நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் அரசியலில் புதிய கட்டமைப்பே உருவாகியுள்ளது என்று கூறலாம். ஒருவிதமான குழப்பமான அரசியல் சூழல் காணப்படுவதாக கூறப்பட்டாலும் புதிய அரசாங்கம் ஒன்றுக்காக மக்களின் ஆணை கிடைத்துள்ளது என்பதே உண்மையாகும்.
அந்தவகையில் புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது.
மறுபுறம் மக்களுக்கான நிவாரணங்களை வழங்கி மக்களின் மனதில் இடம்பிடிப்பதற்கான பாரிய முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளது.
அத்துடன் மூன்று மாதங்களில் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் அவதானம் செலுத்தியுள்ளன.
தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
புதிய அரசாங்கம் இவ்வாறு 100 நாள் திட்டத்தில் மூழ்கியிருக்கின்ற நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் அரசியல் நகர்வு ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது.
அதாவது மஹிந்த ராஜபக் ஷ , தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இணைந்து அரசியல் கட்சி ஒன்றின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க சில ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தில் யார் ஆட்சியமைப்பது என்பதனை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதே இந்த அணியின் நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரசாரம் செய்யும்போது சுதந்திரக் கட்சியின் வாக்குகள் உடைந்து இந்த அணிக்கு வரலாம் என்ற எண்ணம் இருந்தாலும் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் கடந்த கால விடயங்களை பார்க்கும்போது அது சாத்தியமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
எவ்வாறெனினும் குறிப்பிடத்தக்க சில எம்.பி. க்கள் இந்த அணிக்கு கிடைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. எனினும் அனைத்து விடயங்களும் தற்போதைய 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களை கவரப்போகும் திட்டங்களிலேயே தங்கியுள்ளன.
தற்போதைய 100 நாள் வேலைத்திட்டம் எவ்வாறு இருப்பினும் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் குறித்தே கவனம் செலுத்தியுள்ளன என்பதே யதார்த்தமாகும்.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் அதேவேளை களத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் எப்படியாவது அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ள சுதந்திரக் கட்சி யினர் தாம் தற்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா ” நாங்கள் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவோம்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் எந்த கூட்டுக்கும் செல்லமாட்டோம். நாங்கள் தற்போதிருந்தே கிராம மட்டத்தில் எமது தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டோம். பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே தற்போதைய புதிய அரசாங்கத்தில் பிரதான கட்சியாக உள்ள ஐக்கிய தேசிய கட்சி என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி எழுகின்றது. அதாவது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி என்ன செய்யப்போகின்றது?
எத்தனை ஆசனங்களை பெறப்போகின்றது? எவ்வாறு ஆட்சியமைக்கப்போகின்றது ? போன்ற கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை 10 வருடங்களின் பின்னர் அரியாசனத்தில் அமரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆனால் குறுகிய காலத்தில் அதாவது 100 நாட்களில் மீண்டும் மக்களின் ஆணையை கோரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் மைத்திரி அலை இருக்குமாயின் அது அவர் தலைமை தாங்கும் சுதந்திரக் கட்சிக்கு வாக்குகளாக போய்ச்சேரும் சாத்தியம் உள்ளது.
ஆனால் தற்போது காணப்படுகின்ற மூன்றுமாத காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி தேவையான அரசியலமைப்பு திருத்தங்களையும் செய்து மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணங்களையும் பொருளாதார ரீதியான அனுகூலங்களையும் வழங்கினால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கூடிய ஆசனங்களை பெறலாம்.
எப்படியும் 10 வருடங்களின் பின்னர் கிடைத்த ஆட்சியை 5 மாதங்களில் இழப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பமாட்டார்.
எனவே எதிர்வரும் மூன்று மாத காலத்தில் அல்லது 100 நாட்களில் பொது மக்களை கவரும் பல்வேறு நலத்திட்டங்களையும் நல்லாட்சிக்கான அரசியலமைப்பு மாற்றங்களையும் நிச் சயம் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் பெரியளவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையையே நாம் கேள்வியுற்றுள்ளோம்.
இப்போதுதான் மிகப்பெரிய அளவில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதை காண்கின்றோம். அத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதி புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
அந்த வரவு செலவுத்திட்டத்தில் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சாதாரண மக்களை கவரும் வகையில் அரசாங்கம் 100 நாட்களில் பல்வேறு நலத்திட்டங்களையும் நிவாரணங்களையும் முன்வைக்கும் பட்சத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கூடிய ஆசனங்களை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதேவேளை இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியும் அதிக ஆசனங்களை எதிர்பார்க்கின்றது.
குறைந்தது 10 ஆசனங்களையாவது பெற்றுவிடவேண்டும் என்பதில் மக்கள் விடுதலை முன்னணி காய் நகர்த்திவருகின்றது. காரணம் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக் ஷ
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் பாரிய பிரசாரங்களை செய்து வந்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் பாராளுமன்ற உரைகள் அதற்கு வெளியிலான உரைகள் என்பன பிரபலமடைந்தன.
அந்தவகையில் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தியதில் தமது கட்சிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி கருதுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியான ஆதரவை வழங்காவிடினும் மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
இது தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவித்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் விடுதலை முன்னணியே வீழ்த்தியது.
அனுர குமார திசாநாயக்க
தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட எமது கட்சி முன்னைய அரசாங்கத்துக்கு எதிராகவும் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியது.
எமது விமர்சனங்களினால் அவர்கள் ஆட்டம் கண்டனர். எமது குரல்களின் வலுவினாலேயே அரசாங்கத்தினுள் இருந்தவர்கள் வெளியில் வருவதற்கு தைரியம் ஏற்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இம்முறை மீண்டும் மணி சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிடத்தக்க ஆசனங்களை எதிர்பார்க்கின்றது.
அதற்கான அரசியல் காய்நகர்த்தலில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை இலக்குவைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இது இவ்வாறு இருக்க ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் தேர்தல் முறை மாற்றம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறைமைக்கு அமைய நடைபெறுவது நிச்சயம் இல்லை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எனினும் முடியுமானவரை தேர்தல் முறைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் முறை மாற்றம் என்பது எல்லை நிர்ணய வேலைத்திட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதால் அதற்கு காலம் எடுக்கும் நிலைமை உள்ளது. எனவே 100 நாள் வேலைத்திட்டத்தில் தேர்தல் முறை மாற்றம் என்பது யதார்த்த ரீதியாக சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது.
மேலும் புதிய தேர்தல் முறைமையின் ஊடாக தொகுதி மற்றும் பிரதேச வாரி என கலப்பு முறைமைக்கு அரசாங்கம் செல்லுமாயின் சிறுபான்மை அரசியல் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்வதில் பாதிப்புக்களை எதிர்நோக்கலாம்.
எனவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் நோக்கம் இருக்கலாம். எனவே புதிய தேர்தல் முறைமைக்கு செல்லும்போது சில நடைமுறைச்சிக்கல்கள் வரலாம். இது தொடர்பில் ஆராய்ந்து சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையான தேர்தல் முறை ஒன்றுக்கு செல்லவேண்டியது அவசியமாகும்.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கமானது இந்தியாவுடனான உறவுக்கு பாரிய முக்கியத்துவம் அளித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட சில தினங்களில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் பிரதமர் நரேந்திர மோடி மறறும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
அந்த சந்திப்பின்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்தியாவுக்கு அரச விஜயம் மேற்கொள்ளுமாறு மோடி அழைப்பு விடுத்ததுடன் தானும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு அரச விஜயத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கு அரச விஜயத்தை மேற்கொள்ள திகதிகளை வழங்கியுள்ளார்.
தற்போது இந்தத் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் நேரம் ஒதுக்க முடியுமா என ஆராயப்பட்டுவருகின்றது. இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் இது குறித்து ஆராய்ந்துவருகின்றனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய அரச விஜயத்தின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறவுள்ளது.
அது மிக முககியத்துவமிக்கமான விஜயமாக அமையவுள்ளது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அரச விஜயம் ஒன்றை உத்தியோகபூர்வமாக மேற்கொள்கின்றார்.
இடைப்பட்ட காலத்தில் 2008 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அது அரச விஜயமாக அமையவில்லை.
கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்றபோதும் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அதில் பங்கேற்கவில்லை. மாறாக அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொண்டிருந்தார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.
சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற மிகப்பெரிய திட்டமான கொழும்பு துறைமுக நகர் திட்டம் நிறுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் இடம்பெறவுள்ளது.
அது மட்டுமன்றி கடந்த அரசாங்கம் சீனாவுடன் அதிகளவு நெருக்கத்தை கொண்டிருப்பதாக இந்தியா முரண்படும் நிலைமை தோன்றும் அளவுக்கு சூழல் மாறியிருந்தது. இந்நிலையிலேயே ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் இடம்பெறுகின்றது.
இவ்வாறு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தயார்படுத்தல்கள் அதற்கா காய்நகர்த்தல்கள் என்பன அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஒரு புறம் இடம்பெற மறுபுறம் மிக முக்கிய அரசியலமைப்பு மாற்றத்துக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பிராந்திய ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுகளும் அரங்கேறுவதை அவதானிக்க முடிகின்றது.
-ரெபட் அன்ரனி-