திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிக்கு வந்த கொடுமை: 9 பேருக்கு கொரோனா

மாவனல்லையில் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 120க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த திருமண வைபவம் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம்பெற்றுள்ள போதும் இரண்டாவது நாள் மணமகனின் வீட்டில் நடத்தப்பட்ட வைபவத்தில் சுகாதார வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மணமகன் கொழும்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும் குறித்த திருமண வைபவத்திற்கு கொழும்பில் இருந்தும் சிலர் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மணப்பெண் உந்துகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மணமகன் கேகாலை மாவட்ட தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 150 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்து 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் குமார் விக்ரமசிங்க தெரிவித்தார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment