பெரும்பாலானோருக்கு இறக்கும் வரையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாது – மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது மரணிக்கும் வரையில் தெரியாது என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இதனால் கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்குச் சென்று அது தொடர்பிலான சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்வது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வீடுகளில் இறப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.
இந்த கொரோனா நோய் விசேடமாக நுரையீரலில் ஏற்படுகிறது. நுரையீரலில் இந்த தொற்று ஏற்பட்டு சிலவேளைகளில் அதற்கான அறிகுறிகள் உங்கள் உடம்பில் காணக்கூடியதாக இருக்காது.
இந்த நோயினால் பயங்கரமான நிலைமையில் இருக்கின்றீர்களா? என்பது குறித்து கண்டறிவதற்கு வழியுண்டு. பொதுவாக ஒருவர் உடலில் இரத்தத்தில் ஒட்சிசனின் அளவு 95வீதத்துக்கு மேற்பட்டதாக இருக்கும்.
நுரையீரலில் இந்த தொற்று நோய் ஏற்பட்ட பின்னர் உடம்பில் பரவும்போது உடலில் ஒட்சிசனின் அளவு 93 வீதமாக குறைவடையும். இதனால் ஒட்சிசன் அளவை பரிசோதித்து அறிந்து கொண்டால் இந்த நோயை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். சிகிச்சை உண்டு.
நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்லாமல் இருந்தால் சிலவேளைகளில் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அல்லது வேறேதும் நோய்தொற்றாளராக இருந்தாலும் விசேடமாக தொற்றா நோயை எதிர்க்கொண்டிருந்தால் ஆரம்பத்திலேயே இந்த நோயை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும்.
சில வேளைகளில் மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சுவாசிப்பதில் சிரமம் போன்ற நிலைமைகளின் போது வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக நோய் அறிகுறிகளை சரியாக புரிந்து செயற்பட வேண்டும்.
நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிகிச்சைக்காக வைத்தியசாலைகள் அல்லது வைத்தியசாலை போன்று நாம் தயார்படுத்தியுள்ள இடங்களில் இரண்டு நாளைக்கு ஒருமுறை ஒட்சிசனின் அளவை பரிசோதித்து பார்ப்போம்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒட்சிசனின் அளவு குறைவதாக நாம் கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சையினை மேற்கொள்வதன் மூலம் இந்த நோய் அதிகரிப்பை எம்மால் தடுக்க முடியும்” என்றும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment