ilakkiyainfo

விளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்?

விளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்?
June 24
17:43 2020

“புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது.” ரஷ்யா அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில் அதிகாரத்தைக் கையாளும் பொறுப்புக்கு விளாதிமிர் புதினை தேர்ந்தெடுத்து வரும் பல மில்லியன் ரஷ்யர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது.

இந்த நம்பிக்கை ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், மேலும் இரண்டு முறை தலா ஆறாண்டு காலம் பதவி வகிக்கும் வகையிலான சட்ட திருத்தத்திற்கான நாடுதழுவிய கருத்தறியும் வாக்கெடுப்பில் அது வெளிப்படும் என்று தெரிகிறது.

67 வயதாகும் புதின் 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று மறுத்துவிடவில்லை. அவருடைய இப்போதைய பதவிக் காலம் அப்போது நிறைவு பெறவுள்ளது.

இந்த சட்ட திருத்தம் நிறைவேறினால், 2036 வரையில் அவர் பதவியில் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

நாஜிக்களின் ஜெர்மனியை கைப்பற்றி, ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் 75வது ஆண்டு நினைவை ஒட்டி, நடைபெறும் வெற்றி தினம் தேதி மாற்றப்பட்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடந்து முடிந்த மறுநாள் கருத்துக் கணிப்புக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

திட்டமிட்டிருந்ததைவிட ஒரு வாரம் முன்னதாகவே விழா நடைபெறுகிறது. அப்போது பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் இருக்கும்.

தலைநகரில் முடக்கநிலை முடிவுறும் தறுவாயில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, வாக்கெடுப்பில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கருத்தறியும் வாக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும்?

அரசியல்சாசனத்தைத் திருத்துவதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தும் யோசனையை 2020 ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முன்வைத்தார்.

அதிபர் பதவியில் இருப்பவர் மேலும் இரண்டு முறை தலா ஆறு ஆண்டு காலம் அப் பதவி வகிப்பதற்கான வாய்ப்பு குறித்து வாக்கெடுப்பு என்பதும் அதன் முக்கிய விஷயங்களில் ஒன்றாக இருந்தது.

அந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பு ஏப்ரல் 22 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, இப்போது ஜூலை 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

சமூக இடைவெளி பராமரித்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வாக்கெடுப்பு ரஷ்யா முழுக்க 5 நாட்களில் நடைபெறும். இப்போது கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளிலும் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வாக்குப் பதிவு மையத்தில் எத்தனை பேர் நுழையலாம் என்பதற்கான வரையறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. மாஸ்கோ போன்ற சில பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு நடைமுறைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

புதினின் திட்டம் என்ன?

ரஷ்யாவின் 21 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களைப் பொருத்த வரையில் விளாதிமிர் புதினை மட்டுமே உயர் அதிகாரம் கொண்டவராகப் பார்த்திருக்கிறார்கள்.

1999 ஆம் ஆண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட அவர், அதிபராக (2000 – 2008), பிரதமராக (2008-2012), மீண்டும் அதிபராக (2012)ல் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்து வருகிறார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அதிபர் புதின் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும், அதற்கான வாய்ப்பு இல்லை என இதுவரையில் அவர் மறுக்கவில்லை.

அதனால், வாழ்நாள் முழுக்க, அல்லது குறைந்தபட்சம் 2036 வரையில் அதிகாரத்தில் இருப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொள்கிறார் என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னாள் விண்வெளி வீராங்கனையும், நாடாளுமன்ற உறுப்பினரும், புதினின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவருமான வேலன்டினா டெரெஷ்கோவா ஏற்கெனவே இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அதிபர் பதவிக்கான கால வரம்புகளை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

புதினே தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கான ஏற்பாடாக இது கருதப்படுகிறது. இதற்கு மக்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது – 2018ல் கடைசியாக அவர் தேர்தலை சந்தித்தபோது, 76 சதவீத வாக்குகளுடன் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.

இந்த முறை “இந்த முன்மொழிவை ஏற்பதில் அவர் அதிக தயக்கம் காட்டினார். `கீழ் மட்டத்தில்’ இருந்து உருவான கோரிக்கை என்பதாக இது அமைந்துள்ளது” என்று பிபிசி மாஸ்கோ செய்தியாளர் சாரா ரெயின்ஸ்போர்டு தெரிவிக்கிறார்.


 ரஷ்யாவின் இவானோவோ பாராசூட் தொழிற்சாலையைப் பார்வையிட்டபோது சோவியத் ஒன்றியத் தலைவர்களான லெனின், ஸ்டாலின் ஆகியோர் படங்களைத் தாங்கிய கொடியைப் பார்க்கும் புதின்.

அதிபரை மாற்றக் கூடிய அளவுக்கு, போதிய வளர்ச்சியை மாஸ்கோ இன்னும் எட்டிவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பலருக்கும் அதில் பிரச்சினை ஏதும் இருக்காது. உண்மையில் அவர்களுக்கு திரு. புதினை பிடிக்காது என்றால் அதுபற்றி கவலைப்படுவது கிடயாது.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவை நிமிர்ந்து நிற்கச் செய்யும் வலுவான தலைவராக புதினை ஏராளமானவர்கள் பார்க்கிறார்கள்.

வேறு மாற்று இல்லை என்பது போன்ற பேச்சுகள் சாதாரணமாகக் காணப்படுகின்றன” என்கிறார் ரெயின்ஸ்போர்டு.

தவிர்க்க முடியாதவராக புதின் உருவானது எப்படி?

கம்யூனிச சித்தாந்தத்திற்கும், மேற்கத்திய நாடுகளுக்குமான மறைமுகமான போர் தான் விளாதிமிர் புதின் பதவியில் நிலைபெற்ற காலமாக உள்ளது.

1989 புரட்சியின் போது அவர் டிரெஸ்டெனில் கே.ஜி.பி உளவுப் பிரிவின் அலுவலராக இருந்தார். அப்போது அது கம்யூனிஸ கிழக்கு ஜெர்மனியாக இருந்தது.

பெரிய அளவிலான போராட்டங்களால் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு, இரும்புத் திரை விலகியது, சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பு சிதைந்து பல நாடுகளாகப் பிரிந்த நிலையில் மாஸ்கோவில் தலைமைப் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடம் ஆகியவை அவரிடம் பெரிய மாற்றங்களை உருவாக்கின.

ட்ரெஸ்டெனில் கே.ஜி.பி. தலைமையகத்தை போராட்டக்காரர்கள் 1989 டிசம்பரில் முற்றுகையிட்ட போது உதவி கோரியது, மாஸ்கோவில் பதவியில் இருந்த மிகையீல் கோர்பச்சேவ் “அமைதியாக இருந்தது” குறித்து புதின் விவரித்திருக்கிறார்.

சர்ச்சைக்குரிய அறிக்கைகளை அழிக்கும் முயற்சிகளை தாமாகவே அவர் முன்னெடுத்துக் கொண்டார். “அடுப்பே வெடித்துவிடும் அளவுக்கான ஆவணங்களை நாங்கள் தீயில் போட்டு எரித்தோம்” என்று First Person என்ற நேர்காணல்களின் புத்தகத்தில் பிற்காலத்தில் புதின் நினைவுகூர்ந்துள்ளார்.

“புதின் கிழக்கு ஜெர்மனிக்குப் போகாமல் இருந்திருந்தால், வேறு மாதிரியான புதினையும், வேறு மாதிரியான ரஷ்யாவையும் தான் நாம் பார்த்திருப்போம்” என்று புதினின் ஜெர்மானிய வாழ்க்கைக் குறிப்பு எழுத்தாளரான போரிஸ் ரெய்ட்ஸ்ச்சஸ்டர் கூறியுள்ளார்.

அதிகாரத்தை நோக்கிய முன்னெடுப்பு

சொந்த ஊரான லெனின்கிராடு (பின்னாளில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் என்ற முந்தைய பெயரிடப்பட்டது.) நகருக்கு திரும்பிய பிறகு, ஒரே நாளில் புதிய மேயர் அனடோலி சோப்சாக் -இன் வலது கரமாக புதின் மாறினார்.

 போரிஸ் எல்ட்சினுடன் புதின்

கலைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனியில், தனிப்பட்ட நபர்களுடன் புதினுக்கு தொடர்பு இருந்தது. அவர்களுக்கு அங்கு செயல்பாடுகளுக்கான வாய்ப்பு இல்லை எனறாலும், புதிய ரஷ்யாவில் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் அவர்கள் இருந்தனர்.

அப்போதிருந்து புதினின் பாதை மேல் நோக்கியே சென்றது. சோப்சாக் எதிர்பாராமல் சரிவை சந்தித்த போதிலும் புதின் மட்டும் தாக்குபிடித்தார். புதிய ரஷ்யாவின் மேல்தட்டு வர்க்கத்தினருடன் வெற்றிகரமாக அவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

அந்த சமயத்தில் ரஷ்யக் கூட்டமைப்பின் புதிய அதிபராக போரிஸ் யெல்ட்சின் இருந்தார். பழைய கம்யூனிஸ்ட் கட்சியை அவருடைய ஆட்சி நிர்வாகம் தள்ளியே வைத்திருந்தது.

பணக்காரர்களுடன் ஏற்பட்ட கூட்டணி காரணமாக, ஆட்சி மாற்றத்தின் இடைப்பட்ட காலத்தில் சொத்து மற்றும் செல்வாக்கு ஈட்டிக் கொள்ள முயல்பவர்களின் கூட்டணி காரணமாக அந்தச் சூழ்நிலை ஏற்பட்டது.

போரிஸ் பெரெஜோவ்ஸ்கி போன்ற தொழிலதிபர்கள் யெல்ட்சினின் ஆதரவாளர்களாக மாறினர். ரஷ்யாவில் தேர்தல்கள் வந்த போது, மக்கள் மத்தியில் கருத்துகளை உருவாக்கும் சக்திமிக்கவராக அவர் மாறினார்.

1999 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் பிரதமராக புதினை அதிபர் போரிஸ் யெல்ட்சின் நியமித்தார்.

அதிசயமாகக் கிடைத்த அதிபர் பதவி

யெல்ட்சினின் அணுகுமுறைகளில் தவறுகள் அதிகரித்தது. கடைசியில் திடீரென 1999 டிசம்பர் 31 ஆம் தேதி அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

பெரெஜோவ்ஸ்கி மற்றும் இதர முக்கிய பணக்காரர்களின் ஆதரவைப் பெற்ற புதின், மிகச் சரியாக தன்னையே தற்காலிக அதிபராக உருவாக்கிக் கொண்டார். பிறகு 2000 மார்ச்சில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமான தேர்தலில் அதை தக்கவைத்துக் கொண்டார்.

யெல்ட்சினின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளுக்கு புதிய அதிபரை பிடித்துப் போனது.

மக்களுடன் கலந்து பழகக் கூடியவர், தெளிவற்ற நிலையில் இருந்து மீட்கக் கூடியவர், வளைந்து கொடுப்பார் என்ற நம்பகத்தன்மை ஆகியவை அதற்குக் காரணங்களாக இருந்தன.

 

ஆனால் ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஊடகங்களை புதின் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இது பணக்காரர்களையும், கிரெம்ளின் மாளிகையையும் திகைப்பில் ஆழ்த்திய முக்கியமான நிலை மாற்றமாகக் கருதப்படுகிறது.

என்.டி.வி. (NTV) என்ற சுதந்திரமான தொலைக்காட்சி சேனல் மூடப்பட்டது. மற்ற ஊடக நிறுவனங்களில் சோதனைகள் நடைபெற்றன. செய்தி அறிக்கைகளை அரசு தணிக்கை செய்தது.

புதினின் ஆளும் போக்கின் தன்மையைக் காட்டுபவையாக அவை இருந்தன.

அதிருப்தியை அழித்தல்

ஊடகங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் புதிய அதிபருக்கு இரண்டு ஆதாயங்கள் கிடைத்தன.

செல்வாக்கு மிகுந்த பொறுப்புகளில் இருந்து, அதிகார பலம் வாய்ந்த விமர்சகர்களை நீக்க முடிந்தது. செச்சென் போர் முதல் மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல் வரையிலான தகவல்களை ஒழுங்கமைவு செய்ய முடிந்தது.

அது அதிபர் மீதான நன்மதிப்பை அதிகரிக்கச் செய்தது. புதிய ரஷ்யா மற்றும் அதன் தலைவருக்கு உலக அரங்கில் செல்வாக்கு அதிகரித்தது. அரசுக்குப் புதிய எதிரிகள் யார் என்பதை வரையறுக்க உதவிகரமாக இந்த நடவடிக்கைகள் உதவின.

அப்போதிருந்து, ரஷ்யர்கள் எதைப் பார்க்க வேண்டும் என புதின் விரும்புகிறாரோ அவற்றை மட்டுமே பார்த்து வருகிறார்கள்.

ரஷ்யாவில் உள்ள சுமார் 3,000 தொலைக்காட்சி சேனல்களில், பெரும்பாலானவற்றில் செய்திகளே கிடையாது. அரசியல் நிகழ்வுகள் ஏதும் நடந்தால், அந்தச் செய்திகளை அரசு தீவிரமாக தணிக்கை செய்யும்.

என்னுடன் மோதிப் பார்க்க வேண்டாம் மாகாணங்களுக்கான செய்தி

நம்பகமான அரசியல் தலைவர்களை கவர்னர்களாக நியமித்து ரஷ்யாவின் 83 பிராந்தியங்களையும் புதின் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

கவர்னர் பதவிக்கு பிராந்திய அளவில் தேர்தல் நடத்தும் நடைமுறையை 2004ல் அவர் ரத்து செய்தார். அதற்குப் பதிலாக பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் அடுத்த கவர்னராக தேர்வு செய்வதற்கான 3 பேரின் பட்டியலை உருவாக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார்.

`ஜனநாயக முறையை ரத்து செய்கிறார்’ என்று புதின் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், அதற்கு நல்ல பலன் கிடைத்தது. குறிப்பாக செச்சன்யா போன்ற பிராந்தியங்களில் நல்ல பலன் வந்தது.

ஜனநாயக நடைமுறைக்கு ஆதரவான போராட்டங்கள் காரணமாக 2012ல் பிராந்திய தேர்தல்கள் திரும்பவும் கொண்டு வரப்பட்டன. ஆனால் 2013 ஏப்ரலில் புதிய கட்டுப்பாட்டு சட்டம் அறிமுகம் செய்ததை அடுத்து புதினின் நேரடி கட்டுப்பாட்டில் அவை கொண்டு வரப்பட்டன.

தாராளவாதம் மீது காதல், பெயரளவில் மட்டுமே

மாஸ்கோவில் போலோட்னயா போராட்டங்கள் மற்றும் ரஷ்யாவின் பல பகுதிகளில் 2011 முதல் 2013 வரையில் பல போராட்டங்கள் நடைபெற்றன. நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் வேண்டும் என்பவையே போராட்டங்களின் முக்கிய அம்சங்களாக இருந்தன.


1990களுக்குப் பிறகு ரஷ்யாவில் நடந்த மிகப் பெரிய போராட்டங்களாக அவை இருந்தன.

பக்கத்து நாடுகளிலும் அப்போது போராட்டங்கள் உருவாகி 1989 காலத்தை நினைவுபடுத்தின.

பின்வாசல் வழியாக ரஷ்யாவை ஆக்கிரமிக்க மேற்கத்திய நாடுகள் செய்யும் சதியாக இந்தப் போராட்டங்கள் இருக்கின்றன என்று புதின் கருதினார்.

அணுகுமுறையில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. வெளித் தோற்றத்திற்கு அது தேவைப்பட்டது. தாராளவாதப் பரிசோதனையை சில காலத்துக்கு புதின் மேற்கொண்டார்.

அதிகாரப் பகிர்வை செய்வதாகவும், மாகாணங்களுக்கு அவற்றின் பொருளாதாரத்தில் அதிகக் கட்டுப்பாடு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் புதின் அளித்தார்.

அந்த காலக்கட்டத்தில் அவருடைய உரைகளில் சீர்திருத்தம் என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்தினார். ஆனால் சில காலம் மட்டுமே அது நீடித்தது. அச்சுறுத்தல் விலகியதும், அந்த அணுகுமுறை கைவிடப்பட்டது.

கிரீமியா விவகாரத்தில் பலத்தை வெளிக்காட்டியது

உக்ரேனில் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் அதிகாரத்தில் ஏற்பட்ட வெற்றிடம், புதின் தந்திரமாக நடவடிக்கை எடுக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்தது.

2014 பிப்ரவரியில் திடீரென கிரீமியாவை கைப்பற்றியது தான் இதுவரை புதின் பெற்றதிலேயே மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தோல்வியாக அது அமைந்துவிட்டது.

அருகாமை நாட்டை பிடித்துக் கொள்வதில் ரஷ்யா தனது பலத்தை காட்டியது. உலகம் அதைப் பார்க்க மட்டுமே முடிந்தது. அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்ய முடியவில்லை.

ரஷ்யா தனது பாதையை உருவாக்கிக் கொள்ள (மறைமுகப் போர் காலத்தில் இருந்ததைப் போன்ற) வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை புதின் புரிந்து கொண்டிருக்கிறார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

மேற்கத்திய நாடுகள் மற்றும் நேட்டோ அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவுக்கு போதிய அதிகாரம் புதினுக்கு வந்த பிறகு, மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யாவின் உறவின் தன்மையை உருவாக்குவதை நிர்ணயிக்கத் தொடங்கினார்.

கிரீமியா தான் ரஷ்யாவின் மிகப் பெரிய வெற்றி. ஆனால் அது மட்டும் தனி சம்பவம் கிடையாது.

பல தசாப்தங்களாக “அருகில் உள்ள வெளிநாட்டை” பிடித்துக் கொண்டு அரசியல் அதிகாரத்தை விஸ்தரித்துக் கொண்டு தான் வருகிறது.

சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பு சிதைந்த பிறகு உருவான சுதந்திர மாகாணங்கள், தங்களின் இயல்பான செல்வாக்கு உள்ளதாக ரஷ்யா கருதும் பகுதிகள் ஜார்ஜியா பிரச்சினையில் கிடைத்த வெற்றி (2008) ஆகியவற்றைச் சொல்லலாம்.

மேற்கு நாடுகளின் பலவீனமான புள்ளியான சிரியாவை பலமாக்கிக் கொண்டது

வெளிநாட்டு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ஒருமித்த செயல்பாடு இல்லாத பலவீனத்தை, தனக்குச் சாதகமாக புதின் பயன்படுத்திக் கொண்டார்.

சிரியா விவகாரத்தில் புதின் தலையிட்டு ஆசாத் ஆதரவுப் படையினரை ஆதரித்தது அவருக்கு பல ஆதாயங்களைக் கொடுத்தது.

மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதில் முக்கியத்துவமான அந்த எல்லைப் பகுதியை யாருமே முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாத நிலைமை உருவாகிவிட்டது என்பது முதலாவது ஆதாயம்.

புதிய ஆயுதங்கள் மற்றும் ராணுவ தந்திரங்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பை அளிக்கும் களமாகவும் அது அமைந்துவிட்டது என்பது அடுத்த ஆதாயம். வரலாற்று ரீதியில் நட்புடன் உள்ளவர்களுக்கு பலமான தகவலை தெரிவிப்பதாக அது அமைந்தது.

`அருகில் உள்ள வெளிநாடு’ என்ற நிலையில் இருப்பவர்களுக்கு முக்கிய தகவலை அது அளித்தது. பழைய நண்பர்களை ரஷ்யா விட்டுவிடாது என்பதே அந்தத் தகவலாக இருந்தது.

ரஷ்யாவின் புதிய ஜார் மன்னரா?

தன்னுடைய ஆட்சிக் காலத்தில், `ரஷ்ய நிலப் பகுதிகளை ஒன்று சேர்ப்பது’ என்ற பழைய சித்தாந்தத்தை புதின் வெற்றிகரமாக தட்டி எழுப்பியுள்ளார்.

ரஷ்யாவின் ஆட்சிப் பகுதி வரம்பை விரிவாக்கம் செய்வதை நியாயப்படுத்தும் கொள்கையாக அது உள்ளது.

 ஜார் மன்னர்களின் குளிர்கால அரண்மனை.

இந்தப் பின்னணியில் கிரீமியா மற்றும் “அருகாமை வெளிநாடு” என்பவை அவருக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதை அறிந்து கொள்வது எளிது.

நவீன கால ஜார் மன்னரை உருவாக்குவதற்கு இது வழி வகுப்பதாக இருக்கும் என்று ஆர்க்காடி ஓஸ்ட்ரோவ்ஸ்கி போன்ற ரஷ்ய பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தனித்துவமான ரஷ்ய தலைவராக புதின் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சொல்லப் போனால், கடந்த தேர்தலில் அரசியல் சார்பின்றி, சுயேச்சை வேட்பாளராகத்தான் புதின் தேர்தலை சந்தித்தார்.

இப்போது ரஷ்யாவில் புதினின் நிலை, அசைக்க முடியாததாக உள்ளது. ஆனால் 2024ல் அவருடைய பதவிக் காலம் முடிந்த பிறகு என்ன நடக்கும்?

எதிர்காலத்தை யாராலும் கணித்துவிட முடியாது. ஆனால் விளாதிமிர் புதினால் ஒரு திட்டத்தை உருவாக்க முடியும்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com