டெல்லியில் மது வாங்குவதற்காக கடைகள் முன்பு வரிசையில் நின்றவர்கள் மீது மலர் தூவி வரவேற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அத்துடன், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மதுபானக் கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்தது. அதன்படி டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுநாள் வரை மது கிடைக்காமல் தவித்து வந்த மது பிரியர்கள், கூட்டம் கூட்டமாக வந்து சரக்கு பாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் பெட்டி பெட்டியாக வாங்கிச் சென்றதையும் காண முடிந்தது. இன்றும் மதுக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது. மது விற்பனை அதிகரித்திருப்பதால் அரசுக்கு வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.
#WATCH Delhi: A man showers flower petals on people standing in queue outside liquor shops in Chander Nagar area of Delhi. The man says, “You are the economy of our country, government does not have any money”. #CoronaLockdown pic.twitter.com/CISdu2V86V
— ANI (@ANI) May 5, 2020
இந்நிலையில், டெல்லி சந்தர் நகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு இன்று ஏராளமானோர் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு நபர், வரிசையில் நின்றவர்கள் மீது பூக்களை தூவி வரவேற்றார். ‘நீங்கள் நமது நாட்டின் பொருளாதாரம். அரசாங்கத்திடம் இப்போது பணம் இல்லை’ என்றும் குடிமகன்களைப் பார்த்து அந்த நபர் கூறுகிறார்.
குடிமகன்கள் மீது மலர் தூவி வரவேற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.