ilakkiyainfo

பலஸ்த்தீனத்தின் மீதான பாராமுகமும் முசுலிம்களிடையேயான ஒற்றுமை இன்மையும் – வேல் தர்மா (சிறப்பு கட்டுரை)

பலஸ்த்தீனத்தின் மீதான பாராமுகமும் முசுலிம்களிடையேயான ஒற்றுமை இன்மையும் – வேல் தர்மா (சிறப்பு கட்டுரை)
August 21
12:55 2014

உலகெங்கும் பல கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்ற போதும் அவர்களால் பலஸ்த்தீன மக்களின் சொல்லோணத் துயரைத் துடைக்க முடியவில்லை.

அரபு நாடுகளின் எண்ணெய் வளம் வலுமிக்க அரசுகள் எதுவும் பலஸ்த்தீன மக்களின் கண்ணீர் துடைக்க உதவவில்லை. இஸ்ரேல் தான் விரும்பிய போதெல்லாம் பலஸ்த்தீனியக் குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும்  தனது படைபலத்தால் தட்டிக் கேட்பாரின்றிக் கொன்று குவிக்க முடியும்.  இதற்கான காரணம் அவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையா?

சியா சுனி முரண்பாடு

முஸ்லிம்களிற்கிடையிலான முக்கிய வேறுபாடு சியா சுனி வேறுபாடாகும் சியா முஸ்லிம்களுக்கும் சுனி முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றது.

ஆண் மகன் இல்லாத முகம்மது நபியின் மறைவின் பின்னர் அவரது உண்மையான வாரிசு யார் என்பதில் உருவான போட்டி சியா சுனி முஸ்லிம்களிடையேயான ஒரு போட்டியாக இன்றுவரை தொடர்கின்றது.

இவர்களிடையேயான போட்டி அன்றிலிருந்து இன்றுவரை ஓர் அரசியல் போட்டியாகவே தொடர்கின்றது. இது ஒரு மத நெறி தொடர்பான முரண்பாடு அல்ல. முகம்மது நபியின் பிரியத்துக் குரிய மகள்  ஃபாத்திமாவின் கணவர் அலி.  இவர் ஒரு சிறந்த வீரனும் அறிஞருமாகும்.

இவரை நபியின் உண்மையான வாரிசாகக் கருதியவர்கள் சியா முஸ்லிம்கள் எனப்படுகின்றனர்.

முகம்மது நபியின் பிரியத்துக்குரிய மனைவி ஆயிஷாவின்  தந்தை அபுபக்கர்தான் முகம்மது நபியின் உண்மையான வாரிசு என நம்பியவர்கள் சுனி முஸ்லிம்கள் எனப்படுகின்றனர்.

முகம்மதுவிற்குப் பின்னர் சியாப் பிரிவினரின் ஆட்சியில் உள்ள அடக்கு முறைகளையும் ஊழல்களையும் எதிர்த்த அலியின் மகன் சுனி முசுலிம் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டான்.

இதுவே இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாட்டை பெரும் முறுகலாக மாற்றியது. தற்போது உலகில் உள்ள முஸ்லிம்களில் பத்து முதல் இருபது விழுக்காட்டினர் மட்டும் சியா முஸ்லிம்கள் ஆகும். ஈரான், ஈராக், சூடான் போன்ற நாடுகளில் சியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

1

ஈரானியர்கள்

முஸ்லிம்களிடையிலான   வேறுபாட்டின் முக்கிய காரணியாகத் திகழ்வது ஈரான். சொறஸ்றியன் என்னும் மதத்தைப் பின்பற்றி வந்தவர்கள் ஈரானியர்கள். ரோமானியர்களால் பாரசசீகத்தினர் என அழைக்கப்பட்ட ஈரானியர்களுக்கு என்று ஓர் உயரிய கலாச்சாரம் உண்டு.

ஈரானியர்கள் தமது கலாச்சாரம் அரபுக்களிலும் பார்க்க உயர்வானது எனக் கருதுகின்றனர். ஈரானியர்கள் 651-ம் ஆண்டு அரபுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இசுலாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். இவற்றால் ஈரானியர்கள் அரபுக்களை விரும்புவதில்லை.

ஈரானியர்களில் பெரும்பகுதியினர் சியா முஸ்லிம்கள். அரபுக்களில் பெரும்பான்மையானவர்கள் சுனி முஸ்லிம்கள். உலக அரங்கில் அரபு நாடுகள் ஒரு ஈடுபாடற்ற நிலையைக் கடைப்பிடிக்கும் போதெல்லாம் ஈரான் ஒரு செயற்படு நிலையைக் கடைப்பிடிக்கும்.

07-iran-mmap-mdஈரானுக்கு என்று  ஒரு வல்லரசுக் கனவு உண்டு. ஈரான் அணுக்குண்டை உற்பத்தி செய்து அஜர்பைஜான், லிபியா, எகிப்து, அல்ஜீரியா ஆகியவற்றுடன் சவுதி அரேபியாவின் ஒரு பகுதியையும் தனது  ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்து ஒரு வல்லரசாக வேண்டும் என்பதே அக்கனவு.

இதனை எல்லா அரபு நாடுகளும் எதிர்க்கின்றன. ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது.

ஈரான் என்றாவது ஒரு நாள் அணுக்குண்டை உற்பத்தி செய்யலாம் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. தான் அணுக்குண்டை உற்பத்தி செய்வதிலும் பார்க்க சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை வாங்க சவுதி திட்டமிடுகின்றது.

அரபுத் தேசியவாதம்

எல்லா அரபுக்களும் முசுலிம்களல்லர். எல்லா முசுலிம்களும் அரபுக்களல்லர். அரபு நாடுகளின் வாழும் முசுலிம்கள் உலக மக்கள் தொகையின் இருபது விழுக்காட்டினர் மட்டுமே!

Iranian Arabs1Iranian Arabs
அரபுக்கள் என்ற அடையாளம் மூவாயிரம் ஆண்டுகளாக இருக்கின்றது. அரபுத் தேசியவாதம் முதலாம் உலகப் போரின் பின்னர் முனைப்படைந்தது. அரபுக்கள் முதலாம் உலகப் போரின் முன்னர் உதுமானிய பேரரிசினால் இசுலாமிய மதப்படி ஆளப்பட்டார்கள்.

முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸுனாலும் பிரித்தானியாவினாலும் ஆளப்பட்டனர். பிரித்தானிய பிரெஞ்சு ஆட்சியின் போது அரபு மக்கள் தம்மைத் தாமே ஆள வேண்டும் என்ற கொள்கையால் உந்தப்பட்டனர்.

இவ்விரு நாடுகளில் இருந்தும் சுதந்திரம் பெற்ற பின்னர் 1948-ம் ஆண்டு அரபு நாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பது முன்னாள் எகிப்திய அதிபர் கமால் நாசர் முன்வைத்தார்.

பின்னர் 1958-ம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசு உருவாக்கப்பட்டது. இதில் ஈராக்கும் இணைவதாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடக்கவில்லை. அரபுநாட்டு ஆட்சியாளர்கள் ஒருவரை ஒருவர் ஐயப்படத் தொடங்கினார்கள். மன்னர் ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் படைத்துறை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களை வெறுத்தார்கள்.

அரபுக்கள் அவர்களது மொழி அடிப்படையில் ஒன்றாக முயன்றாலும் அவர்களிடையே இருந்த இனக்குழும வேறுபாடுகள் அவர்களை ஒன்று படுவதைத் தடுத்தது. அவர்களிடையே பல நூற்றுக் கணக்கான வேறுபாடுகள் இருந்தன.

அவை ஒன்றுடன் ஒன்று முரண்படுவதும் உண்டு. சவுதி அரேபிய மன்னர் குடும்பம் கட்டார் மன்னர் குடும்பத்திலும் பார்க்க மேன்மையானது என நம்புகிறது. இதனால் இந்த அரச குடும்பங்களிடையே முரண்பாடு உண்டு.

ஜோர்தான், சவுதி அரேபியா, லெபனான் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்குலக சார்பானவர்களாகவும் இருக்கிறார்கள். 1967-ம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த போரில் அரபு நாடுகள் படுதோல்வி அடைந்தவுடன் அரபுத்தேசியவாதம் வீழ்ச்சியடைந்தது.

225px-Anwar_Sadat_cropped
அன்வர் சதாத் இஸ்ரேலுடன் செய்த  காம்ப் டேவிட் உடன்படிக்கையுடன் அரபுத்தேசியவாதம் முடிவடைந்து விட்டது எனச் சொல்லலாம். அரபு நாடுகள் இப்படி ஒற்றுமையின்றிப் போன படியால் இஸ்ரேல் என்ற நாட்டின் தோற்றத்தையோ வளர்ச்சியையோ அவர்களால் தடுக்க முடியவில்லை.

இப்போது எகிப்து    இஸ்ரேலுடன் நெருங்கிய உறவையும் சவுதி அரேபியா, ஜோர்தான் போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் இரகசிய உறவையும் பேணுகின்றன.

ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்ய முனைந்தால் இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் இணைந்து அதை முறியடிக்க இரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி ஐக்கிய ஆபிர்க்கக் குடியரசு என்னும் பேரரசை உருவாக்க வேண்டும் என விரும்பினார். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தமக்கு என ஒரு நாணய நிதியத்தையும் பொது நாணயத்தையும் உருவாக்க வேண்டும் என விரும்பினார்.

அவரது எண்ணம் ஈடேறவில்லை. ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் ஹுசேய்ன் படை எடுப்புக்கள் மூலம் ஈரான், குவேய்த் ஆகியவற்றைத் ஈராக்குடன் இணைக்க முயன்றார். இதானால் அமெரிக்க ஆதிக்கம் மத்திய கிழக்கில் வலுப்பெற்றது.

turkey

துருக்கியர்

மேற்கொண்டு நாம் துருக்கியைப் பார்ப்போமானால். துருக்கி மற்றைய இசுலாமிய நாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அது ஒரு குடியரசு நாடு.  தேர்தல் மூலம் தனது பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கிறது. சம்பிரதாய குடியரசுத் தலைவர் கூட தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அதன் அரசு மதசார்பற்றது.

மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட ஒரே இசுலாமிய மக்களைப் பெரும்பான்மையினர்களாகக் கொண்ட நாடு துருக்கியாகும்.  அமரிக்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடு.பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கின்றது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, பால்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம், கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது.

மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன் குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது.

கருங்கடல், மத்திய தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது.

முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவுடனும் பிரான்ஸுடனும் இணைந்து அரபு நாடுகள் தமது முதுகில் குத்தின என துருக்கி கருதுகிறது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியில் இருப்பதை துருக்கி விரும்பியது.

இதனால் அது எகிப்துடன் முரண்பட்டு நிற்கின்றது. சிரியாவில் பஸார் அல் அசாத்திற்கு எதிரான் கிளர்ச்சிக்காரர்களுக்கு துருக்கி ஆதரவு தெரிவிக்கின்றது. இதனால் துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. துருக்கி பலஸ்த்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்கின்றது.

muslim-population

முசுலிம்கள் வாழும் நாடுகள்

ஆசிய நாட்டு முசுலிம்கள்

அரபுநாடுகளிலும் பார்க்க அதிக அளவு முசுலிம்கள் ஆசியாவில் வாழ்கின்றனர். ஆசியாவில் ஒரு பில்லியன் முசுலிம்கள் வாழ்கின்றனர் அரபு நாடுகளில் முன்னூறு மில்லியன் (முப்பது கோடி) முசுலிம்கள் மட்டுமே. அதிக அளவு முசுலிம்கள் வாழும் நாடுகள் இந்தோனேசியா, பாக்கிஸ்த்தான், இந்தியா, பங்காளாதேசம் ஆகியவையாகும்.

இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் வாழும் மக்கள் ஒரு மில்லியன்களுக்கும் (பத்து இலட்சம்) அதிகமாகும். இந்தோனேசியா, புரூனை, மலேசியா ஆகியநாடுகளில் முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

ஆசியாவில் முசுலிம் வாழும் நாடுகள் அரபு நாட்டு முசுலிம்களுடன் கலாச்சார ரீதியில் சற்று வேறுபட்டு நிற்கின்றனர். பல ஆசிய நாடுகள் பலஸ்த்தீனிய விடுதலையை இராஜதந்திர ரீதியில் ஆதரிக்கின்றன.

பலஸ்த்தீனியத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பெரிய ஆதரவு கிடைப்பதற்கு ஆசிய நாடுகளின் ஆதரவும் ஒரு காரணம். பலஸ்த்தீனிய விடுதலைக்கு இராசதந்திர ஆதரவு மட்டுமே கொடுக்க முடிந்தது. பலஸ்த்தீனியர்களின் படைத்துறைப் போராட்டத்திற்கு நேரடியான உதவிகளை அவர்களால் செய்ய முடியவில்லை.

egypt_election1

இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு

1928-ம் ஆண்டு இஸ்லாமிய மத அறிஞர்களாலும் போதகர்களாலும் ஹசன் அல் பன்னா என்ற பேரறிஞர் தலைமையில் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.  தொடங்கி இருபது ஆண்டுகளில் இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்தது.

ஒவ்வொரு இசுலாமியரும், சமூகமும், அரசும் இசுலாமிய சட்டப்படியே நடக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது இ.ச.அமைப்பு. அது கல்விக் கூடங்கள், நியாய விலைக்கடைகள், மருத்துவ மனைகள் போன்றவற்றை நடாத்தி வந்தது.

அப்துல் கமால் நாசர் செய்த புரட்சியின் போது இ.ச.அமைப்பு அவருடன் இணைந்து செயற்பட்டது. ஆனால் நாசர் நாட்டை சோஸலிச நாடாக நடத்த விரும்பினார்.

இ.ச.அமைப்பு இசுலாமியச் சட்டங்களை அமூல்படுத்தும் படி அவரை வேண்டியது. நாசரைச் சந்திக்கச் சென்ற இ.ச.அமைப்பின் தலைவர் பெண்கள் முக்காடு போடுவதைச் சட்டமாக்கும் படி வேண்டினார்.

அதற்கு நாசர் ஒரு வீட்டுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் தீர்மானிக்கட்டும். நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன;. மருத்துவக் கல்லூரியில் பயிலும் உமது மகளை முதலில் முக்காடு போடச் செய்யும். பிறகு நாட்டைப் பற்றிப் பார்ப்போம் என்றார்.

பின்னர் நாசருக்கும் இ.ச.அமைப்பிற்கும்   இடையில் பகைமை ஏற்பட்டு. இ.ச.அமைப்பு   எகிப்தில் தடை செய்யப்பட்டது. சிரியாவின் ஹமா நகரில் 1982-ம் ஆண்டு நாற்பதினாயிரம் இ.ச.அமைப்பின் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தற்போது சிரியாவில் ஆட்சியில் இருக்கும் பஷார் அல் அசாத்தின் சித்தப்பா ரிஃபாத் அல் அசாத்தால் மேற்கொள்ளபப்ட்டது. சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன், ஈரான், ஈராக், துனிசியா, பலஸ்த்தீனம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியக் கூட்டமைப்பு, ஓமான், குவைத், சிரியா, லிபியா, சோமாலியா, யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் உட்பட 50இற்கு மேற்பட்ட நாடுகளில் இ.ச.அமைப்பிற்கு கிளைகள் இருக்கின்றன.

இசுலாமிய சகோதரத்துவ அமைப்புபடைக்கலன் ஏந்தியபோராட்டம் செய்யக்கூடாது என்ற நம்பிக்கையுடையஅமைப்பு. ஆனால் இதன் ஒரு கிளையே ஹமாஸ் அமைப்பு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பைப் பிடிக்காத எகிப்து, சவுதி அரேபியா, சிரியா ஆகிய நாடுகள் ஹமாஸ் அமைப்பை எதிர்க்கின்றன. காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியர்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் பெரிய அளவில் ஏதும் செய்யாதமைக்கு இதுவே காரணம்.

Map_of_Occupation_Palestinian_by_ademmm-copy

பலஸ்த்தீனியத் தேசியவாதம்

பலஸ்த்தீனம் என்ற சொல் இடம்விட்டு இடம் நகரும் மக்கள் எனப் பொருள்படும். கிரேக்கர்கள் முதலில் பலஸ்த்தீனம் என்னும் பெயரால் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தை அழைத்தனர்.

அப்பிரதேசம் இப்போது இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய ஆட்சியின்போது யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து தோன்றிய போது பலஸ்த்தீனியர்கள் என்றபதம் பரவலாகப் பாவிக்கப் படத் தொடங்கியது.

1947-ம் ஆண்டு இஸ்ரேல் உருவான ஓராண்டின் பின்னர் அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்தன.  இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இதன் பின்னர் அரபுநாடுகள் பலஸ்த்தீன மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதில் அரபு நாடுகள் முரண்பட்டுக் கொண்டன. பலஸ்த்தீனம் தனது நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் எனச் சொன்னது ஜோர்தான்.

_70952197_70952196_CIபலஸ்த்தீனம் வரலாற்று ரீதியாக தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என அடம்பிடித்தது சிரியா. சில நாடுகள் பலஸ்த்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் எனக் கருதின. மாறாக யசீர் அரபாத்  ஜோர்தான் பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதி எனக் கருதினார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் முஸ்லிம்களிடையே பிளவுகளை உருவாக்கியது.

ஈரான் பலஸ்த்தீனம் தொடர்பான தீர்வுகளில் தனக்கும் பங்கு உண்டு என்றது. காஸா நிலப்பரப்பு எகிப்த்தின் கீழ் இருந்ததையும், மேற்குக்கரை ஜோர்தானின் கீழ் இருந்ததையும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. 1967-ம் ஆன்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் பலஸ்த்தீனியர்கள் ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளிற்கு இடம்பெயர்ந்தனர்.

ஜோர்தான் நாடுதான் முதலில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தியது. பின்னர் லெபனானில் பலஸ்த்தீனியர்களுக்கும் லெபனானியக் கிற்ஸ்த்தவர்களுக்கும் இடையில் மோதல் நடந்தது.

பின்னர் சிரியப் படைகள் லெபனானிற்குள் சென்று பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத்தினரைப் பெருமளவில் கொன்று குவித்தது. இதானல் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.

பின்னர் லெபனானில் எஞ்சியிருந்த பலஸ்த்தீனியர்களிடையே ஹிஸ்புல்லா அமைப்பு உருவானது. பலஸ்த்தீன விடுதலைக்கு என பல்வேறுபட்ட அமைப்புக்கள் உருவாகின. இவை ஒன்றுடன் ஒன்று முரண்படுவதும் உண்டு.

அரபுக்களின் பாராமுகம்

Gaza_Strip_map2.svgஅரபு நாட்டு செல்வந்தர்கள் இலண்டனிலும் பரிஸிலும் லஸ் வேகஸிலும் ஓர் இரவில் செலவளிக்கும் பணத்தில் பலஸ்த்தீனியர்களுக்கு பெரும் நிவாரணம் தேடித்தர முடியும்.

2014 ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் புனித ரம்ழான் வேளையில் இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் அப்பாவி பலஸ்த்தீனியர்களைக் கொன்றும் அவர்களது வாழ்வாதாரங்களை   அழித்தும் கொண்டிருக்கையில் மற்ற அரபு நாடுகள் ஒரு சில நிவாரணப் பொருட்களை மட்டுமே அனுப்பின.

காத்திரமான இராஜதந்திர நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. ஒரு பிரபல பலஸ்த்தீனிய கருத்துப் பட வரைஞர் பலஸ்த்தினத்தை ஒரு  பெண்ணாகச் சித்தரித்து அப்பெண்ணை   இஸ்ரேல்  நெஞ்சில் கத்தியால் குத்துவது போலவும் அரபு நாடுகள் அப்பெண்ணிற்கு முதுகில் குத்துவது போலவும் வரைந்திருந்தார்.

அரபு நாடுகள் கடந்த மூன்று ஹமாஸ்-இஸ்ரேலிய மோதல்களின் போதும் மௌனத்தையே கடைப்பிடித்தன. பலஸ்த்தீன அறிஞர்கள் சபை இந்த மௌனத்தைக் கடுமையான வார்த்தைகள் உள்ளடக்கிய அறிக்கையால் கண்டித்தது.

pg-4-gaza-1-epa

மோதல் நிலைகள் முஸ்லிம்களிடை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் பலஸ்த்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை முஸ்லிம்களால் தடுக்க முடியாமல்லிருக்கின்றது.

– Vel Tharma –

shia-sunni

About Author

admin

admin

Related Articles

1 Comment

 1. ravi
  ravi August 21, 21:25

  நூறு பன்றிகள் இருந்தாலும் ஒரு சிங்கத்துடன் (இஸ்ரேல் ) மோத முடியாது.

  ஜப்பான் , கொரியாவில் இந்த சமயம் இல்லை அதனால் அங்கு அமைதி நிலவுகின்றது .

  *** Antispam disabled. Check access key in CleanTalk plugin options. Request number 90fd50f8c5e60bd1b9012037afc0dc46. Antispam service cleantalk.org. ***

  Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com