சமூக ஊடகங்களில் துப்பாக்கி பிரயோக சத்தங்களுடன் குருதி சிந்தப்பட்டிருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ள அதேவேளை பொதுமக்கள் மீது தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என ஈரானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெஹ்ரானின் அசாதி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றவேளை துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெறும் சத்தங்களை உள்ளடக்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

உக்ரைன் விமானத்தை சுட்டுவீழ்த்தியதை ஈரான் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க எங்கள் எதிரி என பொய் சொல்கின்றனர், எங்கள் எதிரிகள் இங்கிருக்கின்றார்கள் என டெஹ்ரான் பல்கலைகழகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமெழுப்புவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மற்றுமொரு பல்கலைகழகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதையும், ஆர்ப்பாட்டக்காரர்கள்  தெஹ்ரானின் சுதந்திர சதுக்கத்தை நோக்கி செல்வதையும், ஏனைய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

iranpro_a

இரத்தம்சிந்தப்பட்டிருப்பதையும் காயமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் ஈரானின் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளுடன் ஓடுவதை காணமுடிகின்றது.

கலகமடக்கும் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகை பிரயோகத்தினை மேற்கொண்ட பின்னர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என அந்த இடத்தில் காணப்பட்ட ஒருவர் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

அது மிகமோசமான நிலைமை என தெரிவித்துள்ள அந்த பெண்மணி அவர்கள் தொடர்ச்சியாக கண்ணீர் புகை பிரயோகத்தில் ஈடுபட்டனர்,எங்களால் எதனையும் பார்க்க முடியவில்லை நாங்கள் அலறினோம்,இளம் பெண்ணொருவர் காலில் சுடப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண்மணி அஜாடி சதுக்கத்தில் இரத்தவெள்ளம் காணப்படும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.இது எங்களின் குருதியென பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று காயமடைந்த பலரையும் பெண்ணொருவர் விழுந்து கிடப்பதையும் காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.அவரின் மேல் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது எந்த தாக்குதலும் இடம்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.