ilakkiyainfo

பிரபாகரனும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும்

பிரபாகரனும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும்
May 23
13:44 2020

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்துடன் ஒரு பதிவை இட்டிருந்தார்.

இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த இராஜதந்திரியாக இருந்த பூரி, ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

கடைசியாக இவர், இராஜதந்திரப் பதவியில், ஐ.நாவுக்கான இந்திய தூதுவராக பணியாற்றியிருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி அவர், சுமார், 33 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட ஒரு படத்துடன், பதிவு ஒன்றை வெளியிட்டதன் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

 

“1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கான முதல் நிலைச் செயலாளராக பணியாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக் கூறி, புதுடெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன்.

வல்வெட்டித்துறையில் இருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டரில், பிரபாகரனுடன் பயணம் செய்து, முதலில் தமிழக முதல்வர் எம்ஜிஆரை சந்தித்ததுடன், அதனையடுத்து, புதுடெல்லிக்கு சென்றோம்.

தொடர்ந்து அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்த போதிலும், இனப் பிளவுகளை தூண்டுவதற்கு இரு பக்கங்களிலும், ஆட்கள் இருந்தனர்.

 

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி வெடித்த மோதலில் பிரபாகரன் இறந்து விட்டார்” என்று ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டது போல, பிரபாகரனுடன், அவர் ஹெலிகொப்டர் பயணத்தை ஆரம்பித்தது வல்வெட்டித்துறையில் இருந்து அல்ல. அப்போது வல்வெட்டித்துறை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கவில்லை.

ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர், வல்வெட்டித்துறையை உள்ளடக்கிய வடமராட்சிப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றி வைத்திருந்தனர்.

அந்த நடவடிக்கைக்குப் பின்னர் தான், இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பேச்சுக்களை தீவிரப்படுத்தியது. அத்துடன், விடுதலைப் புலிகளுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்தது.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதல் நிலைச் செயலராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த- இளம் இராஜதந்திரியான, ஹர்தீப் சிங் பூரியும், இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் குப்தாவும், 1987 ஜூலை 19ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் வந்து – விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர்.

அந்தப் பேச்சுக்களில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன், மாத்தயா, குமரப்பா, ஜொனி, சங்கர், யோகி, திலீபன் உள்ளிட்ட புலிகளின் மூத்த தளபதிகள், போராளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இந்திய அரசாங்கத்தின் இராஜதந்திரி ஒருவர், அதிகாரபூர்வமாக சந்தித்து பேசிய முதல் சந்தர்ப்பம் அதுவே.

அதற்குப் பின்னர், மீண்டும் ஜூலை 23ஆம் திகதி ஹர்தீப் சிங் பூரியும், கப்டன் குப்தாவும், மீண்டும் யாழ்ப்பாணம் வந்து, பிரபாகரனைச் சந்தித்தனர்

அப்போது, புதுடெல்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் அழைப்பை பிரபாகரனிடம் அவர்கள் நேரிலேயே கையளித்தனர்.

 

அதையடுத்து மறுநாள், 24ஆம் திகதி காலை 10.25 மணியளவில், இந்திய விமானப்படையின் இரண்டு எம்.ஐ -17 ஹெலிகொப்டர்கள் சுதுமலை அம்மன் கோவில் பகுதியில் தரையிறங்கின.

அவற்றில், Z 2903 இலக்கமுடைய, ஹெலிகொப்டரில், பிரபாகரனை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் பூரி. பிரபாகரனுடன் அவரது மனைவி மதிவதனி, பிள்ளைகளான சாள்ஸ் அன்ரனி, துவாரகா, யோகி, திலீபன், கடாபி, ரொபேர்ட், இம்ரான் ஆகியோரும், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

 

இந்தியா புறப்படுவதற்கு முன்னர் பிரபாகரன் புலிகள் இயக்கத்தின் பதில் தலைவராக மாத்தயா செயற்படுவார் என்று அறிவித்து விட்டுச் சென்றார். திருச்சியில் ஹெலிகள் தரையிறங்கியதை அடுத்து அங்கிருந்து விமானம் மூலம், சென்னைக்கு சென்ற தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரைச் சந்தித்து விட்டு, அன்ரன் பாலசிங்கம் மற்றும் கிட்டு ஆகியோருடன் , புதுடெல்லிக்கு பிரபாகரனை அழைத்துச் சென்றிருந்தார் பூரி.

விடுதலைப் புலிகளுடன் முதல் கட்ட தொடர்புகளை ஏற்படுத்தி, பிரபாகரனின் புதுடெல்லிப் பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் ஹர்தீப் சிங் பூரியின் பங்கு காத்திரமானது.

அவர் பிரபாகரனுடன் நடத்திய பேச்சுக்களின் போது, அமைதி முயற்சிக்கு இணங்கும்படி கேட்டிருந்தார். ஆனால், புதுடெல்லிக்குச் சென்ற பின்னர், அவரை விட உயர்ந்த பதவி நிலையில் இருந்த அதிகாரிகளே பிரபாகரனுடன் பேசினர். அந்த விவகாரங்களைக் கையாண்டனர். அந்தப் பேச்சுக்கள் இறுக்கமாக மாற, பிரபாகரன் இந்திய -இலங்கை உடன்பாட்டை ஏற்க மறுத்தார்.

 

புதுடெல்லியில் உள்ள விடுதியில் பிரபாகரனை அடைத்து வைத்து விட்டு, கொழும்பில் வந்து உடன்பாட்டில் கையெழுத்திட்டு விட்டு சென்றார். இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி.

உடன்பாட்டுக்கு இணங்க மறுத்த பிரபாகரனை இந்தியா அடைத்து வைத்திருந்து- ஒரு வாரத்துக்குப் பின்னரே யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து இறங்கியது, பிரபாகரனுடன் பேச்சுக்களை நடத்திய அமைதியை ஏற்படுத்த முயன்றதாக பூரி தனது பதிவில் கூறியிருந்தாலும், அந்தப் பதிவுகளில் அவர் பிரபாகரன் குறித்து புகழ்ந்துரைக்கவும் இல்லை. அதேவேளை, இழிவுபடுத்தவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

பூரியின் ஏற்பாட்டில் பிரபாகரன் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற போது, அந்தப் பயணம் ஒரு மாபெரும் வெற்றியாகவே இலங்கையில் பார்க்கப்பட்டது.

ஆனால், அங்கிருந்து திரும்பும் போது அவ்வாறானதொரு நிலை இருக்கவில்லை. அந்தப் பயணம் தான், பல வரலாற்று நிகழ்வுகளுக்கு காரணமாக மாறியது. புதுடெல்லியில் தன்னை அடைத்து வைத்து மிரட்டியதற்காக ராஜீவ் காந்திக்கு பாடம் கற்பிப்பேன் என்று தளபதி கிட்டுவிடம், புலிகளின் தலைவர் பிரபாகரன் தொலைபேசியில் கூறியதாக பின்னர் தகவல்கள் வெளியாகின.

அதன் தொடர்ச்சியாகத் தான், 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்குப் பன்னர், புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் இருந்து வந்த ஆதரவுத் தளம் உடைந்து போனது.

இலங்கைப் பிரச்சினையில் இருந்து இந்தியா விலகிச் சென்றது. கடைசியில் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கான எல்லா உதவிகளையும் இந்தியா செய்தது.

அதனையெல்லாம் ஹர்தீப் சிங் பூரி தனது பதிவுகளில் கூறவில்லை. பிரபாகரனுடன் அதிகாரபூர்வ தொடர்பை ஏற்படுத்திய முதல் வெளிநாட்டு பிரதிநிதி என்ற அந்தஸ்தைக் கொண்டிருக்கும் பூரிக்கு, 33 ஆண்டுகளுக்குப் பின்னர், மே 18ஆம் திகதி பிரபாகரனின் நினைவுகள் மீண்டும் வந்திருக்கிறது.

அதுவும் பிரபாகரனின் மரணம் நிகழ்ந்த நாளுக்கு முந்திய நாள் அது. இந்தப் பதிவில் அவர் பிரபாகரன் அமைதியைக் குழப்பி விட்டார் என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பூரி அறிந்திருப்பார்.

1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் பூரி பிரபாகரனைச் சந்தித்திருக்கவில்லை. ஆனால் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் அவரைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

நோர்வேயின் அமைச்சர்கள், அதிகாரிகள், வேறு பல நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் பிரபாகரனுடன் சந்திப்புகளை நடத்தியிருந்தனர்.

 

ஆனால், பிரபாகரனுடன் பூரி நடத்திய கலந்துரையாடல் அளவுக்கு அவர்கள் நெருக்கமான கலந்துரையாடல்களை நடத்தவில்லை என்றே கூறலாம்.

அதனால் தானோ என்னவோ, பிரபாகரனுடனான சந்திப்பு, வேறு எந்த வெளிநாட்டு இராஜதந்திரிக்கும் நினைவில் வரவில்லை. மாறாக, ஹர்தீப் சிங் பூரி 33 ஆண்டுகளுக்குப் பின்னரும், பிரபாகரனுடனான தொடர்பை தனது டுவிட்டர் பதிவுகள் மூலம், வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

 

இந்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டே அவர் இந்தப் பதிவை இட்டிருப்பது தான் முக்கியம். இதன்மூலம், பிரபாகரனை அவர் மரியாதையுடன் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com