சத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை கேட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.

வெற்றிகரமான ஹீரோ என்ற நிலைக்கு வந்து விட்ட சத்யராஜ், நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் படங்களிலும் நடித்தார். பாலாஜி தயாரித்த “மங்கம்மா சபதம்”, “அண்ணி” ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், “விடுதலை” படத்தில் மட்டும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார்.

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“ஹீரோவாக வளர்ந்து விட்டேன். என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இனி `வில்லன்’ வேடத்தையும் செய்தால், என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன்.

அதனால்தான் பாலாஜி சாரின் மங்கம்மா சபதம், அண்ணி படங்களில் வில்லனாக நடித்த நான், அடுத்து அவர் தயாரித்த `விடுதலை’ படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

இத்தனைக்கும் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் எடுத்தார்கள். நான் அதுவரை லண்டனை பார்த்ததில்லை.

“எந்த வேடமாக இருந்தால் என்ன! லண்டன் பயணத்தை அனுபவித்து விடுவோம்” என்று எண்ணியிருந்தால் ஒருவேளை அந்த வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டிருந்திருப்பேன்.

ஆனால் நான் பாலாஜி சாரிடம், “நான் ஹீரோவாக நடித்த படங்கள் வரத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது” என்று சொன்னேன்.

பாலாஜி சார் என்னை கூர்மையாகப் பார்த்தார். “இனி வில்லனாக நடிப்பதில்லை என்பதில் அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டதா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்! அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றேன்.

“உங்கள் தன்னம்பிக்கை வெற்றி பெறட்டும்” என்று வாழ்த்தியவர், என் தன்னம்பிக்கைக்கு அவரும் கைகொடுக்கும் விதமாய் எனக்குத் தந்த படம்தான் “மக்கள் என் பக்கம்.

” மலையாளத்தில் பாலாஜி சாரின் மருமகன் மோகன்லால் நடித்த “ராஜா வின்டெ மகன்” படத்தைத்தான் இந்தப் பெயரில் தமிழில் `ரீமேக்’ செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப்படம், தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது.

பாலாஜி சார், மற்ற எந்த நிறுவனத்திலும் செய்திராத ஒரு ஏற்பாட்டை தனது நிறுவனத்தில் கலைஞர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் செய்தார்.

நடிகர் – நடிகைகள், டைரக்டர் ஆகியோர், படப்பிடிப்பின்போது உட்காரும் நாற்காலியில், அவர்களின் பெயரை குறிப்பிட ஏற்பாடுசெய்தார். இதனால், ஒருவர் நாற்காலியில் பிறர் உட்கார்ந்து கொள்ள முடியாது.

“மங்கம்மா சபதம்” படத்தில் நடித்தபோது என் வில்லன் நடிப்புக்கு பேசிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால் எனக்கு வந்து சேர்ந்ததோ 40 ஆயிரம் ரூபாய்!

கணக்கில் ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினைத்த நான், பாலாஜி சாரை பார்த்து மீதி 15 ஆயிரத்தை கொடுக்கப்போனேன்.

அவரோ, “நன்றாக நடித்திருந்தீர்கள். அதனால், பேசினதைவிட அதிகமாகக் கொடுக்கத் தோன்றியது. கொடுத்தேன்” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்.

படத்தின் தரத்துக்காக செலவை பொருட்படுத்தாதவர் இவர். “மக்கள் என்பக்கம்” படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோக்கள் தேவை என்று டைரக்டர் கேட்டபோது, 100 ஆட்டோக்களை உடனடியாக ஏற்பாடு செய்து விட்டார்.

நான்கூட அவரிடம், “சார்! 20 ஆட்டோ போதுமே” என்றேன். “கதைக்கு தேவையான பிரமாண்டத்துக்கு 100 ஆட்டோக்கள் இருக்கட்டுமே” என்று சொல்லிவிட்டார். 28 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

பாலாஜி சாரின் “திராவிடன்” படத்திலும் ஹீரோவாக நடித்தேன்.

நடிக்க வந்த பிறகு, இந்தக் கேரக்டரில் நடிக்கிறேன் என்று நானாக கேட்டு வாங்கி நடித்தது “காவல்” படம் மட்டும்தான். பாலாஜி சாரின் தயாரிப்பான இந்தப்படம், ஒரு இந்திப்படத்தின் ரீமேக். அந்த இந்திப்படத்தில் ஹீரோவாக ஓம்புரியும், ஐந்து நிமிடமே வந்து போகிற போலீஸ்காரர் கேரக்டரில் நசுருதீன்ஷாவும் நடித்திருந்தார்கள்.

இந்தப் படத்தை நான் பார்த்தபோது, நசுருதீன்ஷா நடித்த அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும், பாலாஜி சாரை நானே போய் சந்தித்தேன்.

“சார்! எனக்கு சம்பளம் வேண்டாம். இந்தியில் நசுருதீன் ஷா நடித்த அந்த கவுரவ கேரக்டரை தமிழில் எனக்கு கொடுத்து விடுங்கள்” என்றேன். அவரும், “தாராளமாய் நடியுங்கள்” என்றார்.

படத்தில் என் போர்ஷனை இரண்டே நாளில் எடுத்து முடித்தார்கள். நான் பாலாஜி சாரை சந்தித்து, என் `நடிப்பு விருப்பம்’ நிறைவேற்றியதற்காக நன்றி சொல்லி புறப்பட்டபோது, தடுத்து நிறுத்தி, என் கையில் 3 பவுன்களைத் திணித்தார்.

நான், “சார்! எனக்கு சம்பளமே வேண்டாம்” என்று கூற, அவரோ, “இது என் அன்பளிப்பு. சம்பளம் அல்ல. நீங்கள் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டார்.

எனது 2 நாள் நடிப்புக்கு கிடைத்த 3 பவுனை கணக்கில் கொண்டால் அப்போது நான் படங்களுக்கு வாங்கிய சம்பள அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்துக்குத்தான்!

தமிழ் சினிமாவில் அப்போது மலையாளத் திரையுலகில் இருந்து வந்து புரட்சி ஏற்படுத்தியவர் டைரக்டர் பாசில். தமிழில், ஜெய்சங்கர், பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர் நடித்த “பூவே பூச்சூடவா’‘ படம் மூலம் ரொம்பவே பாப்புலராகி விட்டார். வித்தியாசமான கதைப் பின்னணிக்காக அந்தப்படம் பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றது.

நான் அப்போது படங்களில் இரவு, பகலாக ஓய்வின்றி நடித்த நேரம். தனது அடுத்த படத்தில் நடிக்கும்படி பாசில் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

பாம்குரோவ் ஓட்டலில், ஒரு இரவில் கதையைச் சொன்னார். ஓய்வே இல்லாததால், களைப்பு அடைந்திருந்த நான், கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதை சொல்லி முடித்த பாசில், “கதை எப்படி இருக்கிறது” என்று கேட்டபோது கூட, உடனே நான் பதில் சொல்லவில்லை.

பாசில் புறப்பட்டுப்போனதும் எனது மானேஜர் ராமநாதனிடம் “அவர் கதை சொன்னார். நான் களைப்பாக இருந்ததால், கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இந்தக் கதையில் நடிக்கவில்லை என்று கூறிவிடலாமா?” என்று கேட்டேன்.

அவரோ, “சார்! பாசில் மலையாளத்தில் பெரிய டைரக்டர். தமிழிலும் அவர் பெரிய அளவில் வருவார். நிச்சயம் அவர் வித்தியாசமான கதைக்குத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறார். பேசாமல் `சரி’ என்று சொல்லிவிடுங்கள்” என்றார்.

அப்படி நான் ஒப்புக்கொண்ட படம்தான் “பூவிழி வாசலிலே.”

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது. எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் எனக்கு சாப்பாட்டுப் பிரச்சினை கிடையாது.

அந்தந்த ஊரில் உள்ள உணவுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். ஆனால் ஆலப்புழையில் மட்டும் எனக்கு கேரள உணவுக்குப் பதிலாக தமிழ்நாட்டு உணவு வகைகளையே தந்தார்கள்.

இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே தயாரிப்பாளரிடம் “உங்க ஊர் உணவையே எனக்கு கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பிரவுன் கலர் அரிசி சாப்பாடு, புட்டு, மீன் குழம்பு, நேந்திரம் பழம் என்று படப்பிடிப்பு நடந்த நாட்களில் கேரள ஸ்பெஷல் உணவுகளுடனேயே ஐக்கியமாகிவிட்டேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வருவார்கள். செட்டே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சிறுவனாக முக்கிய கேரக்டரில் நடித்த சுஜிதா, பெண் குழந்தை என்று முதலில் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகே தெரியும். குழந்தை என்றாலும் சுஜிதா நடிப்பில் மிரட்டியிருந்தாள். படம் “சூப்பர்ஹிட்” ஆனது.

சமீபத்தில் ஒரு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசப்போனபோது ஒரு அம்மா என்னிடம் ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார்.

“சார்! இது என் பெண் சுஜிதா. நீங்கள் நடித்த “பூவிழி வாசலிலே” படத்தில் சிறுவனாக நடித்தது இவள்தான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குட்டிப்பெண் வளர்ந்து பெரியவளாக நிற்கும்போதுதான், நமக்கும் வயதாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது!

“பூவிழி வாசலிலே” படத்தில் நடித்த பிறகு, மறுபடியும் பாசில் டைரக்ஷனில் “பொம்முகுட்டி அம்மாவுக்கு” படத்திலும் நடித்தேன்.

இந்தப் படத்தில்தான் சுஹாசினி எனக்கு முதன் முதலாக ஜோடியானார். ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக என்னை நடிக்க வைத்து இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்தார், பாசில்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

கதாநாயகனாக சத்யராஜ் நடித்த கடலோரக் கவிதைகள் மகத்தான வெற்றி (சினி தொடர்-8)

Share.
Leave A Reply