கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக் கொடியை மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்குகிறது.

இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 96,354 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 28,1179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை உயிரிழப்பும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1418 ஆக பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 16 இலட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்க உள்ள நிலையில், அந்தக் கொடூரமான மைல்கல்லை எட்டும்போது அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட ஜனநாயகக் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து ட்ரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

“கொரோனா வைரஸிடம் நாங்கள் இழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களில் அனைத்து அமெரிக்க அரச கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச்சின்னங்களில் உள்ள அமெரிக்க கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவிட்டுங்கள்.

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியபோது இறந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் தேசிய துக்க தினத்திற்காக திங்களன்று கொடிகள் அரைக் கம்பத்தில் இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.