ilakkiyainfo

திருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்

திருமணம் புதுமை: பேண்ட் சூட் உடையில் தோன்றிய இந்திய மணப்பெண்
November 28
20:27 2020

பழங்கால உடையமைப்பு கொண்ட, வெளிர் நீல நிற பேண்ட் சூட் உடை அணிந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார், இந்திய பெண் சஞ்சனா ரிஷி.

“எனக்கு சூட்களை மிகவும் பிடிக்கும் என்பதால்தான் திருமணத்துக்காக அந்த உடையைத் தேர்ந்தெடுத்தேன்,” என்பது அவர் தரும் விளக்கம். ஆனால், இவரது புதிய ஆடை முயற்சி, இதுவரை பாரம்பரிய உடையில் தோன்றி இந்திய பெண்கள் திருமணம் செய்து கொண்ட விதத்தில் புதிய பார்வையை வழங்கியிருக்கிறது.

தனது திருமண உடையின் மூலமாக ஃபேஷன் உலகிலும் ஒரு அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் சஞ்சனா. திருமண உடைகளைத் தேர்ந்தெடுக்கும் வருங்கால இளம்பெண்கள் மரபார்ந்த உடைகளை விட்டுவிட்டு, அதிகாரத்தையும் ஆற்றலையும் குறிக்கும் சூட் வடிவ உடைகளைத் தேர்ந்தெடுப்பார்களோ என இவரது தோற்றம் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

மேலை நாடுகளில் கடந்த சில வருடங்களாகவே திருமணங்களின்போது பேண்ட் சூட் அணிவது அதிகரித்திருக்கிறது. ஆடை வடிவமைப்பாளர்களும் புதிய திருமண உடைகளை அறிமுகப்படுத்தும்போது கால் சட்டைகளை அதில் சேர்த்துக் கொள்கிறார்கள், இதுபோன்ற உடைகளைப் பிரபலங்களும் திருமணங்களின்போது அணிந்திருக்கிறார்கள்.

புகழ்பெற்ற தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடித்த சோஃபியா டர்னர், இசைக்கலைஞர் ஜோ ஜோனஸுடனான தன் திருமணத்திற்காக வெள்ளை கால்சட்டையுடனான ஆடையையே தேர்ந்தெடுத்தார். இவர்களது திருமணம் லாஸ் வேகஸில் நடைபெற்றது.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை சஞ்சனாவின் உடைத் தேர்வு சற்றே விநோதமானது என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக இந்திய மணப்பெண்கள் பட்டுப்புடவைகளையோ, வேலைப்பாடுகள் நிறைந்த லெகன்ஹா உடைகளையோதான் தேர்ந்தெடுப்பது வழக்கம். சிவப்பு நிறத்தில், தங்கம் அல்லது வெள்ளி ஜரிகையிட்ட உடைகளே அதிகம் விரும்பப்படுகின்றன.

மணப்பெண்களுக்கான மாத இதழ் ஒன்றின் முன்னாள் ஆசிரியரான நூபூர் மேத்தா, “இந்திய மணப்பெண் ஒருவர் இப்படி உடையணிந்து நான் பார்த்ததேயில்லை” என்கிறார். “பொதுவாக இந்திய மணப்பெண்கள் இந்திய மரபுசார் உடையுடன் அம்மா/பாட்டியின் நகைகளை அணியவே விரும்புவார்கள். இந்த உடை புதிது. சஞ்சனா தனித்துத் தெரிந்தார்” என்கிறார்.

இந்திய-அமெரிக்க தொழிலதிபரான சஞ்சனா ரிஷிக்கு வயது 29. இவர், தில்லி தொழிலதிபரான த்ரூவ் மஹாஜனை (வயது 33), செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி தில்லியில் மணமுடித்தார். அமெரிக்காவில் பல வருடங்களாகக் கார்ப்பரேட் வழக்கறிஞராகப் பணிபுரிந்த சஞ்சனா, சென்ற வருடம் இந்தியா திரும்பினார். இவரும் த்ரூவும் கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இணைந்து வாழ்ந்தார்கள்.

சஞ்சனாவின் சகோதரரும் பெரும்பான்மையான நண்பர்களும் அமெரிக்காவில் இருப்பதால் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஒரு திருமண நிகழ்ச்சி எனவும், நவம்பரில் தில்லியில் ஒரு மரபார்ந்த திருமண நிகழ்ச்சி எனவும் இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கோவிட் பிரச்னை எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது.

அமெரிக்காவைப் போலல்லாமல் இந்தியாவில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வசிப்பது உடனே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. “என் பெற்றோர் மிகவும் முற்போக்கானவர்கள்தான் என்றாலும், நண்பர்கள், அண்டைவீட்டார், உறவினர்களிடமிருந்து அளவுக்கதிகமான அழுத்தம் இருந்தது. உறவை முறைப்படுத்தி, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்” என்கிறார் சஞ்சனா. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்தார்கள்.

“திருமணம் என்று முடிவெடுத்த உடனேயே, நான் என்ன உடை அணியப்போகிறேன் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. பேண்ட்சூட் அணியப்போகிறேன் என்பதும், எந்த பேண்ட்சூட் என்பதும்கூட எனக்கு உடனே மனதுக்குள் வந்தது” என்கிறார் சஞ்சனா.

“சூழலை பாதிக்காத உடைகள்” மீது சஞ்சனாவுக்குப் பெரிய அளவில் நம்பிக்கை உண்டு என்பதாலும், பொதுவாகவே அவர் பயன்படுத்தப்பட்ட உடைகளை வாங்குவார் என்பதாலும், இத்தாலியில் ஒரு கடையில் பார்த்த பேண்ட்சூட்டை அணியவேண்டும் என்று விரும்பினார்.

“இது முன்பே வேறு ஒருவரால் பயன்படுத்தப்பட்ட பேண்ட்சூட். பழங்கால ஆடை வடிவமைப்பு கொண்டது. 1990களில் இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் கியான்ஃப்ராங்கோ ஃபெர்ரேவால் உருவாக்கப்பட்டது. அந்தக் கடைக்குப் பேசியபோது அந்த உடை இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்கிறார் சஞ்சனா.

அமெரிக்காவில் கார்ப்பரேட் வழக்கறிஞராக இருந்தபோது அதிகமாக பேண்ட்சூட்களையே தான் அணிந்ததாக சொல்லும் சஞ்சனா, தன்னை மிகவும் கவர்ந்த பல வலிமையான நவீன பெண்களும் இந்த உடையையே அணிந்தார்கள் என்பதால் இந்த உடையை விரும்பி அணிந்ததாகக் கூறுகிறார்.

அது மட்டுமின்றி, “மணப்பெண், மணமகன், திருமணத்தை நடத்தி வைத்தவர் உட்பட மொத்தமே 11 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டார்கள் என்பதால் இந்த உடை பொருந்தும் என்று தோன்றியது. எங்கள் பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டார்கள். த்ரூவின் வீட்டுத் தோட்டத்தில் நிகழ்வு நடைபெற்றது. அனைவரும் எளிய உடைகளையே அணிந்துகொண்டிருந்தார்கள். நான் மட்டும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெரிய மரபார்ந்த திருமண உடையை அணிந்துகொண்டிருந்தால் மிகவும் விசித்திரமாக இருந்திருக்கும்” என்கிறார்.

சஞ்சனா பேண்ட்சூட் அணிந்து திருமணத்துக்கு வருவார் என்று தான் எதிர்பார்க்கவேயில்லை என்கிறார் த்ரூவ் மஹாஜன். “அவளைப் பார்க்கும்வரை, அவள் என்ன உடை அணியப்போகிறாள் என்பதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் அது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. எந்த உடை அணிந்தாலும் சஞ்சனா அசத்திவிடுவாள் என்பது எனக்குத் தெரியும். உண்மையில் சொல்லபோனால், அவளைத் திருமணத்தின்போது பார்த்தபோது, அவளது பேண்ட்சூட் முதலில் என் கண்ணில் படவில்லை. ஒரு தேவதையைப் போல, கொள்ளை அழகுடன் அவள் இருந்தாள் என்பதைத்தான் நான் ரசித்துக்கொண்டிருந்தேன். இன்னும்கூட அவள் அழகை நான் வர்ணித்துக்கொண்டேயிருக்க முடியும்….” என்றபடி சிரிக்கிறார் த்ரூவ்.

சமூக வலைத்தளங்களில் சஞ்சனாவின் உடை பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அவர் தனது புகைப்படங்களை வெளியிட்டபோது, அவரது நண்பர்களும் அவரைப் பின் தொடர்பவர்களும் புகழ்ந்தார்கள். அழகாகவும் அசத்தலாகவும் அவர் இருக்கிறார் என்பதாகவும், “நவீன மணப்பெண்” என்பது போலவும் பின்னூட்டங்கள் வந்தன.

ஆடை வடிவமைப்பாளர்களும் ஃபேஷன் ஆர்வலர்களும் அவரது உடைத்தேர்வைப் பாராட்டினார்கள். ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தா அவர் அழகாக இருப்பதாகப் பாராட்டினார். நடிகை சோனம் கபூரின் தங்கையும் பாலிவுட் தயாரிப்பாளருமான ரியா கபூர், “அசத்தல்” என்று புகழ்ந்தார்.

நவீன பெண்களுக்கான உடை வடிவமைப்பாளர்களில் இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்றவராகக் கருதப்படும் ஆனந்த் பூஷன், “ரியாவின் உடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு மணப்பெண்ணுக்கு அழகூட்டும் உடை இது” என்று பிபிசியிடம் தெரிவித்தார். “நான் அந்த உடையைப் பார்த்தபோது என் மனதில் ஒரு எண்ணம் ஓடியது: ‘செக்ஸ் அண்ட் த சிட்டி’ தொடரின் கேரி ப்ராட்ஷா ஒரு இந்திய பெண்ணாக இருந்திருந்தால், அவள் இதுபோன்ற ஒரு பேண்ட் சூட்டைத்தான் திருமணத்தின்போது அணிந்திருப்பாள்” என்கிறார்.

மணப்பெண்களுக்கான சில சமூக ஊடகப் பக்கங்கள் சஞ்சனாவின் படத்தைப் பகிரத் தொடங்கியதும் பலர் அவரை வசைபாட ஆரம்பித்துவிட்டனர்.

“இந்திய கலாசாரத்துக்கு ஒரு மோசமான பெயரை வாங்கித் தந்துவிட்டார்”, “இவரது கணவருக்கு ஒரு எச்சரிக்கை: புகழ் வெளிச்சத்துக்காக பெண்ணியம் என்ற பெயரில் இவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்”, “இந்திய கலாசாரம் இவருக்கு ஒருபோதும் புரியாது, இவர் மேலைநாட்டுக் கலாசாரத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறார்” என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. சிலர் “போய் சாவு” என்றெல்லாம் கூட வன்மமாகத் தாக்கினர்.

“எனக்கு இந்த விமர்சனம் புரியவேயில்லை. இந்திய ஆண்கள் திருமணங்களின்போது பேண்ட்சூட் தானே அணிகிறார்கள்? அதை யாரும் கேள்வி கேட்பதில்லை. பெண் அணிந்தால்மட்டும் அது பிரச்சனையாகிவிடுகிறது. பெண்களுக்கான வரைமுறைகள் எப்போதுமே கடுமையாக இருக்கின்றன” என்கிறார் சஞ்சனா.

இந்தியாவில் மட்டுமல்லாமல், கால்சட்டைகள் அணிவதற்கான பெண்களின் போராட்டம் நீண்டது, கசப்புகள் நிறைந்தது. உலகில் பல மரபுகள், ஏன் நவீன கலாச்சாரங்கள்கூட நளினமான ஆடைகளை விடுத்துக் கால்சட்டை அணியும் பெண்களைக் கொஞ்சம் குறைவாகவே மதிப்பிடுகின்றன. பொதுவான பள்ளி சீருடைகளில், பாவாடைக்கு பதிலாக பெண்கள் கால்சட்டைகள் அணிந்துகொள்ளலாம் என்கிற ஒரு விதியே இப்போதுதான் தென்கொரியாவில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில், கடுமையான குளிரிலும் கூட பெண்கள் சீருடையில் பாவாடைதான் கட்டாயமாக இருந்தது. பெண்கள் கால்சட்டை அணிந்துகொள்ளலாம் என்ற தளர்த்தலுக்காக அவர்கள் நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது! சென்ற வருடம் பெனிசில்வேனியாவில், ஒரு பதினெட்டு வயது மாணவி, தனது கல்வி நிறுவனத்திடம் போராடி, கால்சட்டை அணியும் உரிமையைப் பெற்றார். இந்தியாவிலும் பெண்கள் கால்சட்டை அணிவதற்கான ஒரு போராட்டம் தொடர்ந்தபடி இருக்கிறது.

“பல நூற்றாண்டுகளாகவே இந்திய பெண்கள் தைக்கப்பட்ட கால்சட்டைகள்/பைஜாமாக்களை அணிந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனாலும், பெருநகரங்களுக்கு வெளியே மரபார்ந்த குடும்பங்கள் பெண்களைக் கால்சட்டை அணியவோ ஜீன்ஸ் அணியவோ அனுமதிப்பதில்லை. ஆண்மைய சிந்தனை உள்ள ஒரு சமூகத்தில், ஆண்களால் பெண்ணுரிமைகளை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆகவே பெண்களின் நடத்தைகள், இனப்பெருக்கம் சார்ந்த உரிமைகள், பெண்கள் எப்படி சிரிக்கவேண்டும், எந்த உடை உடுத்தவேண்டும் என்று எல்லாவற்றையும் அவர்கள் முடிவு செய்யப் பார்க்கிறார்கள்” என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் ஆனந்த் பூஷண்.

“ஒரு பெரிய அரசியல் முன்னெடுப்பாக இந்த பேண்ட்சூட்டை நான் அணியவில்லை. ஆனாலும் அது தெரியாமல் தற்செயலாகவே நடந்துவிட்டது” என்கிறார் சஞ்சனா.

“இந்தியாவில் எல்லாப் பெண்களுக்கும் விரும்பிய உடையை அணியும் சுதந்திரம் இல்லை என்பதை நான் உணர்கிறேன். நான் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்தபோது என்னிடம் பேசிய பல பெண்கள், என் உடையைப் பார்த்தபின்பு அவர்களுக்கு தைரியம் வந்ததாகவும், தங்களது திருமணத்தின்போது என்ன உடை அணிவது என்பதற்காக தங்களது பெற்றோர்களுடனோ வருங்காலக் கணவரின் குடும்பத்தினரோ பேசத் தயாராகி இருப்பதாகவும் சொன்னார்கள்” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதைக் கேட்டபோது எனக்கு மகிழ்ச்சிதான், ஆனாலும் எனக்கு சின்னதாக ஒரு உறுத்தல் இருந்தது. அடுத்தவர்களின் வாழ்விலும் வீட்டிலும் நான் பிரச்சனைகளை உருவாக்கிவிட்டேனோ என்று பயந்தேன்” என்கிறார்.

ஒரு மணப்பெண் நீல பேண்ட்சூட் அணிந்தால் அதைப் பார்க்கிற மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்களா?

“இது ஒரு விநோத தேர்வுதான். இது ஒரு தீப்பொறி, இது நெருப்பாக மாறலாம் அல்லது புகைந்து போகலாம்” என்று பேசும் பூஷண், ஒரு விஷயத்தை சொல்லி முடிக்கிறார்:

“அது நெருப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com