ஊரடங்கு உத்தரவு மட்டும் கொரோனா வைரசுக்கான தீர்வல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பியும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி வீடியோ கான்பரன்ஸ் முறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஊரடங்கு உத்தரவால் மட்டுமே கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்கு என்பது தற்காலிகமானது. ஊரடங்கு முடியும்போது கொரோனா மீண்டும் பரவ தொடங்கும்.

நாம் அவசர சூழ்நிலையில் உள்ளோம். இதனை எதிர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். நாம் திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அதிக அளவிலான பரிசோதனைகள் நடத்த வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சோதனையை விரிவுபடுத்த வேண்டும். தற்போதைய பரிசோதனைகள் போதுமானதில்லை.

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.

கேரளாவின் வயநாட்டில் கொரோனா தடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு, மாவட்ட அளவில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதே காரணம். எந்தெந்த இடங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply