கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை ஏனைய நாடுகளுக்குச் செய்து வருவதற்கு சல்யூட் செய்கிறோம் என்று ஐ.நா. சபை பாராட்டியுள்ளது.
இதுகுறித்து, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜரிக் (Stephane Dujarric de la Rivière) நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு காணொளி தொடர்பாடல் மூலம் பேட்டியளித்தார்.
இதன்போது, உலக நாடுகளுக்கு மலேரியா மாத்திரையான ஹைட்ரோக்ஸி குளோரோகுயினை இந்தியா அனுப்புவது குறித்து கேட்டனர்.
இதற்கு அவர் கூறுகையில் “அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வருவது உண்மையில் பாராட்டத்தக்கது. இந்தியாவுக்கு ஐ.நா. சார்பில் சல்யூட் செய்கிறோம். இந்தியாவைப் போல் இந்த இக்கட்டான நேரத்தில் உலக நாடுகளுக்கு உதவி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் சல்யூட் செய்கிறோம்.
இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவி செய்ததைப் போல், உதவி செய்யும் இடத்தில் இருக்கும் அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுக்கு இந்தநேரத்தில் உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின்னர் இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25ஆம் திகதி தடை செய்ததது.
ஆனால், உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்றுமதிக்கான தடையை விலக்கிய மத்திய அரசு ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா, பிரேஸில், இத்தாலி, ஜமியா, டோமினிக் குடியசு, மடகஸ்கர், உகண்டா, புர்கினாபாஸோ, நைஜர், மாலி, கொங்கோ, எகிப்து, அர்மேனியா, கஜகஸ்தான், ஈக்குவடோர், ஜமைக்கா, சிரியா, உக்ரைன், சாட், ஷிம்பாப்வே, பிரான்ஸ், ஜோர்தான், நைஜீரியா, ஓமன் மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
மேலும், அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, மொரிஷியஸ், இலங்கை, மியன்மார் நாடுகளுக்கும் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment