• உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் பிபாகரனை நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை.
• யாராவது ஒருவர் தம்மை விட உயர்ந்த தலைவராக கருதும் நிலை ஏற்படின் அவர் படுகொலை செய்யப்படுவார்.
• பிரபாகரனின் பார்வையில் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டால் அவரைப் பழி தீர்க்கும் வரை அவர் ஓய்வதும் இல்லை.
• கருணா அம்மான் தனது 7000 போராளிகளுடன் வெளியேறியது அவர்களின் பலத்தை மிகவும் குறைத்திருந்தது. இதனால் கிழக்கில் எமது செயற்பாடுகள் இலகுவாக அமைந்தன.
தொடர்ந்து….
பிரபாகரனின் பிறந்த நாளையும், மறைந்த போராளிகளின் நினைவு கூரும் மாவீரர் நாளில் தனது ஆதரவாளர்களுக்கென வருடா வருடம் உரை நிகழ்த்துவார்.
இந்த நினைவு நாள் வாரத்தில் ராணுவத்தின் நிலைகள் எங்காவது தாக்கப்படலாம் என எண்ணி ராணுவம் விழிப்பாக இயங்கும்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களின் தலைநகர்களிலும் கொண்டாட்டங்கள் நிகழ, இலங்கையில் பயங்கரவாதம் முதன்மைபெற்றதாக இருக்கும்.
இந்த மாவீரர் வாரம் தவிர்ந்த ஏனைய காலத்தில் அவர் மக்கள் முன் தோன்றியதில்லை. இது அவர் எவ்வளவு பயத்தில் வாழ்ந்தார் என்பதை உணர்த்தியது.
வருடா வருடம் நிகழும் மாவீரர் நாள் உரையைச் செவிமடுக்க உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர் உட்பட சிங்கள மக்களும் அதிகம் செவிமடுப்பார்கள்.
புலிகளின் ராணுவ உடை தரித்து வழங்கும் உரை ஒவ்வொரு இலங்கையர் உள்ளங்களிலும் பயத்தை உருவாக்கும்.
காலப் போக்கில் அவ்வாறு பொது இடத்தில் உரையாற்றுவதைக் கைவிட்டுப் பாதுகாப்பான இடத்திலிருந்து உரைகளை வழங்கினார்.
ஆபத்துக்கள்
தனது தலைமைக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர் எப்போதுமே எச்சரிக்கையுடன் செயற்பட்டார்.
அவ்வாறு ஆபத்துக்கள் ஏற்பட்ட வேளையில் மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டார். புலொட், ரெலோ, ஈ பி ஆர் எல் எவ் போன்ற சக அமைப்புகள் மக்கள் ஆதரவைப் பெறுவதாக தெரிந்ததும் அவற்றை இல்லாதொழித்தார்.
ஆயிரக் கணக்கான போராளிகளை தனித்தனியாகவே கொன்றொழித்தார். இவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே இலக்கை நோக்கிப் போராடியவர்கள்.
இந்த இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் பலர் தாம் இரக்கமில்லாமல் துரோகிகள் எனக் கூறி கொல்லப்படலாம் என அஞ்சித் தமது கிராமங்களிலிருந்து ஓடி ஒதுங்கினார்கள்.
இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போக்கை அழித்து தனது தலைமையைப் பாதுகாக்கவும் செயற் பட்டார்.
ஏகப் பிரதிநிதிகள்
தமிழீழம் எனக் கூறி தவறாக வழி நடத்தப்பட்ட பல ஆயிரம் தமிழ் இளைஞர்கள் தமது உயிர்களை இழந்தமையால் விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக உலகின் கண்களுக்குத் தெரிந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள்ளும் தமக்கு எதிர்ப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தார். அவரது இயக்கத்தில் உப தலைவர் பதவி ஒன்று ஒருபோதும் உருவாக்கப்படவில்லை.
அவ்வாறான ஒருவர் உருவாவதாக தெரிந்தால் அவரை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்.
மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா அவ்வாறு உப தலைவராக கருதப்பட்ட போது அவரை ஒழித்துக்கட்டி ஏனையோருக்கும் எச்சரிக்கைச் சமிக்ஞையை வெளியிட்டார்.
தனது இயக்கத்திற்குள் தலைமைப் பதவிக்கு போட்டி ஏற்படுவதைத் தடுத்தது போலவே, தமிழ்ச் சமூகத்திற்குள் தனது தலைமைக்கு எதிராக தன்னை மதிக்காத, தனது இலக்கை அங்கீகரிக்காத எவரையும் விட்டு வைத்ததில்லை.
யாராவது ஒருவர் தம்மை விட உயர்ந்த தலைவராக கருதும் நிலை ஏற்படின் அவர் படுகொலை செய்யப்படுவார்.
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோரின் படுகொலைகள் தமிழ்ச் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளாக அமைந்தன.
அதே போலவே தமிழீழ நோக்கத்திற்கு எதிராகவும், தமக்கு எதிராகவும் செயற்படும் சிங்களத் தலைவர்களும் ஈவிரக்கம் இல்லாமல்
மௌனமாக்கப் பட்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலர் கோதபய ராஜபக்ஸ, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றோர் பல தடவைகள் இலக்கு வைத்துத் தப்பியவர்களாகும்.
பிரபாகரனின் பார்வையில் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டால் அவரைப் பழி தீர்க்கும் வரை அவர் ஓய்வதும் இல்லை.
அதன் பின் விளைவுகள் குறித்துக் கவலைப்படுவதும் இல்லை.
மிகவும் தயக்கத்துடன்தான் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியதால் இந்திய சமாதானப் படை இலங்கை வர வாய்ப்பளிக்கப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய சில மாதங்களுக்குள்ளாகவே அந்திய படைகளுக்கு எதிராக ஜே வி பி யின் நடவடிக்கைகள் ஆரம்பித்தன.
சிங்களப் பிரதேசங்களில் இந்திய எதிர்ப்பு தீவிரப்படுத்தப்பட்டுப் பின்னர் ராஜிவ் காந்தி கடற்படை அணிவகுப்பின்போது தாக்கப்பட்ட சம்பவமாகும்.
தெற்கு எரிந்து கொண்டிருக்கும்போது வடக்கில் இந்திய சமாதானப் படையை புலிகளின் தலைமையில் அங்கு வரவேற்றார்கள்.
ஆனால் அவை யாவும் மிக விரைவாகவே மாறி, இந்திய சமாதானப் படையினர் புலிகளின் தாக்குதல் இலக்காக மாற்றப்பட்டார்கள். மிகவும் கடுமையான பரஸ்பர தாக்குதல் காரணமாக இரு தரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டன.
மிகவும் அவமானத்துடன் சமாதானப் படையினர் வெளியேறினார்கள். இதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகளால் எழுந்த கோபம் காரணமாக ராஜிவ் காந்தி பழி தீர்க்கப்பட்டார்.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்திய முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி அவர்களின் புதல்வர் என நன்கு தெரிந்திருந்தம், அவர்களே தமது வளர்ச்சிக்கு உதவினார்கள் எனப் புரிந்திருந்தும், அதன் விளைவுகள் குறித்து அறிந்திருந்தும் திட்டமிட்டே பிரபாகரன் பழி தீர்த்துள்ளார்.
இந்திய உளவுப் பிரிவினரால் கூட அறிய முடியாத அளவிற்கு நன்கு திட்டம் தீட்டிப் பெண் தற்கொலைப் போராளி மூலமாக நிறைவேற்றினர்.
இப் பாரதூரமான செயற்பாடு இவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டின் வல்லமையை உலக நாடுகளுக்கு உணர்த்தியது. இதன் விளைவாக புலிகளை இந்தியா மிகவும் வெறுத்ததோடு, ஈழம் என்ற கோட்பாடு பற்றிய அபிப்பிராயங்களையும் மாற்றியது.
இருப்பினும் இவை யாவும் எமது இறுதிப் போருக்கான, புலிகளை ஒழிப்பதற்கான ஆசீர்வாதமாகவே எமக்கு அமைந்தது.
புலிகளின் செயற்பாடுகளுக்கான வெற்றியாக அமைந்தவற்றில் இன்னொரு அம்சம் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்ற அளவிற்கு ஏனைய ஈழம் கோரிய அமைப்புகளின் சவால்களையும் மீறி வளர்ந்தமைக்குக் காரணம் பிரபாகரனின் இறுக்கமான கட்டுப்பாடு ஆகும்.
இப் போரின் ஆரம்ப முதல் இறுதி வரை செயற்பட்ட ராணுவ அதிகாரி என்ற வகையில் அவர் தனது இயக்கத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்திய தந்திரங்கள் அல்லது வியூகங்களே காரணமெனக் கருதுகிறேன்.
தண்டனை வழங்குவதில் ஈவிரக்கமற்ற போக்கைக் கொண்டிருந்தமையால் இயக்கத்திற்குள் மட்டுமல்லாது சமூகத்திற்குள்ளும் இது ஊடுருவியது.
இதே கட்டுப்பாடு இறுதிப் போரின் போது காணப்பட்டதா? என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் ஆண், பெண் போராளிகளிடையே பெரும் இடைவெளி காணப்பட்டது.
காலப் போக்கில் அவை மாறின. 2008ம் ஆண்டு முகமாலையில் 53வது படைப் பிரிவின் கமாண்டராக நான் செயலாற்றிய போது சிறு, சிறு குழுக்களாகப் பிரிந்து புலிகளின் முன் அரங்குகளைத் தாக்குவது வழக்கம்.
அங்கு ஆண், பெண, போராளிகள் முன் அரங்குகளில் காவல் புரிவார்கள். இவர்களே முதலில் எமது தாக்குதல்களால் மரணிப்பார்கள். அவ்வாறு மரணித்தவர்களின் உடல்களைப் பரிசோதித்தபோது அவர்களது ஆடைக்குள் கருத்தடைப் பொருட்கள் இருந்தன.
இதனால் பிரபாகரனின் கட்டுப்பாடுகள் என்பது கீழ் மட்டத்தில் எவ்வளவு தூரம் பின்பற்றப்பட்டன? என்ற சந்தேகங்கள் எமக்குள் எழுந்தன.
புலிகள் அமைப்பிற்குள் களவு, மதுபானப் பாவனை, திருட்டுப் பண மாற்றம், பாலியல் செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றங்களாக இருந்தன.
இதனால் இயக்கத்தின் மூத்த உறுப்பினராயினும் வயது, தகுதி என்பவற்றிகு அப்பால் மரண தண்டனை பெற்றுள்ளனர்.
பிரபாகரனின் உயர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் முக்கிய மூன்று காரணிகளைக் குறிப்பிடலாம்.
• முதலாவது தனது பலம், அதிகாரம், இயக்கம் என்பவற்றின் ஆற்றலை அளவிற்கு அதிகமாகவே மதிப்பீடு செய்தமை.
• இரண்டாவதாக இலங்கை ராணுவம் குறித்து மிகவும் குறைத்து மதிப்பீடு செய்தார்.
• மூன்றாவதாக மிக முக்கியமான தலைவர்களின் வெளியேற்றம். உதாரணமாக கருணா அம்மானைக் குறிப்பிடலாம். புலிகளின் வெற்றிகள் காரணமாகவும், ராணுவத்தின் அடுத்தடுத்த தோல்விகள் காரணமாகவும் அதீத நம்பிக்கையில் வாழ்ந்தார்.
இவையே அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.
கெரில்லா தந்திரங்கள் மூலம் இந்திய சமாதானப் படையினரை அவமானத்துடன் அனுப்பிய தந்திரம் வெற்றியைக் கொடுத்திருந்தது.
ஆனால் அவர் தனது ராணுவத்தினரை கெரில்லா முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமை அவரது அளவிற்கதிகமான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
இதன் காரணமாக எமது ராணுவம் தனது அணுகுமுறையை கெரில்லா முறைக்கு மாற்றியது. புலிகளின் வெற்றி தோல்விகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டதன் காரணமாக நாம் எமது வழி முறையை மாற்றினோம்.
இதனால் நாம் எமது ராணுவ எண்ணிக்கை, ஆயுத பலம் என்பவற்றிலிருந்து விடுபட்டு ராணுவத்தின் தரத்தினை உயர்த்தவதில் ஈடுபட்டோம்.
கருணா அம்மான் தனது 7000 போராளிகளுடன் வெளியேறியது அவர்களின் பலத்தை மிகவும் குறைத்திருந்தது. இதனால் கிழக்கில் எமது செயற்பாடுகள் இலகுவாக அமைந்தன.
பயங்கரவாத இயக்கம் என்பது போர் புரிவதிலும், அதே வேளை அரசியல் அதிகாரத்தை உயர்த்துவதிலும் சமாந்தரமாக செயற்படுவது அவசியம் என்பது உலகில் பலரும் அறிந்த உண்மை.
ஆனால் பிரபாகரன் போரில் அதிக கவனம் செலுத்தி, அரசியலில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட, பெயரளவிலான அளவிலேயே கவனம் செலுத்தினார்.
அவரது தந்திரோபாயத்தில் இது மிகப் பெரிய இடைவெளி என நம்புகிறேன்.
அவரை உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை. இந்த அப்பட்டமான உண்மையை இன்று வரை தமிழ்ச் சமூகம் உணராமல் உள்ளது.
தனிப்பட்ட முறையில் பிரபாகரனின் கொடுமையான குணங்களை வெறுத்த போதிலும், சில வியக்கத்தக்க குணாம்சங்களை நான் அவதானித்துள்ளேன்.
அவர் தனது மனைவி, பிள்ளைகளை மிகவும் நேசித்தார்.
போரின் இறுதிக் காலத்தில் நாம் கைப்பற்றிய ஆயிரக் கணக்கான புகைப்படங்கள் அவற்றை உணர்த்தின.
தற்கொலைப் போராளிகளை பல்வேறு இலக்குகளை நோக்கி கணிசமான தொகையினரை ஈடுபடுத்தினார். இவர்களில் பெரும்பாலோர் பெண்களாகும்.
இப் பெண் தற்கொலைப் போராளிகள் தமது தலைவருக்காக தமது உயிரை மட்டுமல்ல, உடலையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள்.
இம் மாதிரியான சூழலில் அவர்களைத் தவறான நோக்கங்களுக்காக அவர் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் பெண்களைத் தவறாக பயன்படுத்துபவராக அல்லது பாலியல் குற்றத்தைச் செய்பவராக இருந்ததில்லை.
நாம் அவர் பலருடன் இணைந்து நின்ற பல ஆயிரம் புகைப்படங்களில் ஒரு படத்திலாவது அவரை மதுபானத்துடன் காணவில்லை.
அவரை இவ்வாறான குற்றவாளியாகக் காட்டுவதற்கு எம்மால் எந்த ஒரு சாட்சியத்தையும் பெற முடியவில்லை.
அதனால்தான் அவரது சமூகத்திலுள்ள ஒரு தமிழராவது அவரை அவமானப்படுத்தியதாக, அல்லது கடினமாக விமர்ச்சித்ததாக நான் அறியவில்லை.
யாரவது உறுப்பினர் இயக்கத்திற்குத் துரோகமிழைத்தவர் எனில் அவர் ஒழிக்கப்பட்டார்.
பல போராளிகள் இயக்கத்திலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்வை நோக்கிச் செல்ல விரும்பிய போதிலும் இவ்வாறான முடிவு கிடைக்கலாம் என்ற பயம் காரணமாக விலகாமல் இருந்தார்கள்.
ஆரம்பத்தில் திருமணம் தடுக்கப்பட்டி ருந்த போதிலும் காலப் போக்கில் அவை நெகிழ்ந்தன. இயக்கத்திலுள்ள இருவர் திருமணம் செய்ய விரும்பின் ஒருவர் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
போற்றுதற்குரியவை.
இயக்கத்திற்குள் கட்டுப்பாடுகளை நிலைநிறுத்த அவர் கையாண்ட வழிமுறைகள் எதிர்கால ஆய்விற்கு உரிய அம்சங்களாகும்.
ஏனெனில் கல்வி அறிவு குறைந்த, ஆயுதம் தரித்த இளைஞர்களை அவர் கட்டுப்படுத்திய விதமும், இயக்கத்திற்கும், அதன் கோட்பாடுகளுக்கும் தம்மை அர்ப்பணித்த விதமும் போற்றுதற்குரியவை.
மிகப் பெரும் தொகையான பணம் உலகம் முழுவதிலிருந்தும் குவிந்த போதிலும், அவர் வசதியான வாழ்வைத் தேடி வேறு நாட்டிற்கு ஓடவில்லை.
பதிலாக வன்னிக காட்டிற்குள் வாழ்ந்து போராட்டத்தை வழி நடத்திச் சென்றமை அவரது சலனமற்ற இலட்சிய உறுதியைக் காட்டியது. அவரது வாழ்வைப் போல இதர தலைவர்களும் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்தார்களா? எனில் இல்லை என்றே கூறலாம்.
30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இப் போர் முடிவடைந்த பின்னர் வன்னிப் பிரிவின்பாதுகாப்பு படைகளின் தளபதியாகவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்புள்ள அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டடேன்.
இவ் வேளையில் அங்கு வரும் வெளிநாட்டு உயர் அதிகாரிகளும், பிரதிநிதிகளும் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு விஜயம் செய்யும்போது என்னிடம் அடிக்கடி விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு உண்டா? எனக் கேட்பார்கள்.
எனது பதில் அது சாத்திமில்லை என்பதே. அதற்கான காரணமாக அவ்வாறான தொகையிலும், பலத்திலும், தீர்மானத்திலும், தியாகத்திலும், ஈடுபாட்டிலும், கட்டுப்பாட்டிலும், ஈவிரக்கமற்ற மனோபாவத்திலும் பிரபாகரன் போன்ற ஒருவர் தோற்றுவது சந்தேகமே
என்பேன்.
ஆனாலும் தற்போதைய அனுபவங்களைப் பார்க்கையில் இப் போரிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொள்ளாவிடில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாவிடில், மிக அதிகபட்ச விழிப்புடன் செயற்படாவிடில் இன்னொரு பிரபாகரன் தோற்றுவது சாத்தியமே.
வி.சிவலிங்கம்
(முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to Nandikadal) என்ற நூலிலிருந்து சில பகுதிகள்)
( உத்தரவுடன் பிரதி செய்தல் நல்லது)
(Copy right reserved)