இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இமாச்சல பிரதேசத்தின் லஹால் பள்ளத்தாக்கின் தோராங் கிராமத்தில் 52 வயதான பூஷன் தாகூர் என்பவரை தவிர, ஏனைய அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த கிராமம் முடக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளதால், லஹால் எல்லைக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,

மணாலி-லேஹ் நெடுஞ்சாலையிலுள்ள தோராங் கிராமத்தில் 42 பேர் வசித்து வருகின்றனர்.

கிராமத்து மக்கள் தாங்களாகவே முன்வந்து சில நாட்களுக்கு முன் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, 52 வயதான பூஷன் தாகூர் என்பவரை தவிர ஏனைய 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இதுகுறித்து கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிய பூஷன் தெரிவிக்கையில்,

நான் ஒரு தனி அறையில் தங்கியிருக்கிறேன். கடந்த நான்கு நாட்களாக எனக்கான உணவை நானே சமைத்துக் கொள்கிறேன். பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளும் வரை எனது குடும்ப உறுப்பினர்களுடன் தங்கி இருந்தேன்.

ஆனால் சனிடைசர் மூலம் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகிய அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தேன்.’ எனக் தெரிவித்தார்.