எனது நண்பர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு எனக்கு இந்த தருணத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றது.

அவர் எம் அனைவரிடமும் இருந்து விடைபெற முன்னர் இறுதியாக என்னை  சந்தித்து விடைபெற்றபோது போய்வருகின்றேன் என்று கூறினாரா அல்லது போறேன் என்ற வார்த்தையை மட்டுமே கூறினாரா என யோசிக்கின்றேன்.

எமது நண்பன் நிம்மதியாக போய்வர அனைவரும் பிரார்த்திப்போம்  என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டு இரங்கல் உரை நிகழ்த்திய போதே  இவற்றைக் கூறினார். அவர் தனது இரங்கல் உரையில் மேலும் கூறுகையில்,

சமூக வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருக்கு இறுதியாக பிரியாவிடை செய்யவே நாம் இங்கு கூடியுள்ளோம். அவரது இழப்பு எம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய வலியாக உணர்த்துகின்றது. குறிப்பாக எனக்கு இந்த தருணம் மிகவும் வலிமிகுந்த தருணமாக உணரப்படுகின்றது.

ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் தனது வாழ்வில் இருந்து விடைபெற ஒரு சில மணிநேரத்திற்கு முன்னர் என்னை சந்தித்தார்.

என்னுடன் பேசிவிட்டு அவர் விடைபெறும் நேரத்தில் அவர் போய் வருகின்றேன் என்று கூறினாரா அல்லது போறேன் என்று மட்டுமே கூறினாரா  என எனக்கு நினைவில் இல்லை.

ஆனால் அவர் இறுதியாக என்னிடம் பேசும் போதும் தமது தோட்டப்புற மக்களின் பிரச்சினைகள் குறித்தே என்னுடன் பேசினார்.

அவற்றுக்கு தீர்வு காணுவது குறித்தும் ,தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை குறித்தே பேசினார். அவரது இறுதி கோரிக்கையாகவும் அதுவே இருந்தது.

மலையக பகுதிகளின் அபிவிருத்தி, பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது, கொவிட் 19 தொற்றுநோய் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நிவாரணம் வழங்குவது குறித்து பேசினார்.

இவ்வாறான விடயங்களை எல்லாம் என்னிடம் பேசிவிட்டு சென்றே, எம் அனைவரிடம் இருந்தும் விடைபெற்றார்.

உங்கள் அனைவரிடமும் இருந்து விடைபெற முன்னர் என்னிடம் இருந்து விடைபெற்றுவிட்டார். அவர் எம்மிடம் இருந்து விடைபெற்றாலும் அவரது இறுதி கோரிக்கைகளை எம்மிடம் ஒப்படைத்து விட்டே சென்றுள்ளார்.

அவர் காலம் சென்ற அடுத்த நாளே அவர் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சரவையில் முன்வைத்து அடுத்த கட்டமான முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கையை ஆராய்ந்தேன்.

இந்திய பிரதமர் தனிப்பட்ட ரீதியில் என்னுடம் தொலைபேசியில் உரையாடினார். தொண்டமானின் இறப்பு குறித்து தனது கவலையை வெளியிட்டார்.

அவரது குடும்பம், மக்களிடம் தெரிவிக்க கூறினார். தொண்டமான் எனது நல்ல நண்பர் என்றே மோடி என்னிடம் கூறினார்.

அதேபோல் வேறு பல நாடுகளின் தலைவர்கள் தொண்டமானின் இறப்பு குறித்த இரங்கல்களை வெளியிட்டனர்.

தொண்டமான் மலையக மக்களுடன் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர். இவரது பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் போன்றே இவரும் சேவையாற்றியவர்.

பல்வேறு சந்தர்பங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து பல பேச்சுவார்த்தைகளில்  ஈடுபட்டுள்ளேன்.

பல சந்தர்ப்பங்களில் அவருடன் இணைந்து நான் இங்கு வந்துள்ளேன். அவர்கள் எப்போதும் எம்முடன் இருந்தனர். அரசாங்கம் என்றால் அது எல்லோருக்கும் சொந்தமானது என்றே அவர்கள் எப்போதும் நினைத்தனர்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் எப்போதும் செயற்பட்டனர். 2005 ஆம் ஆண்டு அப்போதைய எமது அரசாங்கத்துடன் ஆறுமுகன் தொண்டமான் இணைந்துகொண்டார்.

அதன் பின்னர் எமது அரசாங்கத்தில் மலையக பகுதிகளுக்கு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். மலையக மக்கள் உலகத்துடன் ஒன்றிணைய பல வேலைத்திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார்.

தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கையை முன்வைத்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்தனர்.

மலையக இளைஞர்கள் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர். முகப்புதகத்தில் இந்த போராட்டம் உருவாக்கப்பட்டது.

எனக்கு இவை அனைத்தும் நினைவில் உள்ளது. 1940 ஆம் ஆண்டுகளில் கோவிந்தன் என்ற தோட்டத் தொழிலாளி முன்னெடுத்த போராட்டத்தை விட இன்றைய இளைஞர்கள் முன்னெடுக்கும்  போராட்டம் பெரியதென எமக்கு இன்று தெரிகின்றது.

ஆனால் இந்த வளர்ச்சிக்கு வழியாக அமைந்தது தொண்டமானின் சேவை என்பதை மறந்துவிட வேண்டாம்.

பலர் பாராளுமன்றத்திற்கு வருவது தமது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யவேயாகும். தாய் நாட்டிற்கு எதிராக உலக அளவில் பிரசாரம் செய்து பணம் பெற்றுக்கொண்டே  பாராளுமன்ற அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றுகின்றனர்.

ஆனால் தொண்டமான் ஒருநாளும் அவ்வாறு மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றவில்லை. மலையகத்தில் போராட்டம் நடத்தி மக்களின் இரத்தத்தை சிந்த விடவில்லை.

நாளுக்கு நாள் மக்களை முன்னேற்ற பல சேவைகளை முன்னெடுத்தார். அதற்கான கௌரவம் எப்போதுமே அவருக்கு சென்றடையும்.

ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தினர் தமது பிரதேசத்தில் எந்தவித மத தளங்களுக்கும் எதிராக முரண்படவில்லை.

தமது பிரதேசங்களில் இருந்து அகற்றுங்கள் என தமது மக்களுக்கு விரோதத்தை  வளர்க்கவில்லை. இந்த பகுதியில் பல விகாரைகளை உருவாக்கிக்கொடுத்துள்ளார். பெளத்த மற்றும் என்றைய மத தலைவர்களை கௌரவித்துள்ளார்.

எப்போதுமே மலையக மக்களை என் மக்கள் என்றே கூறினார். அதற்கு மாற்று வார்த்தை ஒன்றினை பயன்படுத்தவில்லை.

எனவே ஆறுமுகன் என்றுமே எம்மில் ஒருவர்.உண்மையான மக்கள் தலைவர் . ஆகவே அவரது ஆத்மா சாந்திபெற வேண்டுகிறேன்.

ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி… அவருடைய பாரியார்,பிள்ளைகள், உறவினர் என அனைவருக்கும் தொழிலாளர் காங்கரஸின் சகலருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது நண்பன் நிம்மதியாக போய்வர பிரார்த்திப்போம்” என உருக்கமான உரையொன்றை நேற்று பிரதமர் நிகழ்த்தினார்.