திருப்பதி: செம்பரம் கடத்தல் தொடர்பாக விசாரணைக்கென்று அழைத்து செல்லப்பட்ட 7 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தப்பி வந்த தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சித்தூரில், சந்திரகிரி மண்டல் பகுதியில் அமைந்துள்ள சீகடிகோணை, ஈதகுண்டா (ஸ்ரீவாரிமெட்டு) என்னும் 2 இடங்களில் சுமார் 100 பேர் செம்மரங்களை வெட்டிக்கொண்டிருப்பதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும், செம்மரங்களை வெட்டிக்கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்ததாகவும், அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்ததாகவும்,

இதில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 9 காவல்துறையினர் காயம் அடைந்ததாகவும் ஆந்திர காவல்துறையினர் கூறியுள்ளனர். பலியானவர்களில் 20 பேரும் தமிழர்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருத்தணியில் இருந்து 7 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தப்பி வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, 20 பேரின் உடல்கள் திருப்பதி ரோயா அரசு மருத்துவமனையில் இன்று காலை பிரேத பரிசோதனை நடந்தது. மருத்துவமனையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

9(1)சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பலியான உறவினர்கள் யாரும் உடலை வாங்க இதுவரை வரவில்லை. இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் உதவி மையத்தை ஆந்திர அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனை வளாகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் நடத்தியது போலி என்கவுன்டர் என்றும், காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் இருமாநிலத்தின் நல்லுறவு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தெலுங்கு மனித உரிமை அமைப்பினர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி சின்ஹா மோகன் ஆகியோர் இன்று மருத்துவமனை வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய சின்ஹா, காவல்துறையினர் நடத்தியது போலி என்கவுன்டர் என்றும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையம் முன்பு ஒருவர் திடீரென மைக்கை கையில் பிடித்தபடி, தமிழ் பேசும் அதிகாரிகள் இங்கே இருக்கிறார்கள். உடனடியாக அவர்கள் வந்த உடல்களை வாங்கி கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.

உடல் வாங்கி சென்றால் பிரச்னை எதுவும் வந்துவிடாது. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறினார். ஆனால், உடலை வாங்க யாரும் முன்வரவில்லை.

Share.
Leave A Reply