ஆணைக்குழு அமர்வு புதன்கிழமை முதல் யாழில்: 2,500 பேர் பதிவு
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நேற்று (06) தெரிவித்தார்.
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விண்ணப்ப படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, பதிவுகளை மேற்கொண்டோர் குறித்த விசாரணை அமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், 2,539 பேர் இவ்வமர்விற்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தினை 501 விண்ணப்பங்களும், வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 219 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 558 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 561 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரிவில் 463 மற்றும் 237 பேருமாக 2,539 பேரின் விண்ணப்பங்கள் பதியப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதியைச் சேர்ந்தோருக்கான விசாரணைகள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதியும் , நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர், ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு,
வேலணை பிரதேச செயலகத்தில் 12 ஆம் திகதியும், சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், தெல்லிப்பளை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தோருக்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 13 ஆம் திகதியும் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.
கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை, ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 14 ஆம் திகதியும், சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 15 ஆம் திகதியும், கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் 16 ஆம் திகதியும் விசாரணை அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment