ilakkiyainfo

தமிழ்த் தீவிரவாதிகளின் ஆயுதப்போராட்டமும் சண்முகதாசனும் -டி.எஸ்.பி.ஜெயராஜ்

தமிழ்த் தீவிரவாதிகளின் ஆயுதப்போராட்டமும் சண்முகதாசனும் -டி.எஸ்.பி.ஜெயராஜ்
July 28
19:23 2020

இன்றைய சீனா எனது இளம்பராயத்தில் நானறிந்த சீனாவை விட மிகவும் வேறுபட்டது. அந்த நாட்களின் சீனாவைப் பற்றி நினைக்கும் போது கலாசாரப்புரட்சி, செங்காவலர்கள், மகத்தான முன்நோக்கிய பாய்ச்சல், தலைவர் மாஓவின் சிந்தனைகள் என்ற சிறிய கையடக்கப்புத்தகம் போன்ற பல விடயங்கள் நினைவிற்கு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மா-ஓ சேதுங் மனதில் தோன்றுவார்.

டெங் சியாவோபிங்கிற்குப் பின்னரான சீனாவில் மக்கள் சீனக்குடியரசின் தாபகத்தந்தை மாஓ சே-துங்கைப் பற்றிப் பகிரங்கமாகப் பெரிதாகக் கூறப்படுவதில்லை. அந்தப் பழைய சீனக் கம்யூனிஸ்ட் தலைவரைக் கடுமையாகக் கண்டிக்கின்ற அளவிற்கு சீனா ‘முதலாளித்துவப் பாதையில்’ விரைவாக முன்னேறிச்சென்று கொண்டிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை மாஓ இப்போதெல்லாம் மறக்கப்பட்ட ஒருவராகவே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால், மாவோயிஸம் என்று அறியப்பட்ட மா-ஓ சேதுங்கின் கொள்கைகளையும் கோட்பாட்டையும் இலங்கையில் உறுதியான முறையிலும் உணர்ச்சிபூர்வமாகவும் ஆதரித்த இடதுசாரி அரசியல் கட்சியொன்று ஒருகாலத்தில் இருந்தது. சோவியத் யூனியனுக்குச் சார்பான கம்யூனிஸ்ட் கட்சிக்கு (மாஸ்கோ சார்பு) எதிராக சீன சார்புக் கொள்கைகளைத் தாங்கள் பின்பற்றுவதைக் குறித்துக்காட்டுவதற்காகத் தங்களை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பீக்கிங் சார்பு என்று அவர்கள் அழைத்துக்கொண்டார்கள்.

பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, அதன் செல்வாக்கின் உச்சத்திலிருந்த காலத்தில் வர்த்தக, கைத்தொழில், விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறைகளில் பல தொழிற்சங்கங்களை அதன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறையை ஒழிப்பதற்குப் பெருமளவிற்கு உதவிய ஒரு வெகுசன சமூக, கலாசார இயக்கத்தையும் அந்தக்கட்சி முன்னெடுத்தது.

ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தாபகத்தலைவரான ரோஹண விஜேவீர வளர்ந்த அரசியல் பண்ணையாகவும் அந்தக் கட்சியே இருந்தது. மா-ஓ சேதுங்கின் மறைவிற்குப் பிறகு டெங்கின் எழுச்சியையடுத்து பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி தொன்மைநலம் கெடாத மாவோயிஸத்திற்கு விசுவாசமாக இருந்ததுடன், புதிய திரிபுவாதப்போக்கைக் கடுமையாகக் கண்டித்தது.

பல தடவைகள் பிளவிற்குள்ளான அந்தக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சுருங்கிப்போன போதிலும் கூட, அதன் கொள்கைகளையொத்த ஏனைய சர்வதேச மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் குழுக்களுடன் சேர்ந்து மாவோயிஸத்தின் மீதான தங்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிசெய்வதற்குப் புரட்சிகர சர்வதேச இயக்கத்தை (சுநஎழடரவழையெசல ஐவெநசயெவழையெடளைவ ஆழஎநஅநவெ) அமைத்தது. அதைத்தொடர்ந்து அந்தக் கட்சி தன்னை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் என்று அடையாளப்படுத்திக்கொண்டது.

சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்குசக்தியாகவும், தாபகத்தலைவராகவும் இருந்தவர் ‘தோழர் சண்’ அல்லது ‘சண்’ என்று அறியப்பட்ட யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த தமிழரான நாகலிங்கம் சண்முகதாசன். 1964 இல் அதன் தொடக்கத்திலிருந்து 1993 இல் தனது மரணம் வரை அந்தக் கட்சியின் தலைவராக அவர் செயற்பட்டார். இலங்கையில் கடைசியாக இருந்த பெரிய மாவோயிஸ்ட் தோழர் சண் எனலாம். அவர் 100 வருடங்களுக்கு முன்னர் 1920 ஜுலை 3 இல் பிறந்தார். எனவே இந்தக் கட்டுரை தோழர் சண்ணுக்கான பிறந்த நூற்றாண்டு நினைவஞ்சலியாக அமைகிறது.

நான் முக்கியமாக இந்தக் கட்டுரையை இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகையான வீரகேசரியில் எனது முன்னாள் சகாவாக இருந்த வீரகத்தி தனபாலசிங்கத்தின் அன்பான வேண்டுகோளுக்கு அமைவாகவே எழுதுகிறேன் என்பதை ஆரம்பத்திலேயே கூறிவைக்க விரும்புகிறேன். பிறகு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராக வந்த தனபாலசிங்கம், இப்போது தினக்குரலையும் வீரகேசரியையும் பிரசுரிக்கின்ற எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் குழுமத்தில் ஒரு ஆலோசக ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

முன்னரைப் போன்றே இன்னமும் சண்ணின் ஒரு விசுவாசமான சீடராக அவர் இருந்துவருகிறார். அவர் அந்த நாட்களில் சண்ணின் கொழும்பு வீட்டிற்குக் குறைந்தபட்சம் கிழமைக்கு ஒரு தடவையாவது சென்று அவருடன் சில மணிநேரம் பேசத்தவறியதில்லை. அந்த மாவோயிஸ்ட் தலைவருடனான எனது முதல் சந்திப்பு தனபாலசிங்கத்தின் ஊடாகவே நிகழ்ந்தது. கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஸ்கொபீல்ட் பிளேஸ், 23ஃ7 ஆம் இலக்கத்திலுள்ள சண்ணின் வாசஸ்தலத்திற்கு என்னை அவர் முதற்தடவையாகக் கூட்டிச்சென்றார்.

எனது முதல் சந்திப்பு 

1987 முற்பகுதியிலேயே தோழர் சண்ணுடனான எனது முதற்சந்திப்பு இடம்பெற்றது. இந்தியாவின் ஆங்கிலத் தினசரியான ‘த இந்து’வின் கொழும்பு நிருபராக அப்போது நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். இலங்கையில் தமிழ்த் தீவிரவாத இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வொன்றை இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்திற்காக நான் செய்துகொண்டிருந்தேன்.

சண்ணுடனான எனது கலந்துரையாடல்கள் பெரும்பாலும் இலங்கை, இந்திய அரசியல், தமிழ்த்தீவிரவாதம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியதாகவே இருந்தது. அவருடனான எனது சந்திப்பு 1987 முற்பகுதி தொடக்கம் நான் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்ட 1988 பிற்பகுதி வரை கிரமமாகத் தொடர்ந்தது. அவரைப் பார்க்கத் தனியாகவும், தனபாலசிங்கத்துடனும் நான் செல்வது வழக்கம்.

அவருடன் கதைப்பதும், துருவித்துருவிக் கேள்விகளைக் கேட்டு அவரின் புலமைமிக்க பதில்களை செவிமடுப்பதும் மிகவும் மகிழ்ச்சியானதாகவும் பயனுடையதாகவும் இருந்தது. அவருடன் கலந்துரையாடிய பல சந்தர்ப்பங்களில் நான் குறிப்புகளை எடுப்பேன். பிறகு விரிவாக எழுதிக்கொள்வேன். அந்த நாட்களில் நான் சண்ணிடம் இருந்து பல விடயங்களைக் கற்றுக்கொண்டேன்.

இந்தக் கலந்துரையாடல்களின் போது நான் சண்ணைப் பற்றிப் பெருமளவிற்கு மகிழ்ச்சி தருகின்ற சில அம்சங்களைக் கண்டுகொண்டேன். என்னைப்போலவே அவரும் கூட ஒரு சினிமா ரசிகராக இருந்திருப்பதைக் கண்டுகொண்டேன். புகழ்பெற்ற சினிமா நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான எம்.ஜி.இராமசந்திரன் (எம்.ஜி.ஆர்) 1987 டிசம்பர் 24 ஆம் திகதி காலமானார்.

நான் அப்போது ‘த ஐலண்ட்’ பத்திரிகைக்காகவும் எழுதிக்கொண்டிருந்தேன். அடுத்தநாள் நத்தார் பண்டிகை என்பதால் குருணாகலில் உள்ள எனது வீட்டிற்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த அவசரத்தில் நான் எம்.ஜி.ஆரின் சினிமாத்துறை – அரசியல் வாழ்வின் சுவாரஸ்யமான அம்சங்கள் சிலவற்றை முக்கியத்துவப்படுத்தி ஒரு எளிமையான கட்டுரையை எழுதியிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு நான் சண்ணைப் பார்க்கச்சென்றபோது எம்.ஜி.ஆர் பற்றிய எனது அந்தக் கட்டுரையை அவர் வாசித்திருந்தார் என்பதையும், அதில் அவர் பெருமளவிற்குத் திருப்திப்படவில்லை என்பதையும் அறிந்துகொண்டேன். ‘நீங்கள் எம்.ஜி.ஆர் பற்றி வித்தியாசமான முறையில் எழுதியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்’ என்று கூறிய சண், பிறகு விரிவாக அதுபற்றிச் சொன்னார்.

எம்.ஜி.ஆர் தனது படங்களில் தன்னைப் பின்தங்கிய மக்களுக்கு உதவிசெய்து, அவர்களது கவலைகளைப் போக்குகின்ற ஒரு நாயகனாகக் காட்சிப்படுத்தியதன் மூலம் ஏழைகளினதும் வசதி குறைந்த மக்களினதும் தலைவன் என்ற தோற்றத்தை எவ்வாறு பெற்றார் என்பதை சண் சுட்டிக்காட்டினார். தனது இந்தக் கருத்துக்களுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆரின் திரைப்படங்களிலிருந்து சில காட்சிகளையும், பாடல்களையும் சண் நினைவுபடுத்திப் பேசிக்கொண்டிருந்த போது அவர் 1950 களிலும், 1960 களிலும் எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களைப் பார்த்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது ஒரு நாணத்துடன் மெல்லச் சிரித்துக்கொண்ட சண், மாணவப்பருவம் தொடங்கி 1971 ஏப்ரல் ஜே.வி.பி கிளர்ச்சியையடுத்து சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் சிறையிலடைக்கப்படும் வரை தான் ஒரு தீவிரமான சினிமா ரசிகராக இருந்ததாகக் கூறினார்.

சண்ணுடன் நான் சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருந்த இந்தக்காலகட்டத்தில்தான் 1987 ஜுலை 29 இல் ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்தனவும் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்கள். இந்திய அமைதிகாக்கும் படையென்று கூறப்பட்ட இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது. அந்தப் படையுடன் விடுதலைப்புலிகள் போரைத் தொடங்குவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கவில்லை.

தடை செய்யப்பட்டிருந்த ஜே.வி.பியும் கூட இந்திய எதிர்ப்புப்போராட்டம் என்று கூறிக்கொண்டு வன்முறை இயக்கமொன்றை முன்னெடுத்தது. இந்திய அமைதிகாக்கும் படையுடனான விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஓரளவிற்கு அனுதாபமாகப் பார்த்த சண், ஆனால் ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்புப்போராட்டத்தை ஒரு எதிர்ப்புணர்வுடனேயே நோக்கினார்.

இதுகுறித்து 1988 பிற்பகுதியில் மருதானையில் வணபிதா திஸ்ஸ பாலசூரியவின் சமூக, சமய நடுநிலையத்தில் இடம்பெற்ற ஒரு விரிவுரையுடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்வில் சிறப்பாக விளக்கப்பட்டது. விடுதலைப்புலிகளும், ஜே.வி.பியும் இந்திய இராணுவத்திற்குக் காட்டிய எதிர்ப்பு தொடர்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இலங்கையின் முன்னணி சிவில் சமூகத்தலைவர்களில் ஒருவரான கலாநிதி குமார் ரூபசிங்கவின் சகோதரர் அஜித் ரூபசிங்க (அவரும் ஒரு மாவோயிஸ்ட்) ஒரு சிநேகபூர்வமான வாக்குவாதத்தில் சண்ணை பொறியில் சிக்கவைக்க முயற்சித்தார்.

இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிரான விடுதலைப்புலிகளின் போராட்டத்தை சண் அங்கீகரிப்பதாக இருந்தால், அதே படைக்கெதிரான ஜே.வி.பியின் போராட்டம் தொடர்பில் மாறான கருத்தைக் கொண்டிருக்கக்கூடாது என்பதே அஜித்தின் நிலைப்பாடாக இருந்தது. அதேபோன்றே ஜே.வி.பி யை சண் விமர்சிப்பதாக இருந்தால் அவர் விடுதலைப்புலிகளையும் கூடக் கண்டிக்க வேண்டும் என்றும் அஜித் குறிப்பிட்டார்.

ஆனால் அரசியல் வாக்குவாதத்தில் பெயர்பெற்றவரான அந்தப் பழம்பெரும் தலைவர் அகப்பட மறுத்துவிட்டார். அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அவர் விடுதலைப்புலிகளைக் கண்டிக்கவுமில்லை. ஜே.வி.பியை புகழவுமில்லை. அதுதான் நான் சண்ணை கண்ட இறுதிச்சந்தர்ப்பம்.

விடுதலைப்புலிகள் தொடர்பில் மாற்றங்கண்ட மனோபாவம்

இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராகப் புலிகள் சண்டையிட்டது தொடர்பில் சண் கொண்டிருந்த நிலைப்பாடு பல தவறான அபிப்பிராயங்களையும், அவரது அனுதாபிகள் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் கூடப் பிளவுகளையும் ஏற்படுத்தியது. பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் அவர் அளித்த ஆதரவாகக்கூட அது தவறாகக் கருதப்பட்டது. அவரின் நிலைப்பாடு பலருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. ஏனென்றால் தமிழ்த் தீவிரவாதத்தை முன்னைய சந்தர்ப்பங்களில் சண் ‘தனிநபர் பயங்கரவாதம்’ என்று கண்டனம் செய்திருந்தார்.

மேலும் விடுதலைப்புலிகள் போன்ற வலதுசாரிகளுக்கு எதிராக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) போன்ற இடதுசாரிப்போக்குடையவை என்று கருதப்பட்ட தமிழ்க்குழுக்களுக்கு அனுதாபமானவராக இந்தப் பழம்பெரும் அரசியல்வாதி இருப்பார் என்றும் பலர் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் ஒரு குழப்பத்தைத் தருவதாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் தொடர்பில் சண்ணின் மாறிவந்த மனோநிலை மேலும் விரிவான முறையில் விளக்கப்பட்ட வேண்டியதாகும். விடுதலைப்புலிகளின் குறிப்பிட்ட சில அம்சங்களைப் பாராட்டிய போதிலும், அந்த இயக்கத்தைப் பற்றியோ அல்லது வேறெந்தத் தமிழ் ஆயுதக்குழுக்களைப் பற்றியோ சண் மருட்சிகளைக் கொண்டிருக்கவில்லை.

இப்போதுகூட ஒரு சம்பவத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பிரசார நோக்கங்களுக்காகத் தமிழ்த் தீவிரவாதக்குழுக்களினால் ஆரம்பநாட்களில் வெளியிடப்பட்ட பெருமளவு பிரசுரங்கள் நிறையவே இடதுசாரிவாதங்களையும், மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் மொழிநடையையும் கொண்டிருந்தன.

ஒருமுறை சண்ணுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது இந்த ஆயுதக்குழுக்கள் இடதுசாரிப்போக்குடையவை என்றும், ஒரு சோசலிச தமிழ் அரசுக்கு ஆதரவாக இருந்தன என்றும் இது அர்த்தப்படுகிறதா என்று நான் கேட்டேன். ‘பொடியன்கள் முதலில் துப்பாக்கியைத் தூக்கிவிட்டு, பிறகுதான் தங்களுடைய வன்செயலை நியாயப்படுத்துவதற்கு ஒரு கோட்பாட்டைத் தேடினார்கள். அதை மார்க்சிசத்தில் கண்டுகொண்டார்கள்’ என்று சண் சொன்னார்.

ஆனால் என்னதான் காரணமாக இருந்திருந்தாலும் மார்க்சிசத்தை அவர்கள் தெரிவு செய்ததில் தவறைக் காணக்கூடாது என்று கூறிய சண்ணுக்கு, பொடியன்களின் மார்க்சிசம் மீதான ஈர்ப்பு உண்மையில் மானசீகமானதா என்பதில் நிச்சயமிருக்கவில்லை. அவர்கள் மார்க்சிசத்தைப் பூரணமாக ஆராய்ந்து அறிந்துகொண்டார்களா அல்லது மேலோட்டமான நோக்கங்களுக்காக மேலெழுந்தவாரியான விளக்கத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டார்களா என்பதிலும் அவருக்கு சந்தேகமிருந்தது.

1970 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு மாணவன் என்ற வகையில் எனது அனுபவங்கள் சிலவற்றை ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்குக் கூறினேன். அரசியல் அதிகாரம் துப்பாக்கிக்குழலிலிருந்து பிறப்பது பற்றிய மாஓவின் கருத்தை மேற்கோள்காட்டி அந்த நாட்களில் தமிழ் சுவரோவியங்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டன என்று அவருக்குச் சொன்னேன். இதற்கு உடனடியாகப் பதிலளித்த சண், கட்சியை வழிநடத்துவதற்குத் துப்பாக்கியை அனுமதிக்கக்கூடாது. துப்பாக்கிக்கு எப்போதும் கட்சியே ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் மா-ஓ போதித்திருக்கிறார் என்று சொன்னார். போராளிகளை அரசியல் வழிநடத்த வேண்டுமே தவிர, மறுதலையாக அல்ல என்பதை வலியுறுத்தவே மா-ஓவின் அந்தக் கருத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்று தசாப்தங்களுக்ப் பிறகு நான் திரும்பிப்பார்க்கும் போது சண் அன்று சொன்னதன் உள்ளியல்பான பெறுமதியை விளங்கிக்கொள்கிறேன். அரசியல் துப்பாக்கியை வழிநடத்துவதற்குப் பதிலாகத் துப்பாக்கி அரசியலைத் தீர்மானிப்பதற்கு அனுமதித்த விடுதலைப்புலிகளின் கதி அதற்குப் போதுமானதொரு சான்றாகும்.

1968 இல் ஊர்காவற்றுறை எம்.பியாக இருந்த வி.நவரத்தினத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் சுயாட்சிக்கழகம் 1970 பாராளுமன்றத்தேர்தலில் தமிழர்களுக்கெனத் தனியொரு நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்டது. அந்தக் கழகம் படுதோல்வியையே அந்தத் தேர்தலில் சந்தித்தது. ஆனால் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஒன்றுசேர்ந்து 1976 இல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அமைத்தன.

அந்த ஆண்டு மேமாதம் 14 ஆம் திகதி தமிழீழப் பிரகடனம் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னதாகக்கூட 1974 இல் தமிழரசுக்கட்சியின் 25 ஆவது வருட நிறைவுக்கொண்டாட்டங்களில் இருந்து தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளினால் தனியான அரசுக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. தங்களது இலக்கை அகிம்சைப் போராட்டம் ஒன்றினூடாக அடைவது பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். தனிநாடு என்ற எண்ணத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் சண் முக்கியமானவர்.

தருமர் – சண் சுன்னாகத்தில் விவாதம்

தமிழரசுக்கட்சியின் உடுவில் தொகுதி (பின்னர் மானிப்பாய் தொகுதி) பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்திற்கும் (புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தையார்) சண்முகதாசனுக்கும் இடையில் 1975 ஆம் ஆண்டு இடதுசாரிகளின் செல்வாக்குமிக்க பகுதியாக அப்போது கருதப்பட்ட சுன்னாகத்தில் பகிரங்க விவாதமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்கந்தவரோதயா கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபரான ‘ஒறேற்றர்’ சி.சுப்பிரமணியம் விவாதத்திற்குத் தலைமை வகித்தார். அவர் சண்ணினதும், தருமரினதும் ஆசிரியர். அகிம்சைப்போராட்டம் ஒன்றினூடாகத் தனிநாடொன்றை நிறுவுவதன் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அகிம்சைப் போராட்டத்தின் ஊடாக தனிநாட்டைக் காண்பதென்ற யோசனையைக் கிண்டல் செய்த சண், தனிநாடொன்றை அமைப்பதற்கான செயற்திட்டத்தைப் பகிரங்கமாகக் கூறுமாறு தருமருக்கு சவால்விடுத்தார். அது ஒரு கட்சியின் உயர்ந்த இரகசியம் என்றுகூறி தர்மலிங்கம் மழுப்பினார். திட்டவட்டமான பதிலொன்றை அவர் கூறவேண்டுமென்று கூட்டத்திலிருந்தோர் உரத்துச் சத்தமிட்டனர்.

ஒறேற்றர் சுப்ரமணியம் தலையிட்டு, கட்சி இரகசியமொன்றைப் பகிரங்கமாகக் கூறுமாறு தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை நிர்பந்திக்க முடியாது என்று கூறியதன் மூலம் சிக்கலான சூழ்நிலையொன்றிலிருந்து தர்மலிங்கத்தைக் காப்பாற்றினார். இத்தால் விவாதம் சமநிலையில் முடிவிற்கு வந்தது. ஆனால் அதில் சண்ணே வெற்றிபெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

1976 ஆம் ஆண்டில் சட்டக்கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தினால் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகிரங்க கருத்தரங்கு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதில் பங்கேற்ற பேச்சாளர்களில் சண்ணும் ஒருவர். தனது உரையில் அவர் அகிம்சைப் போராட்டத்தின் ஊடாகத் தனிநாட்டை அடையமுடியுமென்ற யோசனையைக் கிண்டல் செய்தார். புரட்சிகர வன்முறையின் ஊடாக மாத்திரமே அரசைத் தூக்கியயெறிவதன் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று சண் கூறினார்.

மாற்றத்துக்கான ஒரு வழிமுறையாக வன்முறையை நியாயப்படுத்தும் தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அவர் இரு உதாரணங்களைக் கூறினார். அடைகாக்கப்படும் முட்டைக்குள் உருவாகும் கோழிக்குஞ்சு வெளியில் வரவேண்டுமானால் உள்ளிருந்தவாறே முட்டையின் கோதைக் கொத்தி  உடைக்கவேண்டும். அவ்வாறு தனது பிறப்பிற்காக அந்தக் குஞ்சு போராடுகிறது. மற்றைய உதாரணத்திற்கு, இந்துமத இதிகாசத்தைக் கையிலெடுத்துக்கொண்டார். வன்முறையின் ஊடாகத் தீமையை ஒழிப்பதற்குத்தான் கடவுள்கள் கூட ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். சிவபெருமானிடம் சூலமும், விஷ்ணுவிடம் சக்கரமும், முருகப்பெருமானிடம் வேலும் இருக்கின்றன என்று சொன்னார்.

எவ்வாறெனினும் சண் தமிழ்த் தீவிரவாதத்தை அது முளைவிட்ட கட்டத்தில் ஆதரிக்கவில்லை. துரோகிகள் என்று வர்ணிக்கப்பட்ட அரசியல்வாதிகளையும், தங்களைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளையும் ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யத்தொடங்கிய போது சண் அதைக் கண்டித்தார். அவற்றை அவர் தனிநபர் பயங்கரவாதம் என்று கருதினார்.

மேலும் அவற்றை அவர் ‘குட்டி பூர்ஷுவா’ கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட உணர்ச்சி முனைப்புடனான வீரசாகசமாக நோக்கினர். ஆனால் 1979 இல் யாழ்ப்பாணத்திற்கு மாத்திரம் அவசரகாலநிலையைப் பிரகடனம் செய்து ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இராணுவத்தை அனுப்பியபோது சண்ணின் அந்த நிலைப்பாடு மாற்றம்பெறத் தொடங்கியது. பிறகு 1983 ஜுலையில் நாடு பூராகவும் தமிழருக்கெதிராக இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. கொழும்பில் அதன் விளைவான அவலங்களையும், அழிவுகளையும் சண் நேரடியாகக் கண்டார்.

அதற்குப் பிறகு அவர் தமிழ்த் தீவிரவாதம் தொடர்பில் கூடுதலானளவிற்கு சாதகமான அணுகுமுறையையே கடைப்பிடித்தார். இனவாதத் துன்புறுத்தல்களையும், இராணுவ அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதற்கு ‘அவசியமான ஒரு கேடு’ என்று ஆயுதமேந்திய தமிழ்த்தீவிரவாதத்தை அவர் நியாயப்படுத்தத் தொடங்கினார். சரியோ, பிழையோ தீவிரவாதத் தமிழ்க்குழுக்களை அரச ஒடுக்குமுறையிலிருந்து மக்களைப் பாதுகாப்பவர்களாக சண் பார்த்தார். இந்த நிலைப்பாட்டை எடுக்கும்போது தீவிரவாதிகளினால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையிலும், நடைமுறையிலும் இருந்த தவறுகளை அவர் கவனிக்கவில்லை.

தமிழ்க்குழுக்கள் மத்தியிலான வேறுபாடுகள் இறுதியில் சகோதரத்துவ மோதல்களை விளைவித்தபோது பெரும் மனக்குழப்பம் ஏற்பட்டது. ஒரு மாவோவாதி என்ற வகையில் சண் நீண்ட மக்கள் யுத்தத்தை நடத்துவது பற்றி அந்த மகத்தான தலைவரிடமிருந்து தமிழ் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று சண் வலியுறுத்தினார். வெகுசன இயக்கங்களின் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

மேலும் முக்கியமாகத் தீவிரவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டுமென்று அவர் விரும்பினார். மா-ஓவின் ஒழுங்குக்கட்டுப்பாட்டு விதிகளையும், கெரில்லாப்போரை நடத்துகின்ற முறையையும் பின்பற்றுமாறு தீவிரவாதிகளுக்கு சண் ஆலோசனை கூறினார். இதுதொடர்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளை அவர் எழுதினார்.

விடுதலைப்புலிகளின் இந்திய விஸ்தரிப்புவாத எதிர்ப்பு

இந்திய இராணுவத்தின் இலங்கை வருகை சண் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசை மலினப்படுத்துவதற்குத் தமிழ்த் தீவிரவாதத்தைப் பயன்படுத்திய புதுடில்லி பிறகு இலங்கையில் மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்காக அதே அரசின் ‘நல்லெண்ணத்துடன்’ இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது என்று சரியாகவே சண் நம்பினார். அந்தப் பின்புலத்தில் என்னதான் தவறுகள் இருந்தாலும் விடுதலைப்புலிகளே இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்க்க ஒரேயொரு சக்தியென்று அவர் எண்ணினார்.

இந்திய அமைதி காக்கும் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரான மோதல்களின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற தமிழ்த்தீவிரவாத இயக்கங்கள் இந்தியப்படைகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டதை சண் கடுமையாக சாடியதாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். அந்த இயக்கங்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கையாட்கள் என்று அவர் கருதினார். அவர்களின் செயற்பாடுகளை தமிழ்மக்கள் என்றும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாத துரோகத்தனம் என்று வர்ணிக்கின்ற அளவுக்குக்கூட சண் சென்றார்.

ஆனால், சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையின் கீழ் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்று விடுதலைப்புலிகளை விடவும் ‘புலித்தனமானதாக’ தன்னைக் காட்டிக்கொள்கின்ற விசித்திரத்தைப் பார்க்கிறோம். சண் நேரடியாகச் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடிய ஒரேயொரு மூத்த தமிழ்த்தீவிரவாத இயக்கத்தலைவர் என்றால் அது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் உமா மகேஸ்வரன் தான்.

அதுவும்கூட, இந்திய அமைதி காக்கும் படையுடன் புளொட் சேர்ந்து செயற்படாமல் அந்தப்படையின் நடவடிக்கைகளை எதிர்த்த காரணத்தினால்தான் உமாவை சந்திப்பதற்கு சண் சம்மதித்திருந்தார். சண்ணின் கட்சியினதும் அட்டனில் தொழிற்சங்கத்தினதும் முன்னாள் செயற்பாட்டாளரான ‘கரவை’ கந்தசாமியே அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிகாக்கும் படைக்கும் இடையே போர் மூண்டபோது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். இந்திய இராணுவத்தினால் போரில் எவ்வாறு குடிமக்கள் கொல்லப்பட்டார்கள், சித்திரவதைக்கு உள்ளானார்கள் என்ற விபரங்களுடன் நான் கொழும்புக்குத் திரும்பினேன். இந்த விபரங்கள் அன்று சண்டே ஐலண்ட் பத்திரிகையில் பிரசுரமாகின.

விடுதலைப்புலிகளின் அன்றைய பிரதித்தலைவரான ‘மாத்தையாவுடனான’ நேர்காணலும் பிரசுரமானது. என்னை மௌனிக்கச் செய்யுமொரு முயற்சியாகக் கொழும்பிலுள்ள இந்திய இராஜதந்திரிகள் மாத்தையாவைப் பற்றி விசாரிப்பது என்ற போர்வையில் என்னைக் கைதுசெய்யுமாறு ஜனாதிபதி ஜெயவர்தனவை நிர்பந்தித்தார்கள். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள சகபத்திரிகையாளர்களின் எதிர்ப்பின் விளைவாக நான் பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டேன்.

நானொரு குற்றத்தைச் செய்தேனா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வழக்கொன்று நீதிமன்றத்தில் இருந்தது. பல தவணைகளில் இரகசியப்பொலிஸார் இன்னமும் விசாரணை நடந்துகொண்டிருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார்கள். இறுதியாக எனது வழக்குடன் சம்பந்தப்பட்ட கோவை சட்டமாதிபர் திணைக்களத்திற்குச் சென்றது. இறுதியில் எனக்கெதிராக எந்த வழக்கும் இல்லையென்று சட்டமாஅதிபர் அறிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில், மிகுந்த அக்கறையுடன் நிலைவரங்களை அவதானித்துக்கொண்டிருந்த சண் நீதிமன்றத்தில் நடப்பவை குறித்து உடனுக்குடன் தெரிந்துகொண்டார். இந்திய அமைதிகாக்கும் படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் மற்றும் யாழ்ப்பாணத்தின் நிலைவரங்கள் பற்றி விரிவாக அவர் என்னிடம் விசாரித்தார்.

புலிகளிடம் என்னதான் தவறு இருந்தாலும் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பைத் துணிச்சலுடன் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்று சண் என்னிடம் கூறியது நினைவிருக்கிறது. அப்போது இந்தியாவே பிரதான எதிரி என்றும் அவர் என்னிடம் கூறினார். இந்தியா தொடர்பில் விடுதலைப்புலிகளுக்கு இருந்த உணர்வே அவர்கள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு சண் மீது செல்வாக்குச் செலுத்தியது என்று நான் நினைக்கிறேன். தவிரவும் அரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை நியாயப்படுத்துகிற ஒரு புரட்சிவாதி என்றவகையில் தான் போதித்த கோட்பாட்டைப் புலிகள் நடைமுறைப்படுத்துவதாக அவர் நோக்கினார்.

அந்த நேரத்தில் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான இந்திய எதிர்ப்புப் போராட்டத்தை ஜே.வி.பியின் ரோஹண விஜேவீரவும் கூட ஆரம்பித்திருந்தார். ஆனால் சண் அதனை ஆதரித்திருக்கவில்லை. ஜே.வி.பி யினர் தெற்கில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்குப் பதிலாக வடக்கிற்குச் சென்று விடுதலைப்புலிகளைப் போன்று இந்திய அமைதிகாக்கும் படையுடன் சண்டையிட வேண்டும் என்று சண் சொல்வார்.

விஜயகுமாரதுங்க கொலை தொடர்பாக சண் கடுமையான ஆத்திரமடைந்தார். அந்த நேரத்தில் ஜே.வி.பியை இத்தாலியின் முசோலினியுடன் ஒப்பிட்ட சண், அந்தக்கட்சி ஒரு நவபாசிஸப்போக்குவாதமுடையது என்று சொன்னார். தேசப்பற்று என்ற பெயரில் இனவாதத்தை ஊக்குவிப்பதற்கு நாட்டில் நிலவிய இந்திய எதிர்ப்புணர்வை விஜேவீர பயன்படுத்தியதாகக் குறிப்பிட்ட சண், விஜேவீரவின் ஜே.வி.பி யை மார்க்சிய பதத்தில் ‘எதிர்ப்புரட்சிவாதிகள்’ என்று வர்ணித்தார்.

நாட்டுப்பிரிவினையல்ல – சுயநிர்ணய உரிமை

காலப்போக்கில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கண்ணின் சிந்தனைகளும், கருத்துக்களும் கூட மாற்றமடைந்தன. இலங்கைத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்ததை நான் வெளிநாட்டிற்குப்போன பிறகு அவரது எழுத்துக்களிலிருந்து அறிந்தேன். அவர் ஒரு தேசிய இனம் பற்றி ஜோசப் ஸ்டாலின் வகுத்த நிபந்தனைகளுக்கு இலங்கைத் தமிழர்கள் பொருந்திவரவில்லை என்பதால் அவர்கள் சுயநிர்ண உரிமைக்கு உரித்துடையவர்களல்ல என்பது ஆரம்பநாட்களில் சண்ணின் அபிப்பிராயமாக இருந்தது.

‘ஒரு பொதுமொழி, பிராந்தியம், பொருளாதார வாழ்க்கை மற்றும் பொதுவான கலாசாரமொன்றின் அடிப்படையில் வெளிப்படுகின்ற உளவியல் பாங்கு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட ஒரு கட்டுறுதியான மக்கள் குழுவினரே வரலாற்று ரீதியாக ஒரு தேசிய இனமாக அமைகிறார்கள்’ என்பதே ஸ்டாலினின் வரைவிலக்கணம்.

சுயநிர்ணய உரிமையை ஆதரித்தாலும் கூட சண் நாட்டுப்பிரிவினையை ஆதரிக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே நிலத்தொடர்ச்சியான தமிழ்பேசும் பகுதிகளாக இணைத்த தனியான பிராந்திய அலகொன்றுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது.

தோழர் சண்ணைப் பற்றியும், அவரது அரசியல் வாழ்க்கை பற்றியும் எழுதுவதற்கு மேலும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. 1943 ஆம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டதாரியாக வெளியேறிய அவர் ஒரு 60 ரூபா சம்பளத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றுவதற்கு இணைந்துகொண்டமை.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட கோட்பாட்டுப்பிளவும், பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமும் தொழிற்சங்கங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான போராட்டம் என்று நீண்டு தொடரும் அவரின் அரசியல் வாழ்க்கை நிகழ்வுகளும், ரோஹண விஜேவீர கைதும்: யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வெகுசன இயக்கம், மலையகத் தோட்டப்பகுதிகளில் ஆற்றல்மிக்க செங்கொடிச்சங்கத்தின் எழுச்சி: மா-ஓவுடனான சந்திப்புக்கள், 1971 ஜே.வி.பி கிளர்ச்சியும் சண் சிறையிலடைப்பும் அதற்கு மேலும் பல விடயங்களும் இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதப்பட வேண்டியவை.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com