கர்லா குகைகள், காந்தலா அருவி: மலைநகரின் கந்தர்வ அழகு (வீடியோ இணைப்பு)
மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மும்பையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தென்கிழக்கே அமைந்துள்ளது, இந்த மலைநகரமான லோனாவலா.
செழிப்பு மற்றும் செப்பனிடுதலால் அழகுமயமாக அமைந்திருக்கும் லோனாவலாவில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல.
லோனாவலா மற்றும் காந்தலா இரண்டும் இரட்டை நகரம் (Twin station) என்று சொல்லப்படுகிற அளவுக்கு அருகருகே உள்ள மலைநகரங்கள்.
காந்தலா நீர்வீழ்ச்சி:
லோனாவலா மலைநகரம் என்பதால் அங்கு மலை சார்ந்த பசுமைக்கும், பனிமேகம் சூழ்ந்த குளிருக்கும் குறைவில்லை.
கருமையான மலைக்கு பச்சை பசேலென உடை அணிந்தது போல படர்ந்திருக்கும் தாவரங்களுக்கு நடுவே, உயரே இருந்து பார்க்கும்போது, வெண்ணிறத்தில் கோடுகிழித்ததுபோல தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் கொட்டும் அருவி பல தளங்களில் தாவிகுதித்து வருகிறது.
செங்குத்து, சாய்வுதளம் என பல அடுக்கு பாதைகளில் பாய்ந்துவரும் குறுகலான அருவிகள் பல இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் தலைவியாகவே திகழ்கிறது பேரருவியான இந்த காந்தலா.
லோனாவலாவில் காந்தலா அருவி பார்வையாளர்கள் ரசிக்க வேண்டிய முக்கிய இடமாகும்.
லோனாவலா நகரிலிருந்து முந்நூறு படிகள் மலைமீது ஏறிச்சென்று கர்லா குகைகளை அடைய வேண்டும். இந்த குகை பகுதியிலிருந்து கீழே பார்த்தால் லோனாவலா நகரம் முழுமையாக அழகு மிளிர காட்சியளிக்கிறது.
பழமையான இந்த மலை குகைகள் கி.மு. முதலாம் நூற்றாண்டில் அல்லது கி.பி. 2 ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த குகை புத்தமதத்தினரால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இங்கு புத்தர் சிலைகள், மத சம்பந்தமான, பொதுவான கலை சிற்பங்கள் அதிகம் உள்ளது.
மலையே இதன் கூறையாகவும் சுவர்களாகவும் பல தளங்களாகவும் இந்த குகைகளில் காட்சி தருவது அருமை. பெரிய ஆலயம், அரண்மனை போன்ற விசாலமான உட்பகுதி ஆச்சரியம்.
அந்த குகையில் புத்த மடாலய தலைமை குருக்கள் தங்குவதற்கான தனி இடங்கள் இருப்பதை பார்க்கிறபோது, புத்தமதத்தை போதிப்பதற்கான புகழ்வாய்ந்த ஆன்மீக மையமாக ஒரு காலத்தில் விளங்கியிருப்பதை உணரமுடிகிறது.
இங்கு ஒரு சுற்றுலா தலத்துக்கான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மலைபாதையில் மெல்லிய அருவியும் நிழல்தரும் மரங்களும் கடைகளின் வரிசையும் உள்ளது.
இங்கே ஒரு இந்துமத அம்மனும் உள்ளது. அங்கு விற்கும் வண்ணமலர் மலையை வாங்கி அந்த அம்மனுக்கு சாற்றினால் திருமணம் எளிதாக நடக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
கவர்ச்சி நிற பாறை புஷி அணை நீர்வீழ்ச்சி:
புஷி அணையில் நீர் திறந்துவிடப்பட்டு மலைப்படிகளில் நீர் வழிந்து வரும்போது, அதை படிகளில் புரண்டு நனைந்து எதிர்கொள்வது நீர்வீழ்ச்சியைவிடவும் இனிமையான அனுபவிப்பை தரும்.
திரிசூர் தீவு ரிசார்ட்:
லொனாவலாவில் நிறைய பிரம்மாண்டமான கடற்கரை விடுதிகள் (Resort) உள்ளன. அதில் திரிசூர் தீவு கடற்கரை விடுதி இயற்கை அழகை தரிசிக்கவும் அமைதிக்கு சிறப்பானது.
இங்கு துங்கர்லி ஏரி, பாஜ குகைகள், லோஹகார் கோட்டை உட்பட மேலும் பல பார்க்க வேண்டிய இடங்கள் இருப்பது பயணிகள் கவனிக்கத் தக்கது.
வட மாநில பயணிகள் மும்பையிலிருந்து லோனாவலாவிற்கு செல்ல எல்லாவிதமான போக்குவரத்து வசதிகளும் உள்ளது. அதுபோல, தென் மாநில பயணிகள் புனேவிலிருந்து செல்வது வசதி.
இங்கு சுற்றுலா செல்ல கோடைகாலம் சுகமானது, குளிர்காலம் சொர்க்கமயமானது.
– மரு. சரவணன்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment