தற்கொலை செய்து 2 நாளாகியும் மனைவி பிணத்துடன் தூங்கிய போதை கணவர்
கோவை சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (44). சமையல்காரர். இவர் தனது மனைவி, குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
திருமண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வந்த ராஜேஸ்வரி (45) என்பவருடன் முருகானந்தத்திற்கு நட்பு ஏற்பட்டது.
ராஜேஸ்வரிக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்துள்ளது. தனது கடைசி கணவர் சந்திரசேகரனை பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். நாளடைவில் முருகானந்தத்திற்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 ஆண்டிற்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், முருகானந்தம் மது போதைக்கு அடிமையானார்.
சரியாக வேலைக்கு செல்லாமல் போதையில் சுற்றினார். இதை தொடர்ந்து ராஜேஸ்வரி அவரை கோவை அரசு மருத்துவமனையில் மது போதை மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.
சில நாட்கள் மது பழக்கத்தில் இருந்து விடுபட்ட அவர், நல்ல முறையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
திருச்சியில் தனது அத்தை இறப்பிற்கு துக்கம் விசாரிக்க சென்ற முருகானந்தம் மது போதையில் வீட்டிற்கு வந்தார். சிகிச்சை அளித்தும் திருந்தவில்லையே என கணவரிடம் ராஜேஸ்வரி வாக்குவாதம் செய்தார்.
பின்னர் அவர் கடந்த 28ம் தேதி தூக்கு போட்டு இறந்தார். போதையில் இருந்த முருகானந்தம், மனைவியின் சடலத்தை தூக்கு கயிற்றை அறுத்து படுக்கையில் போட்டார்.
பின்னர், சடலம் அருகேயே தூங்கி விட்டார். போதை தெளிந்த பின்னர் மீண்டும் மது குடிக்க சென்று விட்டார். 2 நாளாக, சடலத்தை என்ன செய்வது யாருக்கு தகவல் தெரிவிப்பது என தெரியாமல் போதையில் முருகானந்தம் இருந்துள்ளார்.
வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கே சென்று பார்த்த போது ராஜேஸ்வரி இறந்து கிடந்ததும், அருகே போதையில் முருகானந்தம் தூங்கியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரிக்கின்றனர். போலீசாரிடம் முருகானந்தம் கூறுகையில், ‘‘ என் மனைவி மயக்கத்தில் இருப்பதாக நினைத்தேன்.
தொடர்ந்த குடித்து கொண்டிருந்ததால் என் மனைவி தூங்குவது போல் தான் எனக்கு தெரிந்தது. அவர் இறந்து விட்டாரா, இல்லையா என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, ’’ என புலம்பினார். முருகானந்தத்தின் மகள் டில்லியில், ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment