயொழிய நாங்கள் சொன்ன விளக்கத்தை ஏற்கவில்லை.

அந்த விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. அதன் அறிக்கையும் வரஇருக்கிறது என்று சொன்னால், அப்படியென்றால் அனைத்துலக விசாரணை முடிந்து விட்டதா? இனியொன்றும் இல்லையா? என்றார்கள்.

மனித உரிமை ஆணையர் சொல்கிறார் நடத்தப்பட்டது அனைத்துலக விசாரணை. அந்த விசாரணை அறிக்கையிலேயே மிகத்தெளிவாக சில பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டிய குற்றவியல் நீதி விசாரணை சம்பந்தமாக சில பரிந்துரைகள் உண்டு.

இந்த விசாரணையில் இருந்து வெளிவந்த சில விடயங்களை சுட்டிக்காட்டி, அவர் என்ன சொல்கிறார் என்றால் இந்த விசாரணையின்படி இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் யுத்தக் குற்றங்களும் அனைத்துலக மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. அதற்குப் பொறுப்பானவர்கள் ஒரு குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தப்பட வேண்டும். வாக்குமூலங்கள் எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். வழக்கிலே முன்னிலைப்படுத்த வேண்டிய சாட்சிகள் இருக்க வேண்டும். அவைபற்றி விரிவாக மனிதஉரிமை ஆணையாளர் சொல்லியிருக்கிறார்.

அதை செய்வதாக இருந்தால் ஒரு கலப்பு குற்றவியல் விசாரணை நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டு காலத்திலே மனித உரிமைச் சட்டங்கள் வெகுவாக முன்னேறியிருக்கிறது. ருவாண்டவிலேயும் முன்னாள் யூகோஸ்லாவியாவிலேயும் பல அனைத்துலக குற்றங்கள் இடம்பெற்ற போது அனைத்துலக நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கவில்லை.

ஆகவே அதற்கென்று பாதுகாப்புச் சபையாலே ஆணையிடப்பட்டு குற்றவியல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. அதற்குப் பிறகு அனைத்துலக நீதிமன்றம் வந்தது. ஆனால் றோம்உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகளில் நடந்திருந்தால் தான் அதனை அனைத்துலக நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட முடியும். சிறிலங்கா அதில் கைச்சாத்திடவில்லை. கைச்சாத்திடாத நாடு சம்பந்தமாக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்புச் சபையால் மட்டுந்தான் அதனைப் பாரப்படுத்த முடியும்.

அதோடு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றை நாம் ஆராய்ந்து பார்த்த போது அங்கே மிகச்சொற்ப அளவிலான வழக்குகளிலேயே உயர்அதிகாரிகள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். எதுஎப்படியாக இருந்தாலும் சிறிலங்கா சம்பந்தமாக பாதுகாப்புச்சபைக்கு ஊடாகச் செல்லாமல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இப்போதைக்கு நாம் செல்ல முடியாது.

இந்தச் சூழ்நிலையிலே வேறுநாடுகளில் என்ன நடந்தது என்று ஆராய்ந்த பார்த்தபோது இந்தக் கலப்பு நீதிமன்றம் என்ற முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு.

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது. ஆனால் ஒரு கலப்பு நீதிமன்றம் ஒன்றை அந்த நாட்டுச் சட்டத்திலேயே உருவாக்க முடியுமென்றால் அதனை அந்த நாட்டிலேயே நடைமுறைப்படுத்தக் கூடிய சட்டவலு அதற்கு இருக்கும். அப்படியான சில சிறப்பு இயல்புகள் இந்தக் கலப்பு நீதிமன்றத்துக்கு உண்டு.

இவற்றை ஆராய்ந்து இந்த விசாரணை அறிக்கை வரமுன்னரே, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர்கள் இருவர் தேர்தலின் பின்னர் சிறிலங்காவுக்கு வந்தபோது – அவர்களைச் சந்தித்து – நாங்கள் கலப்பு நீதிமன்றம் வேண்டும் என்று சொன்னோம்.

அதற்குப்பிறகு இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமான போது சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் சிறப்பான ஒரு உரையை ஆற்றியிருந்தார். நாங்கள் எல்லாத் தருணங்களிலும் சொன்ன ஒன்றையும் நாங்கள் செய்யவில்லை, எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் மீறியிருக்கிறோம் என எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டார். எல்லாவற்றையும் ஒப்புக்கொண்ட பின்னர் இனிமேல் எங்களை நம்புங்கள் என்றார்.

நீங்களே சொல்லுகிறீர்கள் ஒன்றையும் செய்யவில்லை என்று, உங்களை நம்பமுடியாது, நம்பவேண்டும் என்றால் நீங்கள் செய்து காட்ட வேண்டும். செய்து காட்டுவதாக இருந்தால் மட்டும் எங்களுடைய உதவி இருக்கும்.

கலப்பு நீதிமன்றம் வேண்டும் என்ற மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை வெளிப்படையாக நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த அனைத்துலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் கலப்பு நீதிமன்றம் செயற்படுத்தப்பட வேண்டும். இது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாக இருந்தது. அதை சிறிலங்கா அரசாங்கம் இப்போது ஏற்றிருக்கிறது.

(தொடரும்)

Share.
Leave A Reply